Header Ads



'அலவக்கரை' - மீனவர் வாழ்வியலில் ஒரு சிறுகதை

(நவாஸ் சௌபி)

ஓட்டைக் குடிசை ஒழுக விழித்திரவில் 
நாட்டைக் கடந்தான். நடுக்கடலில் 
போட்ட
வலையை வலித்திழுத்தான்.
வந்ததோ பாசி!
.....

முற்றியுள்ள 
பொல்லாக் கடனால் பொருந்தா வகையில் தன் 
செல்வம் தனைக் களவு செல்லவிட்டு 
மெல்ல நடக்கின்றான் வீட்டுக்கு 
நாளும் உளத்தை 
ஒடிக்கின்ற ஏமாற்றத்தோடு.

இது மஹாகவி உருத்திரமூர்த்தியின் நீருழவன் கவிதையில் சில வரிகள். மீனவனின் வாழ்க்கையை சூழ்ந்துள்ள கடன் சுமையையும், கடலுடன் போராடும் அவனது முழு உழைப்பையும் யார் யாரே சுரண்டி பணம் பெறுகிறார்கள் என்பதையும் கவலையோடு நோக்கின்ற வகையில் இக்கவிதை முழுவதும் அமைந்திருக்கிறது.

மஹாகவியின் கவிதை போலவே அலவக்கரையும் மீனவக் குடும்பம் ஒன்றின் அவலக்கதையை படம் பிடித்திருக்கிறது. 

நோன்பு பெருநாள் தினத்தில் நேத்ரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் அலவக்கரை நாடகம், ரூபவாஹினியின் முஸ்லிம் நிகழ்ச்சிப் பிரிவின் தயாரிப்பாகும். முஸ்லிம் நிகழ்ச்சிப் பிரிவின் பணிப்பாளர் எம்.கே.எம். யூனுஸ் அவர்களின் மேற்பார்வையின் கீழ் தயாரிப்பாளர் மபாஹிர் மசூர் மௌலானா அலவக்கரை நாடகத்தின் இயக்குனராக செயற்பட்டு நெறியாள்கை செய்துள்ளார். உதவி இயக்குனர்களாக முபாறக் முஹிடீன் மற்றும் அசாரியா பேகம் ஆகியோர் செயற்பட்டனர். அலவக்கரையின் கதை, வசனம் நவாஸ் சௌபியின் எண்ணத்திலும் எழுத்திலும் உருவானது.

அலவக்கரை என்பது பேச்சு மொழிச் சொல் இதன் சரியான சொல் வடிவம் 'அலை வாய் கரை' என்பதாகும். கடல் மற்றும் குளங்களில் அலைகள் வந்து கரையைத் தொடுகின்ற இடமாக இது குறிப்பிடப்படுகிறது. சில இடங்களில் இதை 'அலவா கரை' என்றும் சொல்வர்கள் அதிகமானவர்கள் அலவக்கரை என்பதை சொல்வதை கருத்தில் கொண்டு நாடகத்திற்கு அச்சொல்லையே இட்டிருக்கிறோம். 

கடல்தொழில் புரிகின்ற மீனவர்களின் வாழ்வியல் பிரச்சினைகளில் ஒரு பகுதியை படம்பிடிப்பதாக இது அமைந்துள்ளதால், கடலின் அலவக்கரையை கருதுவதாக நாடகப் பெயர் கருத்துக் கொள்கிறது.  சதா அலை வந்து மோதிக் கொண்டிருப்பதை ஒரு சுமைதாங்கிபோல அலவக்கரை தாங்கிக் கொண்டிருப்பதைப் போல தினமும் பொருளாதார நெருக்கடிகளோடும் துயரங்களோடும் வாழும் மீனவர் குடும்பம் அலவக்கரை போல் சுமைதாங்குவதாக இப்பெயர் பொருந்துகிறது.  
கடலில் அலைமோதத் தாங்கும் அலவக்கரை கடனில் கவலை மோதத் தாங்கும் மீனவனின் அவலக்கதை என்பதுதான் அலவக்கரையின் கதை. இதை அர்த்தப்படுத்தும் ஆரம்ப பாடல்வரிகள் இப்படி எழுதப்பட்டுள்ளது. 

கடலில் கொந்தளிக்கும் அலைகளுக்கு 
அன்னைமடிதானே அலவக்கரை
கடலில் தத்தளிக்கும் தோணிகளை
அரவணைக்கும் அலவக்கரை... 
ஏலேலம்மா ஏலேலோ.. ஏலேலம்மா ஏலேலோ..

அலைகளின் கால்கள் உதைத்தாலும் 
தாங்கிக்கொள்ளும் அலவக்கரை 
அலையோடு விளையாடி நுரை பூசும் அலவக்கரை..
ஏலேலம்மா ஏலேலோ.. ஏலேலம்மா ஏலேலோ..

வலைக்குள்ளே மீனிருந்தாலும் 
கவலைக்குள்ளே வாழ்விருக்கும் 
கடலோடு போராடுவான் 
கடனோடும் திண்டாடுவான் 
ஏலேலம்மா ஏலேலோ.. ஏலேலம்மா ஏலேலோ..

