Header Ads



நாங்கள் பாவத்திற்கு உடந்தையாக இருந்துவிட்டோம் - ரவூப் ஹக்கீம் வேதனை

(TM) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் சேர்ந்து மிகப் பெரிய ஒரு பாவத்திற்கு உடந்தையாக இருந்திருக்கின்றோம் என அக்கட்சியின் தேசிய தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 18வது சட்டத்திருத்தத்திற்கு ஆதரவளித்ததே அந்த பாவச் செயலாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

வட மேல் மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசார கூட்டமொன்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பற்றி இன்று நாலாபுறமும் பலவிதமான விமர்சன கருத்துக்கள் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த காலகட்டத்தில் இந்த விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை எமக்கிருக்கின்றது.  ஐக்கிய தேசிய கட்சியின் பிரசார மேடையொன்றில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசுடனான உறவு சம்பந்தமாக ஏளனமான சில வார்த்தை பிரயோகங்கள் செய்யப்பட்டதாக கேள்விப்பட்டேன். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிக்கும் அரசுக்கும் இருக்கின்ற உறவு இன்று முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களை விடவும் ஏனைய கட்சிகளின் ஆதரவாளர்களை மிகவும் பாதித்திருக்கின்றது. இந்த அரசாங்கத்தோடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொண்டிருக்கின்ற உறவு சம்பந்தமான உண்மை நிலைமை என்ன என்பது மிகத் தெளிவாக தெரிந்த விடயம். 

நான் இன்று இந்த அரசாங்கத்தில் நீதி அமைச்சராக இருக்கின்றேன் என்பது மிகவும் சங்கடத்திற்கிடமான விடயமாகப் பலராலும் பார்க்கப்படுகின்றது. இன்று பாதுகாப்பு அமைச்சு இரண்டு கூறுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவோடு பொலிஸ் திணைக்களம் சட்டமும் ஒழுங்கும் என்ற புதிய அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கின்றது. 

இவையெல்லாம் அடுத்து வருகின்ற சர்வதேச கண்காணிப்பு சம்பந்தமான விடயங்களில்  இந்த அரசாங்கம் பதிலளிக்க வேண்டிய நிலையிலே இப்படியான சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றது. இந்த அரசாங்கத்தின் உள்ளேயிருந்து விமர்சிக்கின்ற, அதனுடைய போக்கை கண்டிக்கின்ற ஒரு பாத்திரத்தை நாங்கள் செய்துகொண்டு வருகின்றோம். 

அது இந்த அரசாங்கத்திற்கு மிகவும் நெருக்கடியை மிகவும் பெரிய அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றது என்பதை அமைச்சரவையில் இருக்கின்ற எல்லா அமைச்சர்களுக்கும் தெளிவாகத் தெரியும். சில அமைச்சர்களுக்கு எங்களையும் அரசாங்கம் பழிவாங்குகின்றது என்று காட்ட வேண்டும். உண்மையிலேயே அரசில் பழிவாங்கப்படுகின்ற ஒரு அமைச்சர் இருப்பாரென்றால் அது என்னைத் தவிர வேறு எவராகவும் இருக்க முடியாது.

ஆனால் இன்று வேறு சில அமைச்சர்கள் இந்த அரசாங்கம் எங்களையும் பழிவாங்குகின்றது எனக் காட்ட வேண்டிய நிலையில் உள்ளனர். இதற்காக திடீரென தங்களின் வீட்டுக்குள்ளேயும் பொலிஸார் புகுந்து தேடுதல் நடாத்தியதாக புதிய புரளியொன்றை எழுப்பியுள்ளனர்.

எனக்கே ஆச்சரியமாக இருக்கின்றது. வடக்கிலே அரசாங்கத்தோடு இணைந்து கேட்க வேண்டும் என நான் வற்புறுத்தப்பட்டேன். எனினும் போட்டியிட முடியாது என மிக நேர்மையாகவும் பக்குவமாக ஜனாதிபதிக்கு தைரியமாக நான் சொல்லியிருக்கின்றேன். 

வடக்கிலே எம்மோடு கேட்க முடியாதென்றால் நாம் தந்த அமைச்சு பதவியைத் தந்துவிட்டு போய் தனியாகக் கேட்குமாறு சொன்னார்கள். நான் அமைச்சு பதவியைத் தந்துவிட்டுப் போக வேண்டியதில்லை. நீங்களே அதை எடுத்துக் கொள்ளலாம். அதற்கு முழு அதிகாரமும் உங்களுக்கு இருக்கின்றது. அதை நான் தடுக்க இயலாது. ஆனால் நானாக தந்துவிட்டுப் போக வேண்டிய தேவை எனக்கில்லை.  இது ஒன்றும் ஆசையில் ஆர்வத்தில் பெற்ற ஒரு அமைச்சு பதவியல்ல என்றேன்.

