Header Ads



எல்லோருக்கும் அழகிய பெண் தேவை - அமைச்சர் அதாஉல்லா

(ஜே.எம். வஸீர்)

உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை உள்ளுர் ஆளுகை நிறுவகம் சிங்கள மொழியில் மாத்திரம் உள்ளுராட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகளுக்கும். ஊழியர்களுக்கும் உள்ளுராட்சியில் டிப்ளோமா என்ற பாடநெறியை நடாத்தி டிப்ளோமா சான்றிதழ் வழங்கி வந்த நிலையில் வரலாற்றில் முதற்தடவையாக உள்ளுராட்சி மற்றும்  மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களின் வழிகாட்டலின் கீழ் தமிழ் மொழி மூலம் டிப்ளோமா பாடநெறி ஆரம்பிக்கப்பட்டு அப்பாடநெறியை நிறைவு செய்த 69 ஊழியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க தேசிய மாநாட்டு மண்டப கேட்போர் கூடத்தில் உள்ளுர் ஆளுகை நிறவத்தின் நிறைவேற்று அதிகாரி ஐ.ஏ. ஹமீட் தலைமையில்  நடைபெற்றது.

இங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர். ஏ.எல்.எம். அதாஉல்லா,

எமது நாடு சிறிய நாடாக இருந்தாலும் அழகிய இயற்கை வளங்கள் கூடுதலாகக் காணப்படும் நாடாக இருக்கின்றது. அனைத்துலக நாடுகளையும் ஒப்பிட்டு பார்க்கும் போது எமது நாடு பிரதானமாக மூன்று இனங்களும் இரண்டு மொழிகளுமே காணப்படுகின்றது. மற்றைய நாடுகளை பார்த்தால் நூற்றுக்கு மேற்பட்ட மொழிகளும் அதைவிட அதிகமான மதங்களும் காணப்படுகின்றது. நமது நாட்டில் இவ்வாறு இருக்கும் நிலையில் நமக்குள் நிறைய பிழவுகள் காணப்படுகின்றது. அவ்வாறு நூற்றுக்கு மேற்பட்ட மொழிகளும், மதங்களும் காணப்படுகின்ற நாடுகளிலுள்ள பிரச்சினைகளை விட நமது நாட்டில் இனங்களுக்கிடையில் அதிகம் பிரச்சினை இருக்கின்றது. அதனைவிடவும் இவற்றையெல்லாம் சில அரசியல் சக்திகள் திட்டமிட்டு உருவாக்குவதோடு, அதனூடாக இனங்களுக்கிடையில் அமைதியின்மையை ஏற்படுத்தி சமாதானம் நிலவுகின்ற எமது நாட்டை குழப்ப முயற்சிக்கின்றனர்.

நமது சிறிய நாட்டிற்குள் நாம் ஏன் இனரீதியாக பிளவுபடுகின்றோம் என்பதை சிந்தித்துப் பாருங்கள். சிங்களம், தமிழ், முஸ்லிம் என்று ஏன் ஒருவருக்கொருவர் முரண்படுகின்றோம். நாம் இலங்கையர்கள் என்ற உணர்வு இருக்க வேண்டும். அவரவரது மத உரிமைகளோடு வாழ வேண்டும். அதற்காக நாம் இனரீதியாக பிளவுபடக்கூடாது. மூவினங்களும் நிம்மதியாக வாழ வேண்டும். 30 ஆண்டுகளுக்குப் பின் நாம் பெற்ற சுதந்திரம் நாம் நிம்மதியாக வாழ்வதனைவிட்டு ஏன் நாம் இனரீதியாக முரண்படவேண்டும். நம்மை குழப்புகின்றார்கள். நாம் நிதானமாக இருக்க வேண்டும். நாட்டை இனரீதியாகப் பிரிப்பது எமது நாட்டிற்கு உகந்ததல்ல. இதுஒரு சிறிய நாடு. இனரீதியாக பிரிக்காமல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கு, தென், மேல் என்று அதிகாரங்களைக் கொடுப்போம். இனரீதியாக எந்த அதிகாரங்களும் வழங்கப்படக்கூடாது. அதனால் நாட்டை பிரிக்கவும் கூடாது. இப்படி நாட்டை இனரீதியாகப் பிரித்தால் நாட்டிற்கு என்ன நடக்கும். நாடு சீரழிந்துவிடும். இனியும் இனம் என்று இனவாதம் பேச வேண்டாம். நாட்டைப் பற்றிச் சிந்தியுங்கள். நாங்கள் சிங்கள மக்களின் குரல், நாங்கள் தமிழ் மக்களின் குரல், நாங்கள் முஸ்லிம் மக்களின் குரல் என்று மக்களை இனவாதிகளாக்கவேண்டாம். முதலில் இதனை நிறுத்த வேண்டும். நாட்டைப்பற்றி சிந்தியுங்கள். 

