Header Ads



ஜிம்முக்கு சென்றால் மட்டும் போதுமா..?


ஜிம்முக்கு சென்று வருத்தும் அளவுக்கு உடற்பயிற்சி செய்து கிடைக்கும் வாட்டசாட்டமான உடல் மட்டுமே ஆரோக்கியத்தை குறிப்பதாக  எடுத்துக்கொள்ள முடியாது. உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் அதனதன் தன்மை பிறழாமல் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம்.

ஒவ்வொருவரும் தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மேற்கொள்ளவேண்டிய உடற்பயிற்சிகள் குறித்து பிசியோதெரபிஸ்டை அணுகி  ஆலோசனை பெறவேண்டும். அப்போதுதான் தங்கள் உடலுக்கு ஏற்ற பயிற்சி எது என்பதை அறிந்து பின்பற்றி பயன்பெற முடியும். உங்களின் உடலை  குண்டாக ஆக்க வேண்டுமோ ஒல்லியாக ஆக்க வேண்டுமா, கட்டுக்கோப்பான உடலை பெறவேண்டுமா என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும்.

அதன்பிறகு அந்த இலக்கை அடைவதற்கு தேவையான உடற்பயிற்சிகளை பிசியோதெரபிஸ்ட் பரிந்துரை செய்வார். உடற்பயிற்சி மேற்கொள்ள  துவங்கிய பிறகு ஒவ்வொரு மாதமும் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பதிவு செய்ய வேண்டும். எல்லோருக்கும் ஒரே மாதிரியான உடற்பயிற்சி  மேற்கொள்வது சாத்தியம் இல்லை. குறிப்பாக முதுகு வலி போன்ற பிரச்னையால் அவதிப்படுபவர்கள் சில உடற்பயிற்சிகளை தவிர்க்க வேண்டும்.

உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு உடற்பயிற்சிகள் மட்டுமே போதாது. அவரவருக்கு ஏற்ற உணவு முறை அவசியம். இதற்கென ஊட்டச்சத்து  நிபுணரிடம் ஆலோசனை பெறவேண்டும். அவர் ஒவ்வொருவருக்கும் ஏற்ற உணவு முறைகளை விளக்குவார். அதற்கு முன்னதாக உடல் எடை, உயரம்,  வாழ்க்கை முறை, உணவு பழக்கவழக்கங்கள் போன்றவற்றை ஆராய்ந்து அடையவேண்டிய உடல் நிலையை எட்டுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய  உணவு முறை பற்றி பரிந்துரை செய்வார்.

இதனை குறைந்தபட்சம் ஒரு மாதத்துக்காவது கடைப்பிடித்து, உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றங்களை குறிப்பெடுக்க வேண்டும். அதன்பிறகு  உணவு முறைகளில் தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம். உடல் எடையை குறைக்கும் பட்சத்தில் ஊட்டச்சத்து குறையாமல் சரிவிகித  உணவு முறையை எடுத்துக்கொள்ள வேண்டும். இது பற்றியும் ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையை பின்பற்ற வேண்டும்.

அனைத்து வசதிகளும் உள்ள நவீன உடற்பயிற்சி மையத்தில் இருதய நாளங்களை சீர்படுத்துதல், உடல் எடையை கூட்டவோ குறைக்கவோ உதவும்  உடற்பயிற்சி கருவிகள், நீராவி குளியல் வசதி போன்றவை இருக்கும். தவிர, ஊட்டச்சத்து நிபுணர், பிசியோதெரபிஸ்ட் ஆலோசனைகள் வழங்கப்படும்.  மேலும், யோகா, ஏரோபிக் உடற்பயிற்சிகள், டேபிள் டென்னிஸ் விளையாட்டு அரங்கம் போன்றவையும் இருக்கும்.

இருதய ரத்த நாளத்தை சீர்படுத்தும் பிரிவில் நடைபயிற்சி கருவி (டிரட் மில்), சைக்கிளிங், இஎப்எக்ஸ் கருவி போன்றவை இருக்கும். டிரட்மில்  கருவியில் மெதுவான, வேகமான நடைபயிற்சி மற்றும் ஜாகிங் மேற்கொள்ளலாம். இது உடலை வலிமைப்படுத்துவற்கு உதவுகிறது. தேவையற்ற  கலோரிகளை எரித்து கட்டுக்கோப்பான உடலை பெறுவதற்கு உறுதுணையாக இருக்கிறது. இஎப்எக்ஸ் கருவியானது மார்பு, கை போன்ற உடலின்  மேல்பாகம் மற்றும் கால், தொடை போன்ற கீழ்பாகத்தை வலிமைப்படுத்துவதற்கு உதவுகிறது.

சைக்கிளிங் செய்வதன் மூலமும் கால்கள் வலுப்பெறுகின்றன. துடுப்பு படகு பயிற்சியானது உடல் முழுவதையும் சீர்படுத்துகிறது. இவ்வாறு தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம், உடல் வளையும் தன்மை, வலிமை, எதையும் தாங்கும் உடல் திறன் பெறலாம். கால்களால் பெடல் செய்வது போன்ற பயிற்சிகள் கால்களை வலுவானதாக ஆக்குகிறது. ‘லாட் புல் டவுன்‘ கருவியில் பயிற்சி செய்வதால் மார்பு பகுதிகள் நன்கு விரிவடையும். ஸ்மித், ஆப்ஸ் கருவிகள் உடலின் பல பகுதிகளுக்கும் பயிற்சி செய்ய பயன்படுகிறது.

No comments

Powered by Blogger.