தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேடையில் அஸ்மின் (நளீமி) ஆற்றிய உரை
வடமாகாண சபைத் தேர்தல்- 2013 யாழ்- மாவட்டம் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் PMGG தலைமையிலான முஸ்லிம் கூட்டமைப்பின் வேட்பாளர் சகோதரர் அஸ்மின் அய்யூப் நிகழ்த்திய உரையின் சுருக்க வடிவம்
அவையின் தலைவர் அவர்களே! கட்சியின் தலைவர் அவர்களே! முதன்மை வேட்பாளர் அவர்களே! கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களே! இங்கே கூடியிருக்கின்ற எனது உறவுகளே தங்கள் அனைவருக்கும் மாலை வந்தனங்கள்!
நம்பிக்கை தருகின்ற சபையிலே எதிர்கால குறித்த நம்பிக்கையான தூரநோக்குகளோடு உங்களை சந்திக்கின்றமை மிகவும் மகிழ்ச்சியை, புத்துணர்வை, உத்வேகத்தைத் தருகின்றது. நம்பிக்கை தரும் சபை என்னும்போது இங்கே கூடியிருக்கின்ற கட்சியின் தொண்டர்களையும் கட்சியின் உயர்மட்ட தலைவர்களையும் நான் குறித்து நிற்கின்றேன்.
இங்கே கூடியிருக்கின்ற கட்சித் தொண்டர்கள் காசுகொடுத்துக் கொண்டுவரப்பட்டவர்கள் அல்ல. சலுகைகளுக்குப் பின்னால் அணிதிரண்டவர்களும் அல்ல. மாறாக கட்சியின் மீதுகொண்ட பற்றுறிதி அவர்களை இந்த இடத்திற்கு அழைத்து வந்திருக்கின்றது, கட்சியின் முடிவுகளின் மீது கொண்ட நம்பிக்கை அவர்களை இந்த இடத்திற்கு அழைத்து வந்திருக்கின்றது. கட்சியின் வெற்றி என்னும் இல்லக்கு அவர்களை இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கின்றது. அது எமக்கு நம்பிக்கை தருகின்றது.
அடுத்து கட்சியின் முன்மாதரி மிக்க தலைவர்கள். பதவிகளுக்காகவும், சலுகைகளுக்காகவும், சுயநலன்களுக்காகவும் போட்டாபோட்டி போடுகின்ற அரசியல் தலைவர்கள் வாழுகின்ற எமது நாட்டில் கொள்கைகளுக்காகவும் , உரிமைப் போராட்டத்திற்காகவும் மக்களுக்காகவும் வாழ்கின்ற தலைவர்களை நாம் நேரடியாக காணுகின்றோம், அண்ணன் மாவை சேனாதிராஜா அவர்கள் ஒரு தடவை குறிப்பிட்டார் “ நான் பாராளுமன்றத்திலே மக்களுக்காக குரல் கொடுக்கின்ற உயர்வான பணியினைச் செய்கின்றேன், என்னை வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் வேட்பாளராக கடமையாற்றுவது குறித்து பரிசீலிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது, அத்தகைய ஒரு முடிவை எடுப்பதற்கு எனக்கு ஒரு வருடம் தேவைப்பட்டது. ஆனால் அந்த முடிவில் மாற்றத்தை ஏற்படுத்தி இன்னுமொருவரை முதலமைச்சராக களம் இறக்குவோம் என்று கட்சி தீர்மானித்தபோது அந்த முடிவை ஏற்றுக்கொள்வதற்கு எனக்கு ஒரு சில நிமிடங்களே தேவைப்பட்டது” என்றார். இத்தகைய உயர்வான பண்புகளைக் கொண்டவர்கள் வீற்றிருக்கின்ற மேடையில் ஒன்றாக இருப்பது எனக்கு மகிழ்வையும் உத்வேகத்தையும் வழங்குகின்றது.
