Header Ads



'உலக அழகி போட்டியை தடை செய்ய வேண்டும்' - இந்தோனேசியா உலமா கவுன்சில்

இந்தோனேசியாவில், அடுத்த மாதம் நடைபெற உள்ள, உலக அழகி போட்டியை தடை செய்ய வேண்டும்' என, முஸ்லிம் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. இந்தோனேசியாவில், முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகம். அடுத்த மாதம், 28ம் தேதி, இங்குள்ள பாலித்தீவில், உலக அழகி போட்டி நடக்க உள்ளது. 137 பேர் இந்த போட்டியில் பங்கேற்கின்றனர். கடந்த ஆண்டு, பாப் இசை பாடகி, காகாவின் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. "அரை குறை ஆடையுடன் நடனமாடும் காகாவின் இசை நிகழ்ச்சி நடந்தால், அந்த மேடையை தீயிட்டு கொளுத்துவோம்' என, முஸ்லிம்கள் எச்சரித்ததால், இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. உலக அழகி நடக்கும் போதெல்லாம், அதில் ஒரு பிரிவான, நீச்சல் உடைக்கான போட்டியும் நடக்கும். ""முஸ்லிம்களின் எதிர்ப்பு அதிகம் உள்ளதால், இந்த முறை நீச்சல் உடை பிரிவுக்கான நிகழ்ச்சி நடக்காது,'' என, உலக அழகி போட்டியின் ஏற்பாட்டாளர் ஜூலியா மோர்லி, லண்டனில் தெரிவித்திருந்தார்.

இஸ்ரேல் நாட்டை, இந்தோனேசியா, பகை நாடாக கருதுவதால், இஸ்ரேல் அழகி, இந்த போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. "உலக அழகி போட்டி என்பது, பெண்களின் உடம்பை காண்பிக்கும் போட்டி; இது இஸ்லாமிய விதிக்கு முரணானது. எனவே, இந்த போட்டியை, இந்தோனேசியாவில் தடை விதிக்க வேண்டும்' என, உலமா கவுன்சில், அந்நாட்டு அரசிடம் வற்புறுத்தியுள்ளது. 

இதுகுறித்து உலமா கவுன்சில் தலைவர் அமீடன் ஷபீரா குறிப்பிடுகையில், ""இஸ்லாமிய சட்டத்தை கட்டாயமாக அமல்படுத்தும் உரிமை எங்களுக்கு இல்லை; எனவே, தான், இந்த "மிஸ் வேர்ல்டு' போட்டியை தடை செய்யும் படி, அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்,'' என்றார்.

No comments

Powered by Blogger.