உளவள ஆலோசனையின் அவசியம் உணரப்படுமா..?
(எம்.எம்.ஏ.ஸமட்)
மனிதனின் சுகாதார நிலை மேம்பாட்டுக்கு உடல், உள்ளம், ஆண்மிகம் ஆகிய 3 விடயங்களும் முக்கியமானவை. ஒரு மனிதன் உடல் ரீதியாகப் பாதிக்கப்படுகின்ற போது அப்பாதிப்பானது பெருமளவில் அவனை மாத்திரமே பாதிப்புக்குள்ளாக்கின்றது. ஆனால், அதே மனிதன் உள ரீதியான பாதிப்புக்குள்ளாகின்ற போது அதன் தாக்கம் அவனை மட்டும் பாதிக்காது. ஒரு நாட்டின் அபிவிருத்தியில் உள நலனின் பங்கு அத்தியாவசிமானதொன்றாகும். ஏனெனில் பொருளாதாரத்திற்கும் உளநோய்களுக்கும் இடையில் தொடர்புகள் நிலவுகின்றன. ஒருவர் உளநோயினால் பாதிக்கப்படுவாராயின் அப்பாதிப்பானது அவருக்கு மாத்திரமின்றி குடும்ப, சமூக பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
உலக நாடுகள் அனைத்திலுமே ஒரு குடும்பத்தில் ஒருவர் உளநோயினால் பாதிப்புள்ளாகி இருப்பதாக அறிவிக்கப்படுகிறது. இது உளநல பாதிப்பு நிலையானது பரவலான நிலையில் உள்ளதென்பதை வெளிப்படுத்தி நிற்கின்றது. உலகில் உளநோயினால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 450 மில்லியன் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதில் 15 மில்லியன் பேர் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 மில்லியன் பேர் 'எபிலெப்சி' எனும் உளநோய்க்கும் 24 மில்லியன் பேர் உளப்பிளவு நோயினாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லியன் பேர் தற்கொலை செய்து கொள்வதாகவும் 10-20 மில்லியன் மக்கள் தற்கொலைக்கு முயற்சி செய்வதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
அண்மைய ஆய்வுகளின்படி இலங்கையில் நான்கு பேரில் ஒருவர் ஏதாவது ஒரு உளநோய்க்கு உள்ளாகியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் சனத்தொகையில் அதிக வளர்ச்சி வேகத்தைக் காட்டும் வயது எல்லையினராக 15-30 வயது வரையிலானோரும் 60 வயதுக்கு மேற்பட்டோரும் உள்ளனர். இவ்வயதுப் பிரிவினரே உளநோய் அதிகளவில் காணப்படும் வயதுப் பிரிவினர் என்ற காரணத்தினால் இலங்கையில் உளநோயாளர்கள் அதிகரிக்கும் விடயத்தில் இந்த வயது நிலையும் செல்வாக்குச் செலுத்துகிறது. கடந்த 2007ஆம் ஆண்டில் 70 ஆயிரம் பேர் உள நோயால் பாதிக்கப்பட்டு அவர்களில் 180பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஆய்வறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உளநோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் அளவில் அதிகரிப்பு ஏற்பட்டமைக்கு பல விடயங்கள் செல்வாக்குச் செலுத்துகின்றன. மக்கள் சனத்தொகை, யுத்தமும் இயற்கை அனர்;த்தமும்(சுனாமி), இடப்பெயர்வு, மது மற்றும் போதைப் பொருள் பாவனை, மன அழுத்தம் என்பனவாகும்.
3 தாசப்த காலமாக இந்நாட்டில் இடம்பெற்ற யுத்தமும் 2004 இல் ஏற்பட்ட சுனாமி பேரனர்த்தமும் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பலரை உளநோயாளர்களாக ஆக்கியுள்ளது. யுத்தத்தில் ஈடுபட்டவர்கள், யுத்தம் நடைபெற்ற பிரதேசம் மற்றும் அதை அண்டிய பிரதேச மக்கள். யுத்தத்தில ஈடுபட்ட தரப்புகளைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினர் உள நோய்களுக்குள்ளாகியுள்ளனர்.
ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் யுத்தம், தொழில், அபிவிருத்தி மற்றும் அனர்த்தம் போன்ற ஏதாவதொரு காரணத்திற்காக குறிப்பிட்ட பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து வேறு பிரதேசத்தில் வாழ முயற்சிக்கின்ற போது, தமக்கு பழக்கமான சூழலில் இருந்து புதிய சூழல் கொண்;ட பிரதேசத்திற்கு செல்வதனால் ஏற்படும் பிரச்சினைகள் பலரின் உள நிலையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
இலங்கையில் கடந்த காலப்பகுதியில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனையானது பெருமளவு அதிகரித்தச் செல்கின்றது. தனிநபர் மதுபாவனையில் இலங்கை முன்னிலையில் காணப்படுவதாக அறியப்பட்டுள்ளது. மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் உள நிலையில் பல பாதிப்புக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
ஒருவரின் குழப்பகரமான மனநிலைக்கும் அசௌகரிய நிலைக்கும் காரணமாக அமையும் எந்தவொரு சம்பவமும் மன அழுத்தத்தைத் உருவாக்கும். இந்த மன அழுத்த நிலை உள நோயையை ஏற்படுத்தும் வாய்ப்புண்டு.
உலகின் சகல நாடுகளுக்கும் பொதுவான உளநோய்கள் மற்றும் அதனைச் சார்ந்த பிரச்சினைகள் பல உள்ளன. உளநோய்களினால் பாதிக்கப்படுவர்கள் சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்வதற்காக முன் வராமை ஒரு விடயமாகும். அதற்குப் புறம்பாக அந்தந்த நாடுகளின் சமூக, கலாசார, அரசியல் மற்றும் மதம் சார்ந்த பின்னணியில் அந்தந்த நாடுகளுக்கு உரித்தான பிரச்சினைகளும் இனங் காணப்பட்டுள்ளன.
இலங்கையைப் பொறுத்தவரையில் உளநோய் தொடர்பாக பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. அதாவது உளநோயைக் குணப்படுத்த முடியாமைக்கு பல காரணங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவையாவன.
நோயை இனங்காணுவதில் ஏற்படும் தாமத நிலை - நோயை இனங்காணுவதில் எற்படும் தாமத நிலைக்கு இரு விடங்கள் செல்வாக்குச் செலுத்துகின்றன.
அதில் ஒன்று, மக்கள் மத்தியில் உளநோய் பற்றியிருக்கும் விழிப்புணர்வு மற்றும் அறிவு குறைவான மட்டத்தில் உள்ளமை. உள நோய் என்றால் என்ன? அதன் அறிகுறிகள் எப்படி இருக்கும்? அதன்; விளைவு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் போன்ற வற்றில் அறிவு போதாமை. ஒரு குழந்தைக்குக் காய்ச்சல் ஏற்பட்டால் பெற்றோர்கள் அதனைக் எளிதில் உணர்ந்து வைத்தியரை அனுகுகின்றனர். எனினும், குடும்பத்தில் ஒருவருக்கு உளநோய் ஏற்படின் அதனை விளங்கிக் கொள்வதற்கு தாமதம் காட்டுகின்றனர்.
மருத்துவர்களும் உடல்சார் நோய்களை எளிதில் இனங்கண்டு அதற்குரிய சிகிச்சைகளை அளிக்கின்ற போதிலும், உளநோய்களை இனங்காணுவதிலும் அதற்குச் சிகிச்சை அளிப்பதிலும் விஷேட நிபுணத்துவம் மற்றும் பயிற்சிகள் போதியளவில் காணப்படமையும் காரணமாகும்.
அடுத்தபடியாக, சிகிச்சைகளை நாடுவதில் காட்டும் தாமதம் - சிலவேளைகளில் உளநோய் உள்ளதாக உணர்ந்தாலும் சிகிச்சைகளுக்காக முன்வருவது தாமதமடைகின்றமையை அவதானிக்க முடிகின்றது. நோய் உள்ளதாக விளங்கிக் கொண்டாலும் என்ன செய்வது யாரிடம்போவது என்பது பற்றிய விளக்கமின்மை. பலதரப்பட்ட சமூகக் காரணிகள் காரணமாக சிகிச்சைகளுக்காக முன் வருவதற்கு மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். உளநோய்க்காக சிகிக்சை பெறச் சென்றால் 'பைத்தியகாரன்' என்ற பட்டத்தைச் சூட்டி விடுவார்களோ என்ற அச்ச உணர்வு ஏற்பட்டு தயக்கம் ஏற்படுகிறது.