இந்த அமைச்சுப் பதவியைத் தந்துவிட்டு நீங்கள் வட மாகாண சபைத் தேர்தலில் தனியாகக் கேட்கலாம் என்று ஜனாதிபதி சொன்னார். ஆனால் அவரால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை விலக்குவதற்கு முடியாமலிருக்கின்றது. பலமான அந்தஸ்த்தில் ஜனாதிபதி இருப்பதற்கு நாங்கள் பெரிய பரோபகாரத்தைச் செய்திருகின்றோம். இங்கிருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் சேர்ந்து மிகப் பெரிய ஒரு பாவத்திற்கு உடந்தையாக இருந்திருக்கின்றோம். 

அது இந்த 18ஆவது சட்ட திருத்தத்திற்கு ஆதரவளித்ததாகும். இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம்  ஆயுட்காலம் முழுக்க ஜனாதிபதிக்கு தேர்தலில் போட்டியிடலாம். இல்லையென்றால் இன்னும் இரண்டு வருடத்தில் அவர் நிரந்தரமாக ஓய்வு எடுக்க வேண்டும். இப்போதிருந்தே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் தலைமைப் போட்டி ஆரம்பித்திருக்கின்றது. 

அந்தப் போட்டியினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக மூன்றாகத் துண்டாடப்பட்டிருக்கலாம். ஆனால் அவை எதுவும் நடக்காமல் மிகப் பலம் வாய்ந்த ஒரு ஜனாதிபதியாக இந்த நாட்டு ஜனாதிபதி இருக்கின்றார் என்றால் அதற்கு நாங்கள் துணை போகியிருக்கின்றோம் என்ற ஒரு விடயமிருக்கின்றது. 

இதற்காக எங்களை தாறுமாறாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துக் கொண்டிருக்கின்றன. ஜனாதிபதியோடு ஆகக் கூடுதலாக முரண்படுகின்ற ஒரு அமைச்சர் இருப்பாராயிருந்தால் அது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தான் என்று யாரைக் கேட்டாலும் சொல்வார்கள். 

இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இந்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு எந்தக் காரணமும் கிடையாது. இந்த மாகாண சபை முறையினைக் கொண்டு வந்தபோது அதனை முழுமையாக எதிர்த்த ஒரு கட்சி அது. முதலாவது மாகாண சபைத் தேர்தலில் அவர்கள் கேட்கவில்லை. ஜே.வி.பியும் அதனைப் பகிஷ்கரித்தது.

ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் உயிரைப் பணயம் வைத்து கேட்ட கட்சி. அதற்காக எங்களுடைய வேட்பாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டும் அதற்குப் பயப்படாமல் முதலாவது மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டோம். முதலாவதாக நடைபெற்ற வட கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அசல் வேட்பாளர்களைப் போட முடியாமல் நகல் வேட்பாளர்களைப் போட்டோம்.  

ஆனால் இன்று இந்த அரசாங்கமும் ஜனாதிபதியும் மாகாண சபையின் அதிகாரங்களை பறிப்பதற்கு எடுத்த நடவடிக்கையின்போது அதைத் தடுப்பதற்காக நான் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட நிலையிலும் அவசர அவசரமாக நாடு திரும்பினேன். நான் தான் அந்த அமைச்சரவைப் பத்திரத்தைக் காரசாரமான முறையிலே அமைச்சரவையில் ஜனாதிபதியோடு வாதிட்டு அதைச் செய்ய முடியாது எனச் சொன்னோம். 

இந்த மாகாண சபை முறையில் உயிர் நாடியாக இருப்பது சட்டமியற்றும் அதிகாரம். அந்த சட்டமியற்றும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கின்ற மாகாண சபை அதிகாரம் சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் சட்டமியற்ற முடியாது. சட்டமியற்ற வேண்டுமென்றால் அந்த மாகாண சபைகளின் அங்கீகாரத்தைப் பெற்றுத்தான் இயற்ற வேண்டும். 

இல்லையென்றால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று இயற்ற வேண்டும். இந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக் கொடுப்பதில் எங்களுக்கொரு பேரம் பேசும் சக்தி இருக்கின்றது. எங்களிடம் எட்டு ஆசனங்கள் இருக்கின்றது. நாங்கள் இல்லாமல் அதனை அடைய முடியாது என்கின்ற நிலை இருக்கின்றது. 

அதிலும் இந்த விடயம் சம்பந்தமாக நான் பேச ஆரம்பித்ததன் பிறகு இடதுசாரிக் கட்சித் தலைவர்களும் எதிர்க்க ஆரம்பித்துவிட்டார்கள். எனவே அரசாங்கம் நெருக்கடிக்குள்ளே போய்விட்டது. அதனை கிடப்பிலே போடவேண்டிய நிலைமைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுவிட்டது. இதைக் கொண்டுவந்த ஜீ.எல். பீரிஸ் ஆப்பிலுத்த குரங்கு மாதிரி இருந்தார்.  

