முஸ்லிம் சமூகத்தின் தடுமாற்றம் என்னவென்றால்..
(ஏ.எல்.ஜுனைதீன்)
இந்த நாட்டில் அராபியர்களுக்கு இராயிரம் வருசத்து வரலாறும் முஸ்லிம்களுக்கு ஆயிரம் வருசத்து வரலாறும் உண்டு. இதற்கான தடயங்கள் இருக்கின்றன. தகவல்கள் இருக்கின்றன. ஆவணங்கள் இருக்கின்றன. ஆனால், எம்முடைய தடுமாற்றம் என்னவென்றால் நாம் அவைகளைத் தேடிப் போகவில்லை. அவைகளைப் பெறுவதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்ளவில்லை. என முஸ்லிம் சமய, பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் முன்னாள் இராஜாங்க செயலாளர் அல்-ஹாஜ் எஸ்.எச்.எம்.ஜெமீல் சாய்ந்தமருது- மாளிகைக்காடு பெரிய பள்ளிவாசல், மஹல்லாப் பள்ளிவாசல்கள், பொதுமக்கள் இணைவில் கடந்த (30.08.2013) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற முதுசங்கள் பாராட்டு விழாவில் உரை நிகழ்த்துகையில் தெரிவித்தார். சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிருவாக சபைத் தலைவர் அல்-ஹாஜ் வை.எம் ஹனிபா தலைமை வகித்த இவ்விழாவில் முன்னாள் இராஜாங்கச் செயலாளர் ஜெமீல் இங்கு தொடர்ந்து பேசுகையில் மேலும் தெரிவித்ததாவது,
கி.பி 150 வருடத்தின் உலக வரைபடத்தில் இலங்கையில் கிழக்குப் பிரதேசத்தில் இன்று அடையாளமிடப்படுகின்ற அறுகம்பைப் பிரதேசம் அன்று அராபியர்களின் வதிவிடமாக இருந்திருக்கிறது. 1297 ல் இருந்து 1397 வரை காலப் பகுதிக்கான பரவனிக் கல் வெட்டில் போர்த்துகீசர் வருகைக்கு முற்பட்ட காலத்தில் மீராலெவ்வைக் குடி என்று ஒரு குடி இருந்திருக்கிறது.
1602 ஆம் ஆண்டு முதலாவது இந்த நாட்டில் டச்சுக்காரர்கள் காலடி வைத்து இறங்கியது இந்த சாய்ந்தமருது கடற்கரையில். இதற்கு ஆவணங்கள் மட்டுமல்ல அவர்களோடு அந்த நேரம் இங்கு வருகை தந்த புகைப்பட பிடிப்பாளர் போன்ற மாதிரியுள்ள வரைபடக்காரன் டி. பிரைன் அதனை படமாகவே சித்தரித்திருக்கிறார்.
சாய்ந்தமருதிலிருந்து அவர்கள் சம்மாந்துறை போய் அரைவாசிப் பேர் சம்மாந்துறையில் தங்கியிருக்க மீதிப் பேர் கண்டிக்குப் போய் ஸ்ரீவிமலதர்மசூரியனைச் சந்தித்து அதன் பின்னர் மீண்டும் திரும்பி வந்து இங்கிருந்துதான் அவர்கள் சென்றுள்ளார்கள்.
பிரித்தானியர்கள் இந்த நாட்டைக் கைப்பற்றிய பொழுது அவர்களுக்கு எதிராகப் போரிட்ட கண்டிய மன்னனை ஆதரித்த குற்றத்திற்காக இப் பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு முஸ்லிம்களை எதிரிகளாக வர்த்தமானி மூலம் பிரித்தானியர்கள் பிரகடணம் செய்திருக்கிறார்கள். கல்முனையைச் சேர்ந்த மீராஉஸன் அபூபக்கர், உமர்லெவ்வை உதுமாலெவ்வை, மருதமுனையைச் சேர்ந்த அனீஸ்லெவ்வை, சம்மாந்துறையைச் சேர்ந்த அபூபக்கர் இஸ்ஸாக் முகாந்திரம் இந்த நால்வரும் எமது தேசப் பற்றாளர்களாக இருந்தும் பிரித்தானியர்களை எதிர்த்த காரணத்திற்காக அவர்கள் தேசத் துரோகிகளாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் தேசப் பக்தர்கள்.