மேலும், சிகிச்சை பெறுவதற்கு இயலாத நிலை - உளநோயாளி ஒருவருக்கு சிகிச்சை பெறுவதற்கான அவசியம் எழுந்தால் அது தொடர்பான வசதிகளைப் பெறுவதற்கு இயலாத நிலை எமது நாட்டில் உள்ளதொரு சிக்கலாகும். சேவைகளைப் பெறுவதில் இலகு நிலை காணப்பட்டாலும் அதன் தரம் பல காரணங்களினால் குறைவடைந்துள்ளமையை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
இன்னுமொரு காரணமாக, உளநோயாளர்களை இழி நிலைக்குள்ளாக்குதல் - உள நோயாளர்களை இழி நிலைக்குள்ளாக்கி அவர்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக விளம்பரப்படுத்துவதும் அதனூடக அவர்களை வேறுபடுத்திப் பார்த்தலும் நிகழ்கின்றது. இதனால், உளநோயாளர்கள் பாதிக்கப்பட்டவர்களாகவும் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டவர்களாகவும் ஆகுகின்றனர். மனிதர்களாக அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய கவனிப்பு நிலை, விருந்தோம்பல் மற்றும் கௌரவம் மறுக்கப்படுகின்றன. அதன் மோசமான நிலையாக அவர்கள் முழுமையாகக் குணமடைந்த பின்னரும் முன்னர் போன்றே இழிநிலைக்குள்ளாக்கப்படுவதனால் அவர்கள் அசௌகரிக நிலைக்கு உள்ளாகின்றனர். இதனால் அவர்கள் குணமடைந்தாலும் சமூகத்தில் சாதாரண மக்களைப் போன்று வாழ்க்கையை நடத்த அவர்களுக்கு வாய்ப்பற்ற நிலை ஏற்படுகிறது.
அத்தோடு, உளநோய்; பற்றிய தவறான கண்ணோட்டம் - எமது நாட்டில் அங்கம் வகிக்கும் சமூகங்களில் உளநோய் பற்றிய தவறான கண்ணோட்டங்கள், நம்பிக்கைகள் அதிகளவில் வேரூன்றியுள்ளன. உளநோய் ஒரு தொற்று நோய் என்றும் ஒரு முறை நோய் ஏற்பட்டால் அவர் எந்நாளும் அவ்வாறே இருப்பார் என்றும் அதனை முற்றாகக் குணப்படுத்த முடியாது என்றும் உளநோயாளிகள் வன்முறையாளர்கள் என்றும் பலதரப்பட்ட தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. இதன் காரணமாக உள நோயாளிகளை இனங்காணுவதில் தாமத நிலையும் அவர்களுக்குரிய சிகிச்சைகளை வழங்குவதில் தாமத நிலையும் ஏற்படுகிறது. அத்துடன் உளநோய் வேறு நோய்களாகக் கருதப்பட்டு அவற்றுக்கு உள்ளுர் சிகிச்சைகளைச் செய்ய முயற்சிப்பதனால் நோயை குணமாக்குவதற்கான வாய்ப்பும் அற்றுப் போகிறது. இக்காரணங்களினால் இலங்கையில் உளநோய்களைக் குணப்படுத்துவதில் சிக்கல்நிலை தோன்றுவதை அவதானிக்க முடிகிறது.
உளவளத்துணையானது 'ஒருவர் நாளாந்த வாழ்க்கை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றபோது முகங் கொடுக்கும் எதிர்பார்த்த, எதிர்பாராத சமபவங்களினால் ஏற்படுகின்ற உளரீதியான பிரச்சினைகளுக்கு உளவியல் முறைகளைப் பயன்படுத்தி அவரிடம் காணப்படும் உள்ளார்ந்த சக்தி, திறன்களை வெளிக்கொணர்வதன் மூலம் நம்பிக்கையீனத்தை இல்லாமல் செய்து, ஆளுமையை விருத்தி செய்து, அவரது பிரச்சினைகளுக்கு அவரே தீர்வு காண்பதற்கு உதவுகின்றதொரு அறிவியல் ரீதியான தொழில்வாண்மையான பணியாகும். தொழில்வாண்மை உளவளத்துணையும் ஏனைய துறைகளைப் போன்று பல்வேறு பிரிவுகளைக் கொண்டுள்ளது. உளவியல் உளவளத்துணை, கல்வி உளவளத்துணை, தனிநபர் உளவளத்துணை, குடும்ப உளவளத்துணை, குழு உளவளத்துணை, தொழில் உளவளத்துணை விஷேட உளவளத்துணை என பல்வேறு துறைகளில் இன்று உளவளத்துணை பயன்படுத்தப்படுகிறது.