அலைமோதத் தாங்கிடும் அலவக்கரை
அதுபோல சுமைதாங்கும் அவலக்கதை
மீனவன் கதையும் இதுதானடா
இதை மாற்ற விதி ஏதெடா...
ஏலேலம்மா ஏலேலோ.. ஏலேலம்மா ஏலேலோ..


பாடலை பாடியவர் ஈ.எம். நாகூர் ஹனீபா புகழ் மருதமுனை எஸ்.எம். கமால்தீன், இசை சாய்ந்தமருது வெண்ணிலா கலாபூஷணம் அபூபக்கர், இசைஒருங்கிணைப்பு கல்முனை எம்.எம்.கபூர் ஆகும். 

சாய்ந்தமருது மாளிகைக்காடு கடற்கரையில் படமாக்கப்பட்டுள்ள இக்கதையின் சுருக்ககுறிப்பு :

மீனவர்கள் எப்படி உழைத்தாலும் கடன் சுமை என்பது அவர்களது குடும்ப வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு விடயமாகவே அவர்களைப் பின்தொடர்கிறது. இவ்வாறான பொருளாதார நெருக்கடியில் பொறுப்பற்ற ஒரு தகப்பன் குடித்துக்கொண்டு மேலும் மேலும் குடும்பத்தின் கடன் சுமையை பெருக்கிக்கொண்டு தீர்வுகாண முடியாதபடி அந்தக் குடும்பத்தையே நிர்க்கதிக்கு ஆளாக்கி விடுகிறான்.

இறுதியாக வயதுக்கு வந்த ஒரு பெண் பிள்ளையுடன் மூன்று பிள்ளைகளையும் மனைவியையும் நடுத்தெருவில் விட்டுவிட்டு பொறுப்பற்றவனாக அந்த தகப்பன் வேறொரு திருமணம் முடித்துக் கொண்டு போகின்றான். அவனை நம்பி இருந்த அந்தக் குடும்பம் இப்போது நடுத்தெருவில் நிற்கிறது.

இப்படியான ஒரு குடும்பத்தின் பாரத்தை அந்த வீட்டில் பிறந்த ஒரு சிறுவன் எப்படிச் சுமக்க முடியும் அவனால் என்ன செய்ய முடியும் இருந்தும் அவனுக்குள் இருக்கும் குடும்ப பாரம் அவனை படிப்பதை விட்டுவிட்டு கடற்தொழிலுக்குச் செல்லத் தூண்டுகிறது வலை இழுப்பதில் ஆரம்பித்து தனது வாழ்வை அவன் மெல்ல மெல்ல கடலோடும் அலையோடும் மோதவிடுகின்றான். 

இப்படித்தான் மீனவக் குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களின் கல்வி இடையிலேயே நின்றுவிடுகிறது அவர்களின் எதிர்காலம் கடலோடு கலந்துவிடுகிறது. இலங்கையைச் சுற்றிய கடற்கரை மணலில் இதுபோன்ற சிறுவர்களின் வாழ்வும் புதைந்துகிடக்கிறது என்பதையும் அலவக்கரை அலைபோல அடித்துச் செல்கிறது. கடல் பல கதைகளைச் சொல்லியிருக்கிறது அதனோடு ஒன்றாக இதுவும் கேட்கிறது.

நாட்டில் உள்ள பல மீனவர் குடும்பங்களில் கதைகளின் தொகுப்பாகவே இக்கதை எழுதப்பட்டுள்ளது இது ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தின் கதையும் அல்ல. என்பதை அலவக்கரை குறிப்பாக சொல்லிக் கொள்கிறது.

எம்.ஐ.எப். றிப்கா அனைஸ் (உம்மா) எம்.சி. நேந்தம்பி (வாப்பா) எம்.ஐ.எம். இல்ஹாம் (மகன் கொறுக்கா) ஏ.எல். நயீம் (மாமா) றனூபா முஸ்தபா (ஈட்டுக்கு நகை கொடுத்தவர்) எஸ்.எம்.ஏ. அமீர் (சீட்டுக்காரி) எஸ். ஜனூஸ் (மீனவர்) ஜே. வஹாப்தீன் (மீனவர்) ஏ.எச்.அல்-ஜவாஹிர் (மீனவர்) எம்.சி.எம். உவைஸ் (மீனவர்) எம்.எஸ்.ஏ. கபூர் (வீட்டு தரகர்) பாத்திமா றிஸ்கா றிஸ்வி (மகள்) யூ.எல்.எப். சீபா  (சிறிய மகள்) எஸ்.எம். அப்துல்லாஹ்  (தொட்டில் பிள்ளை) ஏ.எம். றிஸ்லான்  (கொறுக்காயின் நண்பன்) எம்.எம்.எம். சுஜாஆத்  (கொறுக்காயின் நண்பன்) எம்.எம். ஆரிஸ் (கொறுக்காயின் நண்பன்) மாளிகைக்காடு குடும்பவத்தை மீனவர்கள் இவர்களுடன் ..... கடலும் அலையும், தோணியும் வலையும், நண்டும் மணலும், மீனும் மீனவர்களும் கதைமாந்தர்களாக நடித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.