சாய்ந்தமருதுக்கு ஒரு மிகப் பெரிய பாரம்பரியம் உண்டு.. 1871 ஆம் ஆண்டில் இந்நாட்டில் நடைபெற்ற முதலாவது குடிசன மதிப்பீட்டில் சாய்ந்தமருதில் இருந்த சனத் தொகை என்ன தெரியுமா? 842 குடும்பங்கள், 598 வீடுகள்.
கிழக்கு மாகாணத்தில் ஆகக்கூடிய சனத் தொகையைக் கொண்டிருந்த முஸ்லிம் கிராமம் அக்கறைப்பற்று ஆகும். இங்கு அன்று 932 குடும்பங்களும், 698 வீடுகளும் இருந்தன. ஆகக் குறைந்த சனத் தொகை கொண்ட கிராமம் இறக்காமம் ஆகும் இங்கு அன்று 70 குடும்பங்கள், 42 வீடுகள். அப்படியிருந்த நாம்தான் இன்று இப்படி வந்திருக்கின்றோம்.
எம்மிடத்தில் கல்வி இருக்கின்றது. அறிவு இருக்கின்றது ஆனால் ஞானம்தான் தேவைப்படுகின்றது. கல்வியை எல்லோரும் பெற்றிருக்கின்றோம். கல்வியினால் வருவது அறிவு கல்வி இல்லாமலும் அறிவு வர முடியும். தன்னுடைய கையொப்பத்தத்தையே வைக்க தெரியாத எத்தனையோ பேர் பெரும் பணக்காரர்களாக வர்த்தகத்தின் மூலம் வந்திருக்கிறார்கள். அது அவர்களின் அறிவு. ஆனால் ஞானம் என்பது மற்றவர்களுக்கு வழிகாட்டுவது. இதற்குத்தான் எங்களுக்கு இஸ்லாமிய அடிப்படை வேண்டும். குர்ஆன்,ஹதீஸ் அடிப்படையில் வாழ்பவர்களாக நாம் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும். குர்ஆன் அதன் மொழி அறபு மொழியாகும். எம் எல்லோருக்கும் கட்டாயம் அறபு மொழி தெரிந்திருத்தல் வேண்டும்.
19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்நாட்டில் அறிஞர் சித்திலெவ்வை தலைமையில் முஸ்லிம்களுக்கு என பாடசாலைகள் நிறுவப்பட்ட காலத்தில் ஆங்கில அரசாங்கமும் அதனை ஏற்றுக் கொண்டு முஹம்மதன் பாடசாலைகளை நிறுவியது. அவர்களுடைய வரைவிலக்கணப்படி முஹம்மதியப் பாடசாலைகள் என்றால் ஏனைய பாடங்களோடு இஸ்லாம், அறபு ஆகிய இரண்டு பாடங்களையும் கட்டாயமாகப் படிப்பிக்கின்ற பாடசாலைகள்தான் முஹம்மதியப் பாடசாலைகள். இதன் தொடராகத்தான் சேர் ராசீக் பரீத் போன்றவர்கள் இருநூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலைகளை நிறுவியபொழுது அது முஸ்லிம் பாடசாலைகள் என இஸ்லாமும் அறபும் கட்டாயம் போதிப்பதன் மூலம் வரையறுக்கப்பட்டது. இது முஸ்லிம்களால் இந்நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்தால் இன்று முஸ்லிம்களில் அறபு மொழி தெரிந்தவர்கள் ஏறக்குறைய எல்லோருமே இருந்திருப்பார்கள். ஆனால் இலங்கையிலுள்ள முஸ்லிம்களிடையே அறபு மொழியின் நிலை என்ன? பாருங்கள்.
2010 ஆம் ஆண்டு க.பொ.த (சாதாரண) தரப் பரீட்சையில் 25057 பேர் இஸ்லாம் பாடத்திற்கு தோற்றியிருக்கிறார்கள். ஆனால், 585 பேர்தான் அறபு மொழிப் பரீட்சைக்குத் தோற்றியிருக்கிறார்கள். இதுபோன்று க.பொ.த (உயர்தர) பரீட்சையில் 3800 பேர் இஸ்லாம் பாடத்திற்கு தோற்றியிருக்கிறார்கள். இதில் 187 பேர் மாத்திரமே அறபு மொழிக்கு தோற்றியிருக்கிறார்கள். இவ்வாறு முன்னாள் இராஜாங்க செயலாளர் எஸ்.எச்.எம்.ஜெமீல் தெரிவித்தார்.
useful news
ReplyDeleteஅதுக்கெல்லாம் எங்க sir நேரம்,
ReplyDeleteplease translate this to Sinhala and English ..I need to share this in facebook
ReplyDelete