Header Ads



துறைமுக அபிவிருத்தியில் மற்றுமொரு மைக்கல்லே ஒலுவில் துறைமுகம்

(எம்.எம்.ஏ.ஸமட்)

தென்கிழக்கு பெற்றெடுத்த ஆளுமைக்கோர் உதாரணமாக, வாழ்ந்து மறைந்த மா மனிதர் மர்ஹும் அஷ்ரப் தென்கிழக்கின் முக வெற்றிலையாய் கல்முனை மாநகரையும் தென்கிழக்கின் கனவு நகரமாய் ஒலுவிலையும் கண்டார். 
தனது அரசியல் அதிகாரம் கொண்ட ஒரு தசாப்த காலப்பகுதிக்குள் தனது சமூகத்தின் தசாப்தத் தேவைகளை தான் வாழ்ந்த தசாப்தத்திலேயே நிறைவு செய்ய நினைத்தார்.

அவ்வாறு, அவர் தூரநோக்கோடு சிந்தித்து செயற்படுத்திய பலவற்றில் மிக முக்கியமான பணிகள் இரண்டு. ஒன்று  தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றையது ஒலுவில் துறைமுகம்.

தேசத்தின் தென்கிழக்குக் கரையோரப் பகுதியில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமமே ஒலுவில். இக்கிராமத்தை நகராகக் கனவு கண்ட அஷ்ரப் இங்கேயே தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தையும் துறைமுகத்தையும் நிறுவுவதற்கான பணிகளைத் தொடங்கினார்.

1998ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதிய வர்த்தமானி மூலம் அப்போதைய துறைமுக அமைச்சராகவிருந்த அஷ்ரபினால் - குறிப்பிட்ட வர்த்தமானித் திகதியிலிருந்து இலங்கை துறைமுக அதிகாரசபைச் சட்டப் பிரிவு வழங்கும் அதிகாரத்தின் கீழ் ஒலுவில் துறைமுகம் கொண்டுவரப்படுவதாக அரசாங்க அறிவித்தலொன்று வெளியிடப்பட்டது. இதன் மூலம் ஒலுவிலுக்கு ஒரு துறைமுகம் வரும் என்பது மக்களிடையே உறுதியானது.

துறைமுகம் என்பது கப்பல்கள் மற்றும் படகுகள் வந்து தங்கிச் செல்வதற்குரிய இடமாகும். துறைமுகங்களை இயற்கைத் துறைமுகங்கள், செயற்கைத் துறைமுகங்கள் என இருவகைப்படுத்தலாம். இயற்கைத் துறைமுகங்கள் இராணுவ பொருளாதாரக் காரணங்களால் முக்கியத்துவமுடையவையாக இருந்து வருகின்றன. துறைமுகங்கள் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை பறைசாற்றும் முக்கிய அம்சமாகவும் உள்ளன.

இத்தகைதொரு முக்கியத்துவமிக்க, ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தின்  முதுகெலும்பாகக் கருதப்படக் கூடியதொரு துறைமுகத்தை ஒலுவிலில் நிறுவி அதில் கப்பல்களை வரக் கனவு கண்ட மறைந்த தலைவர் அஷ்ரபின் கனவு தேசத்தின் தலைவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகிந்தச் சிந்தனையினூடாக நிஜமாகியுள்ளது.

நாட்டின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் ஆகக் குறைந்த பௌதிக வளங்களைக் கொண்ட தென்கிழக்கின் கரையோரப் பிரதேசத்தில் வாழும் மக்களின் வாழ்வாதார நிலைகளை உயர்வடையச் செய்யும் அரசின் அபிவிருத்தி வேலைத்திட்டமான மகிந்தச் சிந்தனையின் கிழக்கின் உதயத்தினூடாக ஒலுவில் துறைமுக அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

மீன்பிடி மற்றும் வணிகத் துறைமகமாக நிர்மாணிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டு டென்மார்க் அரசாங்கத்தின் 46.9 மில்லியன் யூரோ கடனுதவித் திட்டத்தின் கீpழ் இத்துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகள் 2008 ஜுலையில் 56 ஹெக்டர் நிலப்பரப்பில்; ஆரம்பமானது.