மிகப் புராதன காலந் தொட்டே உளவளத்துணைச் செயற்பாடானது பல்வேறு சமூக அமைப்புகளிலும் காணக் கூடியதாக இருந்தது. ஒரு பிரச்சினை ஏற்படும்போது வீட்டில் இருக்கும் முதியோர் அல்லது அனுபவமிக்கவர்கள் மற்றும் மதப்போதகர்கள் போன்றோர் அதற்கான வழிகாட்டல்களை அவ்வப்போது வழங்கி வந்தனர்.
எனினும், தற்போது சமூ அமைப்பில் ஏற்பட்டுள்ள துரித மாற்றங்களினால் உளவளத்துணையின் தேவை மிகவும் அதிகரித்துள்ளது. இச்சேவை இன்று இன்றியமையாததாக மாறியதற்குப் பல்வேறுவிடயங்கள்; காரணமாகவுள்ளன. இவற்றுள் பிரதானமானது சமூ, கலாசார மாற்றங்கள் ஆகும். இவை நாளுக்கு நாள் மிகவேகமாக அதிகரித்து வருகின்றன. இதனால் மக்களும் தமது பாரம்பரிய சமூக கலாசார பண்புகளை விட்டு தூரமாகச் செல்கின்றனர். இளம் சந்ததியினரின் மனப்பாங்கு, சிந்தனை, உடை, நடை, பாவனை என்பவற்றில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றங்களினால் ஒவ்வொரு வயதுப் பிரிவினருக்குமிடையில் இடைவெளிகளும் முரண்பாடுகளும் உருவாகின்றன.
மேலைத்தேய நாகரியத் தாக்கங்களின்; விளைவாக ஏற்பட்டுள்ள குடும்பக் கட்டமைப்பு மாற்றங்களினால் குழந்தை வளர்ப்பு, கணவன் மனைவி உறவு, முதியோர் பராமரிப்பு போன்றவற்றிலும் பல்வேறு பிரச்சினைகள் தற்காலத்தில் அதிகரித்துச் செல்கின்றன.
வறுமை, மாணவர் ஆசிரியர் தொடர்பாடலில் இடைவெளி, காதல் வயப்படல், பாலியல் பிரச்சினைகள் மற்றும் சம வயது நண்பர்களின் அழுத்தங்கள் போன்ற பல்வேறு காரணங்களினால் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தல், பாடசாலைக்கு ஒழுங்காக சமூகமளிக்காமை, பாடங்களில் கவனம் செலுத்தாமை, தூக்கமின்மை, மனதை ஒருமுகப்படுத்த முடியாமை பரீட்சைகளுக்கு முகங்கொடுக்க முடியாமை போன்ற பல பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றனர்.
பல்வேறு காரணங்கள் மூலம் தொழில் வாழ்க்கையில் திருப்தி அடையாமை மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி இயந்திரமயமாதல் மூலம் கணனிகளோடு மட்டுப்படுத்தபடுவதனாலும் உளநெருக்கீடு, மனித உறவுகளில் சிக்கல் போன்றவற்றை பலர் எதிர்நோக்குகின்றனர்.
பசுமை நிறைந்த கிராம வாழ்க்கைச் சூழலிலிருந்து நகர வாழ்க்கையை நோக்கிச் செல்வதால் அமையின்மை, கவலை, என்வற்றுக்கு உள்ளாகவேண்டி ஏற்படுகிறது. அதுதவிர அதிகரித்துள்ள கொலை, கொள்ளை, கடத்தல், போன்ற குற்றச் செலக்களுக்கு உள்ளாக வேண்டிய நிலையும் சிலருக்கு ஏற்படுகிறது. அத்துடன், ஊடகங்களின் கவர்ச்சிகரமான விளம்பரங்கள், நிகழ்ச்சிகள் இளம் தலைமுறையினர்களைப் உளப் பிரச்சினைகளுக்கு உள்ளாகிறது.
