பௌத்த மதவெறிக்கு இலங்கை அரசாங்கம் கடிவாளம் இட வேண்டும் - அரப் நியூஸ்
தமிழில்: லதீப் பாரூக்
(மத்திய கிழக்கைத் தளமாகக் கொண்ட அரப் நியூஸ் பத்திரிகை, இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராகத் திட்டமிட்டுத் தூண்டப்பட்டு வருகின்ற இனவாத அலைகள் குறித்து, கடந்த பதினாறாம் திகதி தனது ஆசிரியர் தலையங்கத்தில் எழுதியிருந்தது. எமது வாசகர்களுக்காக அதனை இங்கு தமிழில் மொழிபெயர்த்து வழங்குகின்றோம்).
பௌத்த மதம் குறித்த பிரபலமானதொரு பார்வை, அது சாந்தமானதொரு மதம் என்பதுதான். துரதிஷ்டவசமாக, இத்தகைய சாந்த குணம் படைத்த பௌத்தர்களில் இருந்து, மிகவும் வேறுபட்ட பக்கம் கொண்ட பௌத்தர்களை முஸ்லிம் உலகு அண்மைய ஆண்டுகளில் கண்டிருக்கிறது. மியன்மார் ரோஹிங்யா மாநிலத்தில் வாழ்கின்ற முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனச் சுத்திகரிப்புத் தாக்குதல்கள் இந்த வகையான மதவெறிச் செயற்பாடுகளுக்குரிய மிகவும் சிறந்ததொரு உதாரணமாகும்.
இதற்கான மற்றொரு உதாரணமாக, பௌத்த மதவெறி ரவுடிக் கும்பல்கள் இலங்கையிலும் தற்போது இயங்கி வருகின்றன. தலைநகர் கொழும்பில் இருக்கின்ற பள்ளிவாயல் ஒன்றின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, கட்டாயத்தின் பேரில் அது மூடப்பட்டுள்ளது.
இஸ்லாம் குறித்த பீதியைக் கிளப்புகின்ற இவ்வசிங்கமான இஸ்லாமோபோபியா பிரசாரம், தீவிர பௌத்த பிக்குகளால் தலைமை தாங்கப்படுகின்ற பொது பல சேனா என்ற அமைப்பின் செயற்பாடுகளால் ஊக்கம் பெற்றவை. இந்த பொது பலசேனா அமைப்புக்கும், மியன்மாரில் இனவழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பிக்குகளுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாகவும் வேறு சந்தேகம் நிலவுகிறது.
இலங்கை முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள், இலங்கையின் அண்மைக்கால வரலாற்றின் பின்னணியில் இருந்து பார்க்கப்பட வேண்டும். இருபது ஆண்டுகளுக்கும் அதிகமான பிரச்சினை 2009 இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியுடனும், நாட்டின் வடக்கில் அவர்களது உறுதியான நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதோடும் நிறைவுக்கு வருகிறது. சிவிலியன்கள் மத்தியில் மறைந்து கொண்டு, எந்தவொரு கிளர்ச்சித் தலைவரும் தப்பிச் சென்று விடக் கூடாது என்ற வகையில், யுத்தத்தை வெற்றி கொண்ட அரசாங்கம், தமிழர்களை கடுமையாக நடாத்துவது ஆரம்பத்தில் கண்டு கொள்ளாமல் விடப்பட்டது. இருந்த போதிலும், உடனடி மரண தண்டனைகள் இடம்பெற்றதோடு, அகதிகள் முகாம்களுக்குள் தள்ளப்பட்டு, மாதக் கணக்கில் 'செயன்முறைக்காக' அவற்றில் தங்க வைக்கப்பட்டார்கள்.
பெரும்பாலான பிரஜைகள் ஏதோ ஒரு வகையில் கொடுமைகளை சந்திக்கின்ற அளவு சிவில் யுத்தம் கசப்பான தன்மைகளைக் கொண்டிருந்தது. முரண்பாடுகளிலும், பிரச்சினைகளிலும் முழுமையாக மூழ்கிய நிலையில் ஒரு தலைமுறை வளர்ந்தது. தமிழ் புலிகளின் தோல்வியுடன் சிங்களப் பெரும்பான்மையினரின் ஒரு பகுதியினர், தமக்குப் புதியதொரு எதிரி தேவை என்று கருதியமை துரதிஷ்டவசமானது. எனவே, முஸ்லிம்களும், கிறிஸ்த்தவர்களும் தற்போது இலக்கு வைக்கப்படுகிறார்கள். முஸ்லிம்களுக்கு எதிராக சொத்து மற்றும் உடல் ரீதியாக மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல்கள் தலைநகரிற்குள் மாத்திரம் சுருங்கி இருக்கவில்லை. நாடு பூராகவும் இடம்பெற்று வருகின்ற இத்தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டு செல்வதை அவதானிக்க முடிகிறது. கிட்டடி வரை, இடம்பெற்ற வன்முறை மற்றும் பயமுறுத்தல்களின் அளவு குறைவானதுதான். விஷமிகள் ஒரு சிலரின் வேலையாக இவற்றைக் கருதி விட முடியும்தான். ஆனால், இத்தாக்குதல்கள் அனைத்திலும் ஒரே விதமான ஒழுங்கை அவதானிக்க முடிகிறது. முஸ்லிம்களுக்கெதிரான எல்லாக் குற்றச் செயல்களுக்கும் பொது பல சேனாதான் பொறுப்பு என்றில்லையானாலும், அதன் ரவுடித் தனமான செயல்பாடுகள் ஏனையவர்களையும் தூண்டி வருகின்றது என்பது உறுதியானது.