இது ஜீ. எல். பீரிஸுக்கு உரிய விடயமல்ல. உண்மையிலேயே இந்தச் சட்டமூலத்தைக் கொண்டு வந்திருக்க வேண்டியவன் நான். ஆனால் எனக்கும் இது தெரியாது. இரவோடிரவாக இச்சட்டமூலத்தை கொண்டுவந்துவிட்டார்கள் எனக் கேள்விப்பட்ட உடனேயே நான் வெளிநாட்டுப் பயணம் போக வேண்டிய நிலையிலும் நாடு திரும்பி அமைச்சரவையிலே நான் நிகழ்த்திய போராட்டத்தின் விளைவாகத்தான் இன்று அரசாங்கம் இவ்விடயத்திலே பின்வாங்கியிருக்கின்றது. 

இல்லையென்றால் இதோடு சேர்ந்து காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் எல்லாவற்றையும் அகற்றிவிட்டு நாங்கள் செய்துவிடலாம். ஏனென்றால் வடக்கிலே தேர்தல் நடத்த முன்னர் இந்த விடயத்தைச் செய்ய வேண்டும் என்று ஒரு முயற்சி நடந்தது. ஆனால் இவை எல்லாவற்றையும் பார்த்துக்கிட்டு எங்கள் அமைச்சர்கள் எல்லாம் சிலர் வாயே திறக்காமல் இருந்தார்கள். 

ஒரு சிலர் இதற்கு சார்பாக வக்காலத்து வாங்கினார்கள். இது எல்லாத்தையும் செய்து போட்டு தற்போ பொலிஸார் வீட்டுக்குள் புகுந்து எதையே தேடுகிறான் என்று ஒரு பெரிய பட்டாசை வெடிக்க வைத்திருக்கார்கள்" என்றார்.

8 comments:

  1. இப்படி தேர்தல்களுக்கு முன் பேசும் வீராவேச சொற்கள் தேர்தலுக்கு பின் மறைந்து போகக் காரணத்தையும் சேர்த்துச் சொன்னால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  2. எலக்சன் வந்திடுல்லே,,, தலைவர் கதை அளக்க தொடங்கிட்டார். இனிப் பாருங்க தலைவரிட பேச்சு வல்லமைய

    ReplyDelete
  3. Dear Sir, neegkal 18+ thodarpaha vidura arikkayai kaatkavai, sinna pilla thanamaha irukku, pariya oru varalattu thavara saithuvittu... ini annaththayo pasi samalikka parkagka, dont worry makkal athallam easyaha maranthuviduvarhal, but varalaru???...

    ReplyDelete
  4. Aaha Kilampittanya Kilampittan. Matrumoru Nadaham. Nadakakttum Nadakkatum. Allah Potumanavan. Muslimkal Modayankal entru Rauf Hakeem Avarhalukku Theriyum. Athnal Mentrumoru Nadaha Aranketram.

    MM. Nowfer

    ReplyDelete
  5. Kanketta Pinne Sooriya Uthayam Enthapakkamaanal Namakkenna poda. Elavu Kaththa Kiliyahi viddeerkal. Perithaha Mahinthavidam ethiparththeergal Mahintha Adiththa Aappu Eppothavathu Therihirathu. Allahu Akbar

    ReplyDelete
  6. katha alakkiran singam 2.

    ReplyDelete
  7. எவ்வளவு நாளைக்கு தான் தெரியாதா மாதிரி நடிக்கிறதுக்கு,..... இப்பிடியே உசுப்பேத்தி, உசுப்பேத்தி..... ஐயோ நான் என்ன செய்வேன் நம்மளால முடியாது.......... தலைய கொண்டுபோய் சீகிரிய கல்லுலத்தான் முட்டிக்கணும்

    ReplyDelete
  8. ஒரேயொரு கவலைக்குரிய விடயம்தான் முஸ்லிம்கள் மத்தியில் உள்ளது. முஸ்லிம்களுக்கென்று திடகாத்திரமான தலைமைத்துவம் இல்லையே எமது சமுதாயத்தின் தேவைகளை பூர்த்திசெய்வதற்காக அல்ல எமது இருப்பை பாதுகாத்துக்கொள்ள இருப்பவர்கள் ஏதோ வெளி நாட்டிலிருந்து இன்னாட்டுக்கு தொழிலுக்காக வந்தவர்கள்போலவே நடந்து கொள்கின்றார்கள். இதில் வயதுபோன சிலரது அடாவடித்தனம் வேறு தமக்கு தெரிந்தும் தாங்கள் முஸ்லிம்கள் என்ற பெயர்தாங்கிக்கொண்டு அவர்களுக்கே அவர்கள் துரோகித்தவண்ணமுள்ளார்கள் இறைவன் இவர்களுக்கு கூலியைக்கொடுப்பான்.

    (என்ன முளிக்கின்றாய் உனக்குத்தான் சொல்கின்றேன்.)

    ஒய்யாரம், பணியாரம்.

    ReplyDelete

Powered by Blogger.