இந்த உலகில் மனிதன் மிகவும் முக்கியமானவனாக இருக்கின்றான், மனிதன் சாதனைகள் பலதை செய்கின்றான், மனிதன் உயர்வான இலக்குகளை நோக்கி நகர்கின்றான், பிரபஞ்சத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் வல்லமையினையும் மனிதன் தன்னகத்தே கொண்டிருக்கின்றான். ஆனால் “மனிதம்” மதிக்கப்படாத ஒன்றாக மாறிவிட்டது, மனிதம் சீரழிக்கப்படுகின்றது, மனிதம் அழிக்கப்படுகின்றது, மனிதன் அகௌரவப்படுத்தப்படுகின்றது. மனிதம் குறித்த மக்கதான சிந்தனைகளையும் பார்வைகளும் இல்லாமலாக்கப்பட்டுவிட்டன. இதன் விளைவுகளை இன்று நாம் எல்லோரும் அனுபவிக்கின்றோம். எமது பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதிலும் நாம் சிக்கல்களை எதிர்நோக்குகின்றோம். இது மிகவும் துர்ப்பாக்கியமான நிலைமையாகும்.
இனரீதியான அடையாளங்களை முதன்மைப்படுத்தி, மனிதம் என்ற அடையாளத்தைப் புறந்தள்ளியதன் விளைவாக இன்றுவரை ஒரு முரண்பாட்டு சூழலில் நாம் எல்லோரும் அழிவுகளை எதிர்கொள்கின்றோம், முரண்பாடுகளின் விளைவாக எமக்குள் நாம் போரிட்டுக் கொள்கின்றோம், அழிவுகளை ஏற்படுத்துகின்றோம், இதன் விளைவாக நாம் வாழ்கின்ற பிரதேசம் சுடுகாடாக மாறிக் கொண்டிருக்கின்றது.
இந்த பயங்கரமான நிலைமையினை மாற்றியமைக்க வேண்டும், ஒரு உன்னதமான பூமியில் நாம் வாழ வேண்டும் அதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்று சிந்தித்த ஒரு சில வாலிபர்கள் ஒரு சிலர் தர்மம், பொது நீதி, சமாதானம், மனித நேயம், சகோதரத்துவம், சமூகப் பொறுப்பு, வெளிப்படைத் தன்மை போன்ற நல்லாட்சி விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட அரசியல் முயற்சியொன்றினை மேற்கொள்ள முன்வந்தார்கள். நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம், நீதிக்கும் சமாதானத்துக்குமான முன்னணி, ஆய்வு மற்றும் கலந்துரையாடலுக்கான மத்திய நிலையம் என்பன முஸ்லிம் சமூகத்தில் முன்மாதரிமிக்க அரசியல் முயற்சிகளில் தம்மை அர்ப்பனத்துடன் ஈடுபடுத்திக் கொண்டார்கள். காத்தான்குடி, கிண்ணியா ஆகிய நகர சபைகளில் முக்கியமான எதிர் கட்சிகளாகவும் அவை செயலாற்றுகின்றன. இந்த நிலையில் வடக்கு மாகாணசபைத் தேர்தல் எம் முன்னால் வந்து நின்றது. வடக்குத் தேர்தலில் எவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ள முடியும் என நாம் சிந்தித்தபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னும் அரசியல் இயக்கத்துடன் இணைந்து செயலாற்றுவதே மிகவும் பொறுத்தமானது என்ற தீர்மானம் எவ்வித முரண்பட்ட கருத்துகளுமின்றி நிறைவேற்றப்பட்டது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டத்தினருடன் எமது தீர்மானம் குறித்து பேச்சுக்களை நடாத்தினோம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எம்மை இருகரம் நீட்டி வரவேற்றார்கள், எமது சிந்தனைகள் எமது நோக்குகளின் பால் அவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டது, முஸ்லிம் சமூகத்தில் பெரிய அரசியல் கட்சிகள் இருக்கின்ற சூழ்நிலையிலும் எம்மோடு கூட்டமைப்பு அரசியல் இணக்கப்பாடுகளை மேற்கொண்டமையானது பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தியிருப்பினும் இந்தச் சிறிய அரசியல் கூட்டு முஸ்லிம் சமூகத்தில் நேர்மையான அரசியல் அடையாளமாக மாறும் என்ற நம்பிக்கை அவ்வாறான அரசியல் இணக்கப்பாட்டிற்கான காரணமாக அமைந்தது.
முஸ்லிம்கள் சார்பாக தமிழ் அரசியல் இயக்கத்தோடு எமக்கு ஏற்பட்டிருக்கின்ற இணக்கப்பாடானது பல்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டது.