இக்கும்பலின் நடவடிக்கைக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்கு மிக உறுதியாகவும், தீர்மானகரமான தன்மையுடனும் கொழும்பு அரசாங்கம் செயற்பட வேண்டும் என மிக உறுதியாக அழுத்திச் சொல்ல முடியாது. பிரச்சினை என்னவென்றால், குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களைக் கண்டு பிடித்து, சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு பொலிஸார் காட்டி வருகின்ற குறிப்பிடத்தக்க தயக்கம்தான். செயற்பாடற்ற தன்மையும், விரைத்துப் போன தன்மையும் மட்டுமல்ல பிரச்சினை.
இலங்கை முஸ்லிம்கள் தாம் வெறுப்புணர்வை ஊக்குவிப்பதாக வேறு குற்றம் சுமத்தப்படுகின்றார்கள் போல் தோன்றுகிறது. கடந்த வார வன்முறையின் மையமாக இருந்த கொழும்புப் பள்ளிவாயலின் நிர்வாகிகள், குறைந்த பட்சம் தற்காலிகமாகவாவது, அக்கட்டிடத்தை மூடிவிடுவதற்குத் தூண்டப்பட்டமைக்கு இதனை விட வேறு எந்த வியாக்கியாணத்தை வழங்க முடியும்?
இது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. பள்ளி வாயல் தொடர்பில் ஆத்திரமூட்டுகின்ற அம்சம் எதுவும் இருக்க முடியாது. சகல பிரசைகளுடையவும், சகல சொத்துக்களையும் பாதுகாப்பது பொலிஸ் திணைக்களத்தின் கடமையாகும். கொழும்பில் அவதானித்த வலுச் சண்டைக்கு இழுக்கின்ற செயற்பாடுகளும், மிரட்டல்களும் தொடராமல் இருப்பதை உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமையாகும். துரதிஷ்டவசமாக, தனது கடமையை நிறைவேற்றாமல் இருப்பதன் மூலம், மஹிந்த ராஜபக்ஷ நிர்வாகம் முழுமையாகத் தவறானதொரு சமிக்ஞையையே வெளியிட்டு வருகிறது.
பொது பல சேனாவின் அங்கத்தவர் சிலரை வெறுப்பைத் தூண்டிய குற்றங்களுக்காக சட்டத்தின் முன் நிறுத்துவதற்குரிய போதுமான ஆதாரங்கள் இருப்பதாக ராஜதந்திர மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும். இவர்களது குற்றங்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில், அதிக பட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். இத்தகைய செயல்பாடுகளை அரசாங்கம் சகித்துக் கொள்ளாது என்பதை அரசாங்கம் தெளிவாக வெளிப்படுத்துவது அவசியமாகும்.
சிவில் சுதந்திரம், மனித உரிமை விவகாரங்களில் மோசமான பெயர் எடுத்திருக்கின்ற ஜனாதிபதி தனது கலங்கப் பட்டிருக்கின்ற பெயரை ஒரு முறை திரும்பிப் பார்ப்பதற்கு வகுப்புவாத மதவெறியர்களை அடக்குவது ஒரு நல்ல ஆரம்பமாக இருக்க முடியும். துரதிஷ்டவசமாக, ராஜபக்ஷ தடிப்பமான அரசியல் தோல் கொண்டவராகத் தோற்றமளிக்கிறார். சிவில் யுத்த கால நடவடிக்கைகள் குறித்த ஐ.நா மனித உரிமை கவுன்ஸிலில் அவர் மீது குற்றச் சாட்டுக்கள் காணப்படுகின்றன. நாட்டின் சகல சிறுபான்மையினரையும் ராஜபக்ஷ நிர்வாகம் நடாத்துகின்ற விதம் குறித்தும் ஐ.நா நிருவனத்திற்கு சீரியஸான கவலைகள் உண்டு.
பிரித்தானியப் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை, இவ்வருடம் நவம்பரில், ராஜபக்ஷ இலங்கையில் நடாத்துவதற்கு இருக்கின்றார். இலங்கையின் மோசமான மனித உரிமை தொடர்பான பதிவுகள் காரணமாக தாம் பங்குபற்றாமல் இருக்கலாம் என சில நாடுகள் தெரிவித்திருந்தன. அவை தமது நிலைப்பாட்டை மீள் பரிசீலனை செய்ய வேண்டும். எதுவித முன்னேற்றமும் இல்லையாயின், எல்லா நாடுகளும் மாநாட்டில் பங்குபற்றி, மிகவும் விரிவான வார்த்தைகளில் ராஜபக்ஷவைக் கண்டிப்பதற்கும், வெட்கம் அடையச் செய்வதற்கும் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் (16, ஆகஸ்ட், 2013).
Post a Comment