Header Ads



ஊடகவியலாளர்களை கறுப்பு பட்டி அணியுமாறு வேண்டுகோள்

(ஏ.எல்.ஜுனைதீன்)

    உள்நாட்டு ஊடகவியலாளர்கள் மீது அண்மைக் காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும்  தாக்குதல்    சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கையில் கறுப்புப் பட்டி அணியும் போராட்ட இயக்கமொன்றை இலங்கை ஊடகவியலாளர்கள் தொழிற் சங்கம் ஆரம்பித்துள்ளது.கடமையிலிருக்கும் ஊடகவியலாளர்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள ஊடக அங்கீகார  மதிப்புடமை குறித்தும் இத் தொழிற் சங்கம் கேள்வியும் எழுப்பியுள்ளது.

   மேற்படி சங்கத் தலைவர் எம் ஐ. அபேவிக்கிரம இது குறித்து தெரிவித்துள்ளதாவது,

   அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்டு வரும் அங்கீகார அட்டையில் ஊடகவியலாளர் தனது கடமையை இடையூறு எதுவுமின்றி செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அரசாங்கத் தகவல் திணைக்களம் அனைவரையும் வேண்டிக் கொள்கின்றது என கூறப்பட்டுள்ளது. குறித்த அட்டை அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன அத்துகலவினால் கையெழுத்தும் இடப்பட்டுள்ளது.

   அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள ஊடக அங்கீகார அட்டைகளுடன் கடந்த வாரம் தங்களின்  தொழில் சார் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஊடகவியலாளர்கள் மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தாக்கப் பட்டுள்ளதால்  குறித்த அட்டையின் மதிப்பு கேள்விக் குறியாகியுள்ளது.

   ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களைக் கண்டிக்கும் வகையில் கையில் கறுப்பு பட்டிகளை அணிந்து நடாத்தப்படவுள்ள போராட்டத்தில் இணைந்து அரசியலமைப்பினால் உத்திரவாதப்படுத்தப்பட்டுள்ள ஊடகத் தொழில்சார் கடமைகளைச் செய்ய விடாது தடுக்கும் வகையில் ஊடகவியலாளர்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களுக்கு எதிராக உரத்துக் குரல் எழுப்ப முன் வருமாறு நாம் ஊடக சேவையில் ஈடுபட்டு வரும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் அறை கூவல் விடுக்கின்றோம். தங்கள் கடமை நேரத்தின் போது தாக்குதல்களுக்குள்ளான எமது சக ஊடகவியலாளர்களுக்கு எமது தார்மீக ஆதரவைத் தெரிவிப்பதற்கும் இடையூறின்றி கடமையாற்றும் உரிமையைக் கோருவதனை வெளிப்படையாகக் காண்பிக்கும் முகமாகவும் தங்கள் கைகளில் கறுப்பு பட்டிகளை அணிந்து கொள்ளுமாறு நாம் அனைத்து ஊடகவியலாளர்களையும் வேண்டிக் கொள்கின்றோம். என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.