1980களுக்கு முன்னர் நிலவிய சகோதரத்துவ உணர்வுடன் கூடிய, உடன்பிறப்புகளைப் போன்று எண்ணுகின்ற அரசியல் இணக்கப்பாடு தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் உருவாக வேண்டும், அதனூடாக இலங்கையில் சிறுபான்மை சமூகத்திற்கான உரிமைகளை வென்றெடுக்க முடியும் என நாம் நம்புகின்றோம்.
இலங்கையில் முஸ்லிம் சமூகம் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றது, பள்ளிவாயல்கள் தாக்கப்படுகின்றன, முஸ்லிம்களின் அடிப்படை மத உரிமைகள் கேள்விக்குள்ளாக்கப் படுகின்றன, வர்த்தக முயற்சிகள் அச்சுறுத்தப்படுகின்றன, இவ்வளவு நிகழ்ந்தும்கூட அரசோடு ஒட்டிக்கொண்டிருக்கின்ற பல முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மௌனமாக இருக்கின்ற நிலையிலும் அதற்கெதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்கின்றார்கள். இது எமக்கு நம்பிக்கை தருகின்றது. ஒடுக்கப்படுகின்ற முஸ்லிம்களுக்காக குரல்கொடுக்கக்கூடிய ஒரு அணியோடு இணைந்திருப்பது நியாய பூர்வமானதாகவே எமக்குப் புலப்படுகின்றது.
யுத்தத்திற்கு பின்னரான வட இலங்கையின் அபிவிருத்தி குறித்து பரவாலக கவனம் செலுத்தப்படுகின்றது. உண்மையில் மக்களால் ஏற்றுக்கொள்ளத்தக்க மக்களுக்குத் தேவையான நியமங்களுக்கு அமைவான அபிவிருத்தியே வடக்கிற்கு தேவைப்படுகின்றது, வெளியில் இருந்து இயக்குகின்ற அபிவிருத்தி செயற்திட்டம் மக்களால் நிராகரிக்கப்படும். வடக்கின் பூர்வீகக் குடிகளாகிய தமிழ் , முஸ்லிம், சிங்கள மக்களின் பிரதிநிதிகளே அவ்வாறான அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். மாற்றமாக நாம் அவற்றை செயற்கையான அமைப்பில் முன்னெடுக்கின்றபோது ஊழல் மிகுந்த, மக்களின் நலன்களை கண்டுகொள்ளாத அபிவிருத்தி முயற்சியே மேற்கொள்ளப்படும், எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு இணைந்து ஊழல் மோசடியற்ற மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கக்கூடிய நிலையான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நிறைவேற்ற முடியும் என நம்புகின்றோம்.
அதேபோன்று வடக்கில் 1990களில் நிகழ்ந்த பலவந்த வெளியேற்றம் என்னும் துன்பியல் நிகழ்வினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் வடக்கில் குடியேறவேண்டும் அவர்களது இருப்பு, மீள்குடியேற்றம், ஏனைய சமூகங்களுடனான நல்லிணக்கம் குறித்த விடயங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும் எனவே அத்தகைய முயற்சிகளுக்கு நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு இணைந்து செயலபடவேண்டிய தேவை இருக்கின்றது.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக யுத்தத்திற்குப் பின்னரான இலங்கையில் சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கம் சகவாழ்வு குறித்து சிந்திக்கவும் செயலாற்றவும் அதிக தேவைப்பாடு இருக்கின்றது. யுத்ததினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட சமூகங்களாகிய தமிழ்- முஸ்லிம் சமூகங்களின் நல்லிணக்கம் குறித்து நாம் காத்திரமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், அது தேசிய நல்லிணக்கத்தின் ஒரு முக்கிய கூறாக அமையும், எனவே தேசிய நல்லிணக்கத்தினை நோக்காக கொண்டு பிராந்திய ரீதியான நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் என்னும் முயற்சியாகவும் எமது முயற்சி அமைகின்றது.
எனவே தமிழ் முஸ்லிம் சமூகங்கள் இரண்டு இணைந்து பணியாற்றுவதற்கான காலம் ஏற்பட்டிருக்கின்றது. இதனை நாம் சாதகாமாகப் பயன்படுத்துவோம் என பொதுவாக அழைப்பு விடுத்து வாய்ப்புக்கு நன்றிகூறி விடைபெறுகின்றேன்
Post a Comment