நமது நாடு பின்தள்ளப்பட்ட நிலையில் இருக்கின்றது. நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். இன்று எமது நாட்டில் இனவாதம் மேலெழுந்துள்ளது. தினந்தோறும் அங்கு உடகின்றார்கள், இங்கு உடைக்கின்றார்கள், வாலால் வெட்டுகின்றார்கள். இங்கே என்ன நடக்கின்றது? இனவாத அரசியலை நாம் எல்லோரும் நிறுத்த வேண்டும். இனவாதத்தைத் தூண்டி வாக்குப் பெறுவதனையும் நாம் நிறுத்திக் கொள்ள வேண்டும். அதற்காக அரசியல் கட்சிகள் எல்லோரும் முன்வரவேண்டும்.

எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று நாட்டைப்பற்றிச் சிந்தித்து அரசியல் செய்கின்றார். நாம் எல்லோரும் இலங்கையர் என்ற எண்ணத்தில் அவர் செயற்படுகின்றார். இன்று 13வது திருத்தம் பற்றி பேசுகின்றார்கள். ஏன் நாம் அதனைவிட நல்ல தீர்வைப்பற்றியும் சிந்திக்கலாம். அதனையும் பெறலாம். மாகாண சபை முறைமை என்பது இந்தியாவிற்கு சரியாக இருந்தாலும், நமது சிறிய நாட்டிற்கு சரியானதா? என்று முதலில் சிந்திக்க வேண்டும். எமது நாட்டில் 09 மாகாண சபைகள் உள்ளது. அந்த மாகாண சபைகளில்  மத்திய அரசினால் வழங்கப்படும் பணத்தினை மாகாண சபை செலவு செய்கின்றது. மத்திய அரசின் பணத்தினை உள்ளுராட்சி ஆணையாளர்கள்கூட செலவு செய்யமாட்டார்களா? எமது நாட்டில் மாகாண சபைகளுக்கென்று மத்திய அரசு பல கோடிக்கணக்கான நிதிகளை வழங்குகின்றது. செலவுகளைச் செய்கின்றது. இந்தியா பெறிய நாடு. தமிழ்நாடு இலங்கையைப் பார்க்க ஆறு மடங்கு பெரிது. இந்தியாவுக்கு இந்த முறைமைகள் சரியானதாக இருக்கலாம். இது நமது சிறிய நாட்டிற்கு உகந்ததா? இல்லையா என சிந்திக்க வேண்டும். இன்று பொலிஸ் காணி அதிகாரங்கள் பற்றி பேசுகின்றோம். காணி அதிகாரம் ஒரு பக்கம் இருக்கட்டும். பொலிஸ் அதிகாரம் எவ்வாறு சாத்தியம். கொழும்பிலிருந்து அம்பாரைக்கு பயணிக்கும்போது ஐந்து பொலிஸாரைக் கண்டிருக்க வேண்டும். கொழும்பில் ஆரம்பிக்கும் போது மேல்மாகாணப் பொலிஸ், வரக்காப்பொலயால் செல்லும் போது நாங்கள் சபரகமுவ பொலிஸ் என்று சொல்வார்கள், கண்டியால் செல்லும்போது நாங்கள் மத்திய மாகாண பொலிஸ் என்று சொல்வார்கள், மஹியங்கனயால் செல்லும்போது நாங்கள் ஊவா மாகாணப் பொலிஸ் என்பார்கள். அப்படி அம்பாரைக்கு செல்லும்போது கிழக்கு மாகாணப் பொலிஸ் என்று எம்மை சோதனைக்குட்படுத்துவார்கள். ஏன் இந்த சிறிய நாட்டில் இவ்வாறான துர்ப்பாக்கிய நிலை? எமது நாட்டைவிட பல மடங்கு பெரிய இந்தியாவுடன் ஏன் நமது நாட்டை ஒப்பிடுகின்றீர்கள்.

