முஸ்லிம்கள் மத்தியில் அரசாங்கம் மீது ஆத்திரமும் ஆவேசமும் நிரம்பியுள்ளது - ஹக்கீம்
(அஸ்-ஸாதிக்)
அரசாங்கம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு நன்றிக்கடனுடையதாக இருக்கும் என்று நம்புவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் நம்பிக்கை தெரிவித்தார். மத்திய மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு கண்டி மஹிய்யாவையில் 23.08.2013 நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் தொடர்ந்தும் குறிப்படுகையில் ,
அரசாங்கத்திற்கு 18 ஆவது திருத்தச் சட்டத்தில் மூன்றில் இரண்டு ஆதரவை வழங்கி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தைப் பலப்படுத்தியுள்ளது. எனவே அரசாங்கம் எம்முடன் நன்றிக் கடனுடன் நடந்து கொள்ளும் என்று நம்புகின்றேன். மத்திய மாகாணத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகின்றது. இவர்களை எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி விமர்சிப்பதில்லை. எதிர்காலத்தில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அமைக்க வேண்டுமானால் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் உதவி தேவைப்படும் என்பதால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விமர்சிப்பது இல்லை.
2001 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி அட்சியமைக்க முஸ்லிம் காங்கிரஸ் உதவியது. 2004 இல் ஆட்சியைப் பறிகொடுத்த ஐக்கிய தேசிய கட்சிக்கு 2014 இல் பத்து வருடங்களை அடைந்தாலும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமானால் பெரும்பான்மை மக்களின் வாக்குகளை ஐக்கிய தேசி கட்சி உள்வாங்கிக் கொள்ள வேண்டும். இது யதார்த்தம். ஆனால் பெரும்பான்மை வாக்குகளைக் கவர்ந்து அரசாங்கத்தை அமைப்பதற்கான நகர்வுகளை எடுக்க வேண்டிய ஐக்கிய தேசிய கட்சி அதனை செய்யாது எம்மை விமர்சித்துத் திரிகின்றது.
ஐக்கிய தேசிய கட்சியின் மூலம் கண்டி மாவட்டதில் இருந்து நானும் காதர் ஹாஜியாரும் பாராளுமன்றத்திற்கு சென்றோம். பின்பு இருவரும் அரசாங்கத்தின் பக்கம் போய் சேர்ந்து கொண்டோம். இது பிழையானது. இது துரோகத்தனமானது என்று தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அரசாங்கத்துடன் இணைந்து கொண்டது என்ற விடயம் ஆழமாக சிந்தித்து விமர்சனத்திற்குள்ளாக்கப்பட வேண்டிய விடயமாகும். ஏனெனில் நான் ஒரு கட்சியின் தலைவன். என்னுடன் பதினொரு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். நான் அவர்களுக்கும் பதில் சொல்ல வேண்டும். எனவே நான் கட்சியையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டு வருவதன் பின்னணியில் முஸ்லிம் மக்கள் மத்தியில் அரசாங்கம் மீது ஆத்திரமும் ஆவேசமும் நிரம்பியுள்ளது. இதனை முன்வைத்து ஐக்கிய தேசிய கட்சி அரசியல் நடாத்த முற்பட்டுள்ளது. அரசாங்கத்தை உள்ளேயிருந்து எதிர்ப்பது, விமர்சிப்பது என்பது காத்திரமான விடயமாகும். நாம் அரசாங்கத்தை விட்டு வெளியே வந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சத்தியக்கிரயங்களில் ஈடுபடுவது என்பதெல்லாம் பயனற்ற விடயங்களாகும். ஐக்கிய தேசிய கட்சி என்ன தான் நம்பிக்கை வைத்தாலும் இத்தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படும் வாய்ப்பு இல்லை. ஐக்கிய தேசிய கட்சி தனது பலயீனத்தை மறைக்க எம்மை விமர்;சித்து வருகின்றது.
எதிர்வரும் மத்திய மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியினால் ஆட்சி மாற்றமொன்றைக் கொண்டு வர முடியாது. ஐக்கிய தேசிய கட்சி வெலிவேரியா சம்பவத்தை முன்னிருத்தி பெரும்பான்மை மக்கள் மத்தியில் கூட வாக்குப்பலத்தைப் பெற்றுக்கொள்ள முடியாத பலயீன நிலையில் உள்ளது.
நாட்டில் பொலிஸாரின் நடவடிக்கைள் தொடர்பாக விமர்சனங்கள் மேலெழும்பி வரும் சூழ்நிலையில் ஜனாதிபதி புதிய அமைச்சொன்றை உருவாக்கியுள்ளார். இதற்கு தனியாக ஒரு செயலாளர் நிமிக்கப்பட்டுள்ளார். இந்துனேசியாவில் தூதுவராக இருந்த ஜெனரல் மல்லவராச்சி செயலாளராக நியமிக்கப்பட்ள்ளார். அதேவேளை அவரின் தம்பி கோட்டாபய ராஜபக்சவின் கீழ் இருந்த சில விடயங்கள் புதிய அசை;சின் கீழ் கொண்டு வரப்படவுள்ளது. இதன் அடிப்படையில் பொலிஸ் திணைக்கம் புதிய அமைச்சின் கீழ் கொண்டு வரப்படுகின்றது. பாதுகாப்பு அமைச்சின் கீழ் பொலிஸ் திணைக்களமும் இருந்தது. எனினும் வெலிவேரிய சம்பவத்தில் இராணுவம் நிறைய விமர்சனங்களை சம்பாதித்துக் கொண்டமையால் பொலிஸ் துறையும் இராணுவத்துடன் ஒன்றாக இருக்கும் போது பொலிசாரும் இராணுவம் போல் செயற்படக்கூடாது என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்துள்ளது. சட்டத்திற்கும் ஒழுங்கிற்கும் புதிய அமைச்சு உருவாக்கப்பட்டமைக்கு காரணம் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் விடயத்தில் சில குறைபாடுகள் இருந்துள்ளது என்பதாகும்.
18 ஆவது திருத்திச் சட்டத்தின் மூலம் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் பலத்தை வழங்கிய முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டிய எந்த அவசியமும் இல்லை. அரசாங்கத்தை பலம்பொருந்திய அரசாங்கமாக மாற்றி விட்டு அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டிய தேவை எமக்கில்லை. எனவே ஜனாதிபதி எமக்கு நன்றிக் கடனுடையவராக இருப்பார் என்று நம்புகின்றோம். அரசாங்கத்திற்கு 18 வது திருத்தச் சட்டத்தின் மூலம் ஆதரவளித்த முஸ்லிம் காங்கிரஸ் பலமான அரசியல் இயக்கமாக இருக்கின்றது.
விகிதாசார முறையில் காணப்படும் சில நன்மைகளை அநுபவிப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் முற்பட்டுள்ளது. எம்மை விடவும் இலங்கை தொழிலாளர் கண்டி மாவட்டத்தில் அரைப்பங்கு குறைந்த தமிழ் வாக்குகளைக் கொண்ட நிலையில் தனித்து போட்டியிடுவதாயின் எம்மால் ஏன் முடியாது. கண்டியில் 1 இலட்சத்து 20 ஆயிரம் முஸ்லிம் வாக்குகளும் 60 ஆயிரம் தமிழ் வாக்குகளும் உள்ளன. எனவே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதில் தவறு இல்லை என்று கூறுபவர்கள் ஏன் எம்மை தவறு என்கின்றனர்.
முஸ்லிம் காங்கிரஸிற்கு மக்கள் மத்தியில் ஆதரவுத்தளம் உள்ளது என்பது யாவரும் அறிந்து வைத்திருக்கும் விடயமாகும். இந்த தேர்தலின் மூலம் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை விமர்சனத்திற்குள்ளாக்குவதை அரசுக்கு தெளிவாக கூற வேண்டும்.
ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சிக்கு தாவும் படலம் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. இதன் விளைவு ஜனநாயக நாட்டில் பலமான எதிர்க்கட்சி இல்லை என்ற நிலையை உருவாக்கி வருகின்றது. ஐக்கிய தேசிய கட்சிக்காரர்கள் கட்சி தாவுதல் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவை குற்றம் சுமத்துவதில் அhத்தம் இல்லை. நான் சிறியதொரு கட்சியை வைத்துக் கொண்டு படும்பாட்டை நோக்கும்; போது அவர் படும்பாடு எவ்வாறு இருக்கும். இதற்காக எமக்கு ஐக்கிய தேசிய கட்சிக்கு கைகொடுக்க முடியாது. நாம் இதற்கு முன்பு ஐக்கிய தேசிய கட்சிக்கு கழுத்தையும் கொடுத்துள்ளோம்.
இம்மாகாண சபைத் தேர்தலில் விகிதாசார தேர்தல் முறையின் மூலம் கிடைக்கும் நன்மைகள் மூலம் முஸ்லிம் காங்கிரஸின் பேரம் பேசும் சக்தியை பலப்படுத்தும் என்று நம்புகின்றோம் என்றார். இதில் மத்திய மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் முதன்மை வேட்பாளர் ஏ.எல்.எம். உவைஸ் மற்றும் றிஸ்வி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
deffinatly kandy muslims teach your party.wait and see.
ReplyDeletewhere is my commence?
ReplyDelete