'இலங்கை மக்களை ஒரு தேச மக்களாக வாழ வலுவூட்டுதல்'
(ஏ.எல்.ஜுனைதீன்)
அரசமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழு மக்களின் கருத்துக்களை உள்வாங்குவதற்கான தனது முதலாவது அமர்வின் பொருட்டு இன்று 21 ஆம் திகதி 3.00 மணிக்கு நாடாளுமன்றக் கட்டடத்தில் குழுவின் தலைவர் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் கூடியது.
இன்று கூடிய இக் குழுவில் அமைச்சர்களான பஸீல் ராஜபக்ஸ, வாசுதேவ நாணயக்கார, ஏ.எல்.எம் அதாவுல்லா, ஆகியோர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டு குழுக்கள் சர்ப்பித்திருந்த கருத்துக்கள் தொடர்பாக நேரடியாக விளக்கங்களைக் கேட்டறிந்தனர்.
தற்போது அரசமைப்பில் ஏற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி விசேடமாக 13 ஆவது அரசமைப்புச் சட்டத்தின் இரண்டு திருத்தங்கள் பற்றி தெரிவுக் குழுவினர் சாட்சியமளிக்க வருகை தந்திருந்தவர்களிடம் அபிப்பிராயங்களைக் கேட்டறிந்தனர்.
இப் நாடாளுமன்ற தெரிவுக் குழு முன் சாய்ந்தமருது சிரேஸ்ட பிரசைகள் ஒன்றியம் மற்றும் சமாதானத்திற்கான இலங்கைச் சமயங்களின் பேரவையின் அம்பாறை மாவட்டக் கிளை என்பனவற்றின் சார்பாக டாக்டர் எம். ஐ.எம்.ஜெமீல் தலைமையில் அம்பாறை மாவட்ட இந்து நிறுவனங்களின் ஒன்றியத் தலைவர் தம்பியப்பா கைலாயப்பிள்ளை, பொறியியலாளர் யூ.எல்.ஏ அஸீஸ், ஊடகவியலாளர் ஏ.எல்.ஜுனைதீன் ஆகியோர் 'இலங்கை மக்களை ஒரு தேச மக்களாக வாழ வலுவூட்டுதல்' எனும் தொனியில் தமது கருத்துக்களை முன் வைத்தனர்.
சாய்ந்தமருது சிரேஸ்ட பிரசைகள் ஒன்றியம் சமாதானத்திற்கான இலங்கை சமயங்களின் பேரவையின் அம்பாறை மாவட்டக் கிளை இணைந்து நாடாளுமன்ற தெரிவுக் குழு முன் வழங்கிய சாட்சியத்தின் விபரம் வருமாறு,
பிரச்சினைகள்,
1 சட்டத்தையும் ஒழுங்கையும் பேணுவதில் உள்ள குறைபாடு.
2 சமயங்களிடையே சகிப்புத்தன்மை இல்லாமை.
3 அரச தொழில் வாய்ப்பு காணி மற்றும் வளங்கள் பகிர்வில் அநீதி.
4 ஆட்சி அதிகாரம் பன்முகப்படுத்தலில் உள்ள குறைபாடு.
தீர்வுகள்,
1 சட்டத்தை அமுல் நடாத்தும் அதிகாரிகள் அரசியல்இசமய ரீதியான பாரபட்சமின்றி நேர்மையாகச் செயல்பட வழி வகுக்கப்படல் வேண்டும்.
2 சமயங்களுக்கெதிரான பேச்சுக்கள், ஊர்வலங்கள், அடாவடித்தனங்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் தூண்டுதல் என்பன தகுந்த சட்டவாக்கங்கள் மூலம் தடுக்கப்படல் வேண்டும்.
3 ஆலாட்சி அதிகாரிகள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மேல் நீதி மன்ற அதிகாரங்களையொத்த அதிகாரங்களுடன் நியமிக்கப்படல் வேண்டும்.அவர்கள் அரச தொழில் வாய்ப்பு, காணி மற்றும் வளங்கள் பகிர்வதில் நடந்துள்ள அநீதிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
4 மக்களின் இறைமைக்கு முக்கியத்துவம் வழங்க 'வெஸ்ட்மினிஸ்டர்' நாடாளுமன்ற முறைமையை மீண்டும் ஏற்படுத்தி அமைச்சர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கூடிய அதிகாரங்களை வழங்க வேண்டும்.
5 மாகாண சபைகள் 13A இல் குறிப்பிட்டுள்ளபடி பொலிஸ், காணி அதிகாரங்களுடன் இயங்க வேண்டும். ஆயினும் மாகாண சபைகள் தங்கள் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்யாத வகையில் மத்திய அரசாங்கம் புதிய சட்டங்களை ஆக்க வேண்டும்.
6 ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் பிரதேச சபை அமைதல் வேண்டும். இப்பிரதேச சபைகளுக்கு அப்பகுதிகளில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டவும்,இனங்களுக்கிடையே அமைதியைப் பேணவும் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிக்கவும் அதிகாரம் வழங்கப்படல் வேண்டும். சமயங்களுக்கிடையேயும் சமயங்களுக்குள்ளேயும் ஏற்படும் மோதல்களைத் தடுக்க விஷேட பொலிஸ் பிரிவுகள் இப்பிரதேசங்களில் நிறுவப்படலாம்.
7 எதிர்காலச் சந்ததியினர் ஒரு தேச மக்களாக மிளிர பல் சமய, பல் மொழிப் பாடசாலைகள் ஏற்படுத்தப்படல் வேண்டும்.
8 அரசியல்வாதிகள் நாட்டு மக்களுக்கு முன் மாதிரியாகத் திகழ வேண்டும்.எனவே,அவர்கள் சிறந்த கல்வி அறிவுடையவர்களாக இருப்பதோடு தேர்தலில் வேட்பாளர்களாகத் தெரிவாக முன் அவர்களுக்கு நல் விழுமியங்களில் பயிற்சி வழங்கப்படல் வேண்டும்.
Post a Comment