தமது நாட்டில் காணப்படும் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவர நமது ஜனாதிபதி அவர்கள் உண்மைக்கு உண்மையாக விருப்பத்துடன் இருக்கின்றார். நானும் பல முறைகள் இதுபற்றிக் கூறியுமிருக்கின்றேன். அப்படி அவர் உண்மைக்கு உண்மையாக என்னும் போது சில அரசியல் கட்சிகள் அதற்கு இணங்கமாட்டார்கள். அப்படி இணங்காமைக்குக் காரணம் நாட்டில் பிரச்சினைகள் முடிந்துவிட்டால் தத்தமது அரசியல் முற்றுப்புள்ளியாகிவிடும் என  நினைக்கின்றனர். எப்படி நாம் நாட்டை வெற்றி கொள்வது? நாட்டைப்பற்றி சிந்திக்க வேண்டும். அப்போதுதான் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். தற்போது  நமது ஜனாதிபதி அவர்கள் 13வது திருத்தம் சம்பந்தமாக பாராளுமன்ற உபகுழு ஒன்றினை அமைத்துள்ளார். என்னவேண்டுமென்றாலும் அதில் பேசித் தீர்மானிக்கலாம்.

நமது கிழக்கு மாகாணத்தைப் பாருங்கள். இன்று அது காய்த்த மாமரம். அல்லது பூணாரங்கள் அதிகம் அணிந்த அழகிய பெண். எல்லோருக்கும் தேவை, எல்லோருமே பின்னால் அலைகின்றார்கள். கிழக்கு மாகாணம் என்பது அதிக வளங்களும், இயற்கையான துறைமுகங்களையும் கொண்ட பிரதேசம். அதனால் எல்லா நாடுகளுக்கு அந்த பூணாரம் அணிந்தவள் மேல் கண்ணாக இருக்கின்றார்கள். எல்லா வளங்களுமிருக்கின்றது. எத்தனையோ வெளிநாடுகள் இன்று கிழக்கு மாகாணத்தில் கண்குத்தியிருக்கின்றார்கள். அதனாலேயே வடமாகாணத்துடன் இணைக்கும் சதியையும் வெளியுலகம் முனைகிறது. கிழக்கு தனியாக இருந்தால் கிழக்கின் ஆட்சி தனியாக இருக்கும். நினைத்தபடி அசைக்க முடியாது. வடக்குடன் இணைந்திருந்தால் அது ஒரு மாகாணமாக இருக்கும்போது வடக்கில் நமக்குத் தேவையான சிலரை முகவர்களாக வைத்து வெளிநாட்டவர்களின் தேவைகளை நிறைவேற்றலாமென எண்ணித்தான் வடக்கு கிழக்கு இணைப்புக்கு வெளியுலகம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது. பாருங்கள் இன்று கிழக்கில் மூவினங்களும் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் வாழ்கின்றனர். அந்த நிம்மதிப் பெருமூச்சை விரும்பாமலே இப்படிச் சிந்திக்கின்றார்கள். வடக்கு கிழக்கு பிரிய வேண்டுமென்று முதலில் குரல் கொடுத்தவன் நான். வுட மாகாணத்தில் இயற்கை வளங்கள் இல்லை. அதனால் வெளிநாட்டுக்கு அது தேவையில்லை. கிழக்கு அப்படியல்ல. அதிக வளங்கள் காணப்படுகின்றமையால் அது தேவை. வெளிநாடுகள் அவ்வாறு எண்ணும்போது கிழக்கில் காணப்படும் வளங்களை நாம் பாவிப்பதில்லை. சுகல வளங்களும் கிழக்கில் காணப்படும் உள்ளுராட்சி சபைகளின் கீழே காணப்படுகின்றது. இவ்வளங்களை உள்ளுராட்சி சபைகள் சரியான முறையில் பாவித்தால் அதிக வருமானம் பெறும் சபைகளாக நாம் மாறலாம். அதற்காக அனைத்து உள்ளுராட்சி நிறுவனங்களும் முன்வரவேண்டுமென தெரிவித்தார்.

1 comment:

Powered by Blogger.