Header Ads



சூட்டை தணிக்க ஐடியா - சீனாவில் தர்ப்பூசணி உடை

சீனாவில் வெயில் வாட்டி வதைக்கிறது. குழந்தைகளை சூட்டில் இருந்து பாதுகாக்க தர்ப்பூசணியால் செய்த உடை பிரபலமாகி வருகிறது.
சீனாவின் பல்வேறு மாகாணங்களில் வெயில் வறுத்தெடுத்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொளுத்தும் வெயிலுக்கு இதுவரை 10 பேர் பலியாகி உள்ளனர். வெப்பநிலை மேலும் உயரும் என்று அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்து உள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். வெயில் காரணமாக சீனாவில் வரலாறு காணாத குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது.

சீனாவின் வென்சூ நகரில் ஒருவர் தனது  குழந்தையை வெயிலில் இருந்து பாதுகாக்க, புது ஐடியா செய்து குளு குளு உடை ஒன்றை உருவாக்கி அணிவித்தார். அவர் தயாரித்த உடைக்கு பாராட்டுகள் குவிந்ததோடு எளிமையான கண்டுபிடிப்பு இன்டர்நெட்டில் ஹிட்டாகி உள்ளது. 

அப்படி என்ன தான் கண்டுபிடித்தார் என்கிறீர்களா? பெரிதாக மெனக்கிடாமல் ஒரு தர்ப்பூசணியை எடுத்து அதன் சதை பகுதியை நீக்கினார். பின்னர் தோல் பகுதியில் பெல்ட் கோர்த்து, 2 துளைகள் இட்டு குழந்தைக்கு மாட்டி விட்டார். தர்ப்பூசணியிலேயே தொப்பியும் காலணியும் தயாரித்து அணிவித்தார். தர்ப்பூசணி உடையின் குளிர்ச்சியால் சிரித்த தனது குழந்தையை வளைத்து வளைத்து போட்டோ எடுத்து இன்டர்நெட்டில் வெளியிட்டார். அவ்வளவுதான். உடைக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. ஏராளமானோர் தங்களது குழந்தைகளுக்கும் தர்ப்பூசணி உடை செய்து அணிவிக்க தொடங்கி விட்டனர். இப்போது சீனாவில் எங்கு பார்த்தாலும் ‘தர்ப்பூசணி‘ குழந்தைகள் உலா வருகின்றன.

No comments

Powered by Blogger.