இரு கட்டங்களாக நிர்மாணிப்பதற்கான திட்டத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இத்துறைமுகத்தின் முதற் கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்போது நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு;  செப்டம்பர் மாதம் முதலாம் திகதி  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் ஒலுவில் துறைமுகம் திறந்து வைக்கப்படவுள்ளது. இத்துறைமுக திறப்பு விழாவில் பிரதேசத்தின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள். கிழக்கு கமாகாண சபை அமைச்சர்கள் மாகாணசபை, மாநகர, நகர, பிரதேச சபைத் தலைவர்கள், உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் பொது மக்களென பல்லாயிரக் கணக்கானோர் கலந்துகொள்ளவுள்ளனர். இவ்வாறு திறந்து வைக்கப்படும் ஒலுவில் துறைமுகம,; துறைமுக அபிவிருத்தியில் மற்றுமொரு மைகல்லாகும்.

மீன்பிடி மற்றும் வணிகத்துறைமுகமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இத்துறைமுகம் பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது. மீன்பிடித் துறைமுகமானது ஐஸ் உற்பத்திச்சாலை, களஞ்சிய வசதி, மீன் ஏல விற்பனைத் தளங்கள், மீன் பொதி செய்தல், மீன் வலை பழுதுபார்த்தல் நிர்வாகக் கட்டடம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் என பல்வேறு வசதிகளைக்; கொண்டுள்ளது.

அதேபோன்று, வணிகத் துறைமுகமானது 5000 தொண் நிறைகொண்ட கப்பல்கள் வந்து செல்லக் கூடியதாகவும் எதிர்காலத்தில் இரண்டாம் கட்ட நிர்மாண நடவடிக்கைகளின்போது, 16 ஆயிரம் தொண் நிறைகொண்ட கப்பல்கள் வந்து செல்லக் கூயடி வசதியைக் கொண்டதாகவும் அமையுமெனக்; கூறப்படுகிறது.

இத்துறைமுகத் திறப்பின் ஊடாக மறைந்த தலைவர் அஷ்ரபின் தென்கிழக்கின் கனவு நகரம் வளம்கொண்டதாக ஒளி பெறுவதுடன்; அங்குள்ள வளங்கள் மேலும் வளம்பெறும். நேரடியாகவும் மறைமுகமாகவும் பல இளைஞர் யுவதிகள் வேலை வாய்ப்புக்களைக் பெறக் கூடிய வாய்ப்புக்களும் ஏற்படும். பாதைகள் அபிவிருத்தி செய்யப்படுவதுடன் போக்குவரத்துக்களும் சிரமமின்றி சீராக இடம்பெறுவற்கான வாய்ப்புக்களும் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், துறைமுக நிர்மாணத்துக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான நஷ்டயீடுகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒலுவில் துறைமுக நிர்மாணப்பணியின் பொருட்டு சுவீகரிக்கப்பட்ட உரிமையாளர்களுடனான அண்மையப்  பேச்சுவார்தையின் மூலம் காணிகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீட்டின் ஒரு பகுதியினை முதற்கட்டமாக வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது, இந்த இணக்கப்பாடானது அமைச்சர் அதாவுல்லா அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெவ்வை மற்றும் காணி உரிமையாளர்களுக்கிடையிலான சந்திப்பின் மூலம் இந்த இணைக்கம் எட்டப்பட்டுள்ளது. இதன்பிரகாரம், முப்பத்தைந்து காணிச் சொந்தக் காரர்களுக்கு முதற்கட்டக் கொடுப்பனவாக 30 ஆயிரம் ரூபாவை வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

ஒரு பிரதேசம் அபிவிருத்தி செய்யப்படுகின்றபோது அல்லது அந்தப் பிரதேசத்தில் ஒரு துறை அபிவிருத்தி செய்யப்படுகின்ற நிலையில் அப்பிரதேசம் மாத்திரம் அதனால் பயனடைவதில்லை. மாறாக அதை அண்டிய பிரதேசங்களும் பயன்பெறும். அபிவிருத்தியினால் பயன்களும் இருக்கும் பயன்களின் பக்க விளைவுகளும் காணப்படும். பயன்களின் பக்கவிளைவுகளை மாத்திரம் கருத்திற்கொண்டு, பயன்கள் கிடைப்பதைத் தடுப்பதில் நியாயமில்லை. