பாவத்தைப் பாவத்தால் கழுவுதல்..!
(தம்பி)
ஆட்சியாளர்களின் அரசியல் கணக்குகள் சரியாக இல்லை. ஆனால், அரசுக்குள் இருப்பவர்களில் அதிகமானோர் அந்தக் 'கணக்குகள்' சரியாக இருப்பதாகவே சொல்லிக் கொள்கின்றார்கள். உண்மையில், 'கணக்கு' சரியில்லை என்பது அரசுக்குள் இருப்பவர்களுக்குத் தெரியும். இருந்தபோதும், அதை உரத்துச் சொல்வதற்கு அவர்கள் அஞ்சுகின்றனர். அப்படிச் சொன்னால், தங்கள் 'கணக்குகள்' பிழைத்து விடக்கூடும் என்று அவர்கள் பயப்படுகின்றார்கள்.
வெலிவேரியவில் சுத்தமான நீரைக் கேட்டவர்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றார்கள். பின்னர் சுட்டவர்களே விசாரணைகளையும் நடத்துகின்றார்கள். அதன் பின்னர் - சுடப்பட்டு இறந்தவர்களின் உறவினர்களை ஜனாதிபதி அழைத்து - நஷ்டஈடு என்கின்ற பெயரில் ஒரு தொகைப் பணத்தினைக் கொடுத்து அனுப்பி வைத்து விடுகின்றார். ஆனால், சுட்டவர்கள் இதுவரை கைதாகவில்லை.
கிராண்பாஸ் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. தாக்குதல் நடத்தியவர்கள் ஊடகங்களின் கமராக்களில் மிகத் தெளிவாகப் பதிவாகிவுள்ளார்கள். ஆனால், இதுவரை தாக்குதல் நடத்தியவர்கள் எவரையும் பொலிஸார் கைது செய்யவில்லை. இதற்குள், கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தொடர்பான விசாரணைகள் தனக்கு பூரண திருப்தியளித்துள்ளது என்று, மு.காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவிக்கின்றார்.
நாட்டில் இதுவரை 24 பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிராண்ட்பாஸ் 24 ஆவது பள்ளிவாசல். ஆனாலும், இந்தத் தாக்குதல்கள் தொடர்பில் அரச உயர் மட்டத்தவர்கள் எவரும் இதுவரை வாய் திறக்கவில்லை. குறிப்பாக, இது தொடர்பில் ஜனாதிபதி பகடிக்கேனும் 'வருத்;தம்' தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு முஸ்லிம் மக்கள் தமது நன்றிக் கடனைத் தெரிவிப்பதற்கான தருணம் கிடைத்துள்ளதாக, அமைச்சர் றிசாத் பதியுத்தீன் தெரிவித்துள்ளார். ஏன் நன்றிக்கடன், எதற்கு நன்றிக்கடன் என்றெல்லாம் நீங்கள் கேட்கக் கூடாது. கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் மீதான தாக்குதல் சம்பவத்தின் 'ஈரம்' இன்னும் காயாத நிலையிலேயே றிசாத் இந்தக் 'கடன்' கதையைக் கூறியிருக்கின்றார்.
அரசியல் ரீதியாக முஸ்லிம் தலைவர்கள் மிகவும் வக்கற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். அதனால்தான், தங்கள் மதஸ்தலங்கள் உடைக்கப்படும் போது கூட - அவர்களால் உரத்துக் குரல் கொடுக்க முடியாமல் போயுள்ளது.
கிழக்கு மாகாணசபைக்கான கடந்த தேர்தலின் போது, தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தினை கையிலெடுத்து - முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் செய்தது. ஆனால், தற்போதைய தேர்தல் பிரசாங்களில் - கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் விவகாரம் குறித்து, ஒற்றை வார்த்தையைக் கூடப் பேச முடியாமல் அந்தக் கட்சி ஊமையாகி நிற்கிறது.
கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் விவகாரத்தில் தலையிடுமாறு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி - கையெழுத்து இட்டதோடு, இந்த விவகாரத்திலிருந்து முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தமது தலைகளைக் கழற்றிக் கொண்டு விட்டனர்.
கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் மீதான தாக்குதல் ஒன்றும் மர்மக் கதையல்ல. அந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள், அதன் பின்னணயில் இருந்தவர்கள் யார் என்பது பற்றி முஸ்லிம் அரசியல் தலைவர்களும் நன்கு அறிவார்கள். அதனால்தான் அவர்கள் - இந்த விவகாரத்தில் அடக்கி வாசிக்கின்றார்கள்.
இதேவேளை, வெலிவேரிய விவகாரத்திலிருந்து – உலகின் கவனத்தைத் திருப்புவதற்காவே கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் மீதான தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதன் பின்னணியில் ஆட்சியாளர்களே இருந்ததாகவும் ஊடகங்கள் எழுதியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அழுக்கை – அழுக்காலும், பாவத்தை பாவத்தாலும், வெலிவேரியவில் உறைந்த ரத்தத்தை – கிராண்பாஸ் விவகாரத்தாலும் கழுவி விட முடியும் என்று நினைப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.
ஆனால், இதுபற்றிப் பேசுவதற்கு ஆட்சியிலுள்ள நமது முஸ்லிம் தலைமைகளால் முடியாது. கிராண்ட்பாஸ் விவகாரத்தின் போது, முஸ்லிம் அமைச்சர்கள் கோபப்பட்டதாக வந்த செய்திகளும், ஆக்ரோசத்துடன் விட்டிருந்த அறிக்கைகளும் பத்தாம்பசலித் தனமானவையாகும். முஸ்லிம் மக்களின் கோபம் தங்கள் மீது திரும்பி விடக் கூடாது என்பதற்காக, ஆட்சியிலுள்ள முஸ்லிம் பிரதிநிதிகள் ஏதாவது கூத்தாட வேண்டியிருக்கிறது. அதற்காகத்தான் - கோபம், கவலை, கண்டனம் போன்றவற்றினை சேர்த்துக் கலந்து அறிக்கைகளாக விட்டிருந்தனர்.
கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்கப்பட்ட போது, பொலிஸார் அதைத் தடுக்க முயற்சிக்கவில்லை. வெறுமனே கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்பது உண்மைதான். அதற்காக, பொலிஸ் மா அதிபர் மீது முஸ்லிம் அமைச்சர்கள் பாய்ந்து விழுவதும், திட்டித் தீர்ப்பதும், கோமாளித்தனமான செயற்பாடாகும்.
உண்மையில், கிராண்ட்பாஸ் விவகாரம் தொடர்பில் - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைதான் முஸ்லிம் அமைச்சர்கள் திட்டித் தீர்த்திருக்க வேண்டும். முஸ்லிம்கள் மீது பௌத்த துறவிகள் தலைமையில் அண்மைக் காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நெருக்குவாரங்கள் மற்றும் தாக்குதல்கள் குறித்து, ஜனாதிபதி ராஜபக்ஷ எதுவும் பேசுவதாக இல்லை. தொடர்ந்தும் மௌனத்தினையே கடைப்பிடித்து வருகின்றார். மு.கா. தலைவர் ஹக்கீமுடைய மொழிநடையில் சொல்வதென்றால், இந்த விவகாரங்களில் - ஜனாதிபதி மெத்தனப் போக்கினையே கடைப்பிடித்து வருகின்றார். ஜனாதிபதியின் இந்த மெத்தனப் போக்குத்தான் - சிங்கள இனவாதிகளை ஊக்குவித்து வருகிறது. தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தின் போதே, பேரினவாதக் குழப்படிக்காரர்களின் தலையில், ஜனாதிபதி - ஓங்கி ஒரு குட்டினை வைத்திருந்தால், கிராண்ட்பாஸ் வரை பிரச்சினை நீண்டிருக்காது.
ஆக, ஜனாதிபதியை திட்டுவதற்கும் - கேள்வி கேட்பதற்கும் வக்கில்லாமையினால்தான், கிராண்ட்பாஸ் விவகாரத்தில் - பொலிஸ் மா அதிபரை முஸ்லிம் அரசியல்வாதிகள் திட்டிக் கொண்டிருக்கின்றனர். அதாவது, அவலை நினைத்து உரலை இடித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனாலும், தாம் இடிப்பது உரலைத்தான் என்பது முஸ்லிம் அமைச்சர்மாருக்குத் தெரியாமலில்லை. மக்களை ஏமாற்றுவதற்காக, இவர்கள் எதையாவது இடித்துக் கொண்டேயிருக்க வேண்டும். அல்லது இடித்துக் கொண்டிருப்பது போல் - காண்பிக்க வேண்டும்.
முஸ்லிம் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் நாங்கள்தான் என்று மார்பில் அடித்துக் கொள்ளும் முஸ்லிம் காங்கிரஸ் உட்பட, அரசுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் அத்தனை முஸ்லிம் கட்சிகளும், அரசியல்வாதிகளும் - சரணாகதி அரசியலைத்தான் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த ஆட்சியில், தமக்கு மரியாதை இல்லை என்று முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களே அடிக்கடி கூறிவருகின்றனர். அரசுக்கும் - தமக்கும் நல்ல உறவில்லை என்று மு.கா. தலைவரே பகிரங்கமாக தெரிவித்தும் வருகின்றார். ஆனாலும், அரசை விட்டும் பிரிந்து போவதற்கு மு.கா. தயாராக இல்லை.
தங்களை மதியாத ஓர் அரசுக்குள் இருந்து கொண்டு, மு.காங்கிரஸ் எதையெல்லாம் வென்றெடுக்கப் போகிறதென்று தெரியவில்லை. இந்த ஆட்சிக்குள் இருந்து கொண்டு இதுவரை அந்தக் கட்சி எதையும் சாதிக்கவுமில்லை. மு.காங்கிரசை ஆட்சியில் வைத்துக் கொண்டே – முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதலை நடத்திக் கொண்டிருப்பவர்களை போஷித்து வருகின்றது - இந்த அரசு.
அப்படியென்றால், முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் இந்த அரசுடன் ஒட்டிக் கொண்டிருப்பதில் அர்த்தங்கள் எதுவும் கிடையாது. அதற்காக, இந்த அரசைத் தூக்கியெறிந்து விட்டு, முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் எல்லோரும் வந்து விடுவார்கள் என்றும் நாம் எதிர்பார்க்க முடியாது. அமைச்சர்களான அதாஉல்லா, றிசாத் பதியுத்தீன், பௌசி, பைசர் முஸ்தபா போன்றவர்கள் இந்த அரசுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் வரைதான் அரசியல் செய்ய முடியும். ஆனால், முஸ்லிம் காங்கிரஸின் நிலை அப்படியல்ல. அரசை எதிர்த்தும் அரசியல் செய்வதற்கு அந்தக் கட்சியால் முடியும். ஆனால் - தலைமை அதற்குத் தயாராக இல்லை.
மு.காங்கிரஸ் இந்த அரசுக்குள் இருந்து கொண்டு தனித்துவம் பேசுவதும், உரிமைக்காகக் குரல் கொடுப்பதாகக் கூறுவதும், முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்பில் ஆட்சியாளர்களைத் தட்டிக் கேட்பதாகக் கூறுவதும் கோமாளித்தனமான முயற்சிகளாகும். சாக்கடைக்குள் இருந்து கொண்டு – தனது அழுக்கை நீக்குவதற்கு சோப்புப் போட்டுக் குளிக்கும் ஒருவருக்கும், இந்த அரசுக்குள் இருந்து கொண்டு தனித்துவம் பேசிக் கொண்டிருக்கும் மு.காங்கிரசுக்குமிடையில் பெருத்த வவித்தியாசங்கள் எவையுமில்லை.
அரசுக்குள் இருந்து கொண்டே நடைபெறவுள்ள மூன்று மாகாணசபைத் தேர்தல்களிலும் மு.காங்கிரஸ் - தனித்துப் போட்டியிடுவதை - ஓர் அரசியல் சாகசம் போல் காட்டுவதற்கு அந்தக் கட்சியினர் முயற்சித்து வருகின்றனர். ஆனால், உண்மையில் இது குரங்கு வித்தை காட்டுவதற்கு ஒப்பானதொரு அரசியல் செயற்பாடாகும்.
'வழுவழுத்த உறவை விடவும் வைரமான பகைமை மேலானது'. 'மதியாதோர் தலைவாசல் மிதியாதே' என்கிற பாட்டன் மற்றும் பாட்டி மொழிகளெல்லாம் ரோசமுள்ளவர்களுக்கானது. ஓவ்வொரு நாளும் குடித்து விட்டு வந்து சித்திரவதை செய்யும் கணவனுடன் ஊருக்காக வாழ்வதை விடவும், அவனை உதறி எறிந்து - விவாகரத்துச் செய்து விட்டு வருவதுதான் மானமுள்ள ஒரு மனைவியின் முடிவாக இருக்கும். இருக்க வேண்டும். ஆனால், தனது குடிகாரக் கணவன் எப்படிப் போட்டு மிதித்தாலும் - அவனுடன்தான் வாழ்வேன் என்று அடம்பிடிக்கிறது மு.காங்கிரஸ்.
இன்னொரு புறம், எப்படி அடித்தாலும், அவமானப்படுத்தினாலும் இந்த அரசை விட்டும் மு.காங்கிரஸ் பிரிந்து செல்லாது என்பதை ஆட்சியாளர்களும் மிகத் தெளிவாக அறிந்து வைத்துள்ளனர். அதனால், மு.காங்கிரஸ் குறித்தும் - அந்தக் கட்சி அவ்வப்போது அரசு பற்றி வெளியிடுகின்ற விமர்சனங்கள் தொடர்பிலும் ஆட்சியாளர்கள் அலட்டிக் கொள்வதேயில்லை. வயல் வெளிகளில் வைக்கப்பட்டிருக்கும் பொம்மைகளுக்கு உயிரில்லை என்பதை பறவைகள் தெரிந்து கொள்ளும் போது - குறித்த பொம்மைகளின் தலையில் உட்கார்ந்து பறவைகள் எச்சமிடத் தொடங்குவதைப் போல், மு.கா விடயத்தில் ஆட்சியாளர்கள் நடந்து வருகின்றனர்.
நமது பலவீனங்களை எதிரி அறிந்து கொள்ளாமல் மூடி மறைப்பது போரியலில் மிக முக்கிய தந்திரமாகும். இது அரசியலுக்கும் பொருந்தும். நமது பலவீனம் வெளிப்பாடாத வரைதான் நாம் வீரம் பேசிக் கொண்டிருக்க முடியும். ஆனால், 'எங்கள் கழுத்தைப் பிடித்துத் தள்ளும் வரையில் நாங்கள் இந்த அரசை விட்டுப் பிரிய மாட்டோம்' என்று மு.கா. கூறிக் கொண்டிருக்கிறது. இதைவிடவும், தனது பலவீனத்தை அந்தக் கட்சி வேறெப்படி வெளிக்காட்ட முடியும்.
ஆக, முஸ்லிம் அரசியல்வாதிகளும், முஸ்லிம்களுக்கான அரசியல் கட்சிகளும் இந்த ஆட்சியில் பலவீனமாகவும், வக்கற்ற நிலையிலும் உள்ளவரை - முஸ்லிம் சமூகம் மீதான நெட்டூரங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கும். வெலிவேரிய போன்ற பாவங்களை கிராண்ட்பாஸ் போன்ற பாவங்களால் கழுவிச் சுத்தம் செய்யும் அரசின் - சித்து விளையாட்டுக்களும் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
இப்படி எழுதுவதற்கு வருத்தமாகத்தான் உள்ளது. ஆனால், அதுதான் உண்மை. அரசியல் அநாதைகளாக இருப்பதைத் தவிர, முஸ்லிம் சமூகத்துக்கு மாற்று வழிகள் இப்போதைக்கு இருப்பதாகத் தெரியவில்லை!
pls find good solution.munafiq leaders will be punished by aswa.including all suporters from muslim
ReplyDeleteதம்பி, எனது மனதில் இருந்த அத்தனை வசனங்களையும் ஏன் சொற்களையும் அப்படியே அச்சொட்டாக எழுதியுள்ளீர்கள் மிகவும் யதார்த்தமான பதிவு. மிக்க நன்றி.
ReplyDeleteமுஸ்லிம் மக்களே, காங்கிரஸ் போராளிகளே..! நமது அரசியல் போக்கிலும், முஸ்லிம் சமூகத்தின் தலைமைத்துவத்திலும் அதன் வழிகாட்டுதலிலும் மாற்றம் தேவை, அது உங்கள் கைகளில்தான் உள்ளது முயற்சி செய்வீர்களா?