Header Ads



லண்டன் முழுவதும் பசுமை சுவர்கள்

பிரிட்டனில், 68 அடி உயர சுவர் முழுவதும், 20க்கும் மேற்பட்ட, தாவரங்களை பயிர் செய்து, "பசுமை சுவர்' வடிவமைக்கப்பட்டுள்ளது. இயற்கையின் கொடையான தாவரங்களை காக்கவும், சுற்றுச் சூழல் ர்கேட்டை கட்டுப்படுத்தவும், லண்டன் மேயர் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். அதன்படி, நகரின் உயரமான கட்டடங்களின் பக்கச் சுவர்களில், ஏராளமான அரிய வகை தாவரங்களை நட்டு வைத்து, பராமரிக்கும், புதிய பசுமை புரட்சி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். லண்டன் மேயர், போரிஸ் ஜான்சன், இந்த புதிய திட்டத்தை செயல்படுத்தி, லண்டன் நகரை உலகின் சிறந்த சுற்றுலா தளமாக மாற்றுவதோடு, சுற்றுச் சூழல் சீர்கேடற்ற நகரமாகவும் மாற்ற திட்டமிட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக, ஒரு கோடி ரூபாய் செலவில், லண்டன் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள, பிரபல நட்சத்திர ஓட்டலின், பக்க சுவர்களில், தாவரங்களை நட்டு வைத்து சாதனை படைத்துள்ளார். இத்திட்டத்தை பிரபலப்படுத்தும் நோக்கத்தில், விக்டோரியா நிலையம் அருகில், சுற்றுலா பயணிகள் செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ள, "ரெட் கார்னேஷன்' ஓட்டலை தேர்வு செய்தார். மேயர் தன் விருப்பத்தை ஓட்டல் நிர்வாகத்திடம் தெரிவித்தார். அரசு சார்பில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்திற்கு, ஓட்டல் நிர்வாகமும் சம்மதம் தெரிவித்தது.

இதையடுத்து, கடந்த ஓராண்டாக, ஓட்டல் சுவர்களில் தோட்டம் அமைக்கும் பணிகள் நடத்தப்பட்டு, தற்போது நிறைவடைந்துள்ளன. பல நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் தங்கும், ரெட் கார்னேஷன் ஓட்டலின், 68 அடி உயர சுவரில், தோட்டம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக. 16 டன் வளமான மண் சேகரிக்கப்பட்டது. அதன் பின், சுவரில், பக்கவாட்டில் மண் கொட்டுவதற்கான விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அதில், 20க்கும் மேற்பட்ட பல அரிய வகை தாவரங்கள் நட்டு வைக்கப்பட்டன. ஒரே நேரத்தில், 10 ஆயிரம் லிட்டர் நீரை உறிஞ்சி சேமித்து வைத்துக்கொள்ளும் வகையில், இந்த தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. லண்டன் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த திட்டம், பலரது வீடுகளிலும் இதை நடைமுறைபடுத்த ஆர்வத்தை தூண்டியுள்ளது. லண்டன் மேயரின் தலைமை ஆலோசகரை தொடர்பு கொண்ட பலரும், தங்கள் வீடுகள் மற்றும் அலுவலக சுவர்களிலும், இதே போல், பசுமை தாவரங்களை நட்டுத் தர வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதற்கு ஆகும் செலவில், 50 சதவீதம் வரை, தாங்களே ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து, லண்டன் மேயர், போரிஸ் ஜான்சன் கூறியதாவது : விரைவில், லண்டன் நகரம் முழுவதும், இது போன்ற பசுமை சுவர்கள் அமைக்கப்படும். கட்டடங்களுக்காக, தாவரங்கள் அழிப்படுவதால், கட்டடங்களிலேயே, தாவரத்தை வளர்க்கும் புதிய முறையை அறிமுகம் செய்துள்ளோம். உலகின் பல நாடுகளும் இந்த முறையை பின்பற்றினால், உலகம் வெப்பமயமாதலை தவிர்க்கலாம். இவ்வகை தோட்டங்கள், மழைநீரை சேமிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால், இதில் வளர்க்கப்படும் தாவரங்களுக்கு அதிக நீர் தேவைப்படாது. வெள்ளம் ஏற்படும் காலங்களில், கட்டடத்தின் சுவர்கள் பாதிப்படையாமலும், சுவர் அரிப்பை தடுக்கும் வகையிலும் இந்த தாவரங்கள் உதவி புரியும். இவ்வாறு போரிஸ் கூறினார்.

No comments

Powered by Blogger.