இவ்வாறான நிலைமைகளினால் ஏற்படுகின்ற உளப் பிரச்சினைகளிலிருந்து விடுதலை பெற்று வாழ்வை இன்பகரமாக்குவதற்கு இன்று உளவளத்துணை அவசியமாகியுள்ளமையை எவரும் மறுப்பதற்கில்லை.
அதுதவிர, பாரிய உளக்கோளாறுகள் எனக் கருதப்படுகின்ற. பித்து, மனச்சோர்வு, இருதுருவக்கோளாறு, சுற்றுக்கோளாறு, தீவிர உளமாய நோய், நாட்பட்ட உளமாயநோய் போன்ற உளக்கோளாறுகள் தவிர்ந்த எளிய உளக்கோளாறுகளாக நிர்ணைக்க்பட்டுள்ள பதகளிப்பு, பாலியல் உளக்கோளாறுகள், உடல்மெய்பாட்டுக் உளக்கோளாறுகள், ஆளுமை உளக்கோளாறுகள் போன்றவற்றை உளவளத்துணையினுடாக அடையாளம் கண்டு உளவளத்துணைத் திறன்களைப் பயன்படுத்தி சிறந்த உளவளத்துணை திட்டமிடல் மற்றும் சிகிச்சைமுறைகளினூடாகக் குணப்படுத்த முடியும். இலங்கையில் எளிய உளக்கோளாறுகளால் அதிகளவிலானோர் பாதிக்கப்ட்டுள்ளனர் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
தற்காலத்தில் உளவளத்துணையானது ஒரு முக்கிய துறையாக வளர்ந்து வருகின்றமையை உலகளாவிய ரீதியில் மாத்திரமின்றி இலங்கையிலும் காணக் கூடியதாகவுள்ளது.
இருப்பினும், உளவளத்துணையின் அவசியம் பூரணமாக உணரப்படுத்தப்படவில்லையென்றே கூற வேண்டும். உளவளத்துணையின் அவசியத்தை மக்கள் மத்தியில் உணரச் செய்ய வேண்டிய பொறுப்பு அச்சேவையைச் சார்ந்தோரின் பணியாகும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
வாழ்க்கையில் ஒவ்வொரு பக்கத்திலும் ஏற்படுகின்ற பிரச்சினைகள், அழுத்தங்கள் தகாத செயற்பாடுகள் போன்றன இலங்கை மக்களின் பலரை உளக்கோளாறுகளுக்கு உள்ளாக்குகின்றன. உளப்பிரச்சினை தொடர்பான அறிவூட்டல் சிறந்த முறையில் வழங்கப்படுவதுடன் உளவளத்துணையும் வழங்கப்படுவது அவசியமாகும். உடலியல் நோய் அறிகுறிகளைக் கண்டு அவற்றைக் குணப்படுத்தக் கொடுக்கக்கூடிய முக்கியத்துவம் உளவியல் நோய்களுக்கான அறிகுறிகள் காணப்படுகின்றபோதும் கொடுக்கப்படுவது அவசியமாகும். ஆனால், இலங்கை மக்கள் மத்தியில் உளப்பிரச்சினைகள் தொடர்பான விழிப்புணர்வு சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லையென்றே தெரிகிறது. இருப்பினும் ஒவ்வொருவரும் தங்களது உடல் நோய்களைக் குணப்படுத்துவதற்கு கொடுக்கின்ற முக்கியத்துவம் போல் தங்களிடம் உள நோய்களுக்கான அறிகுறிகள் காணப்படுமிடத்தும் அவற்றைக் குணப்படுத்த முக்கியத்துவம் வழங்க வேண்டும். ஏனெனில் உடலும் உள்ளமும் நோயின்றி இருக்கும் போதுதான் முழுமையான ஆரோக்கியத்துடன் சந்தோசமாக வாழ முடியும். உடலும் உள்ளமும் ஆரோக்கியமாகச் அமையும் போதுதான் நமது வாழ்வுப் பயணத்தின் இலக்கை நோக்கி வெற்றிப் பாதையில் பயணித்து இறைவன் உதவியுடன் நமது இலக்கின் வெற்றியை எட்ட முடியும்.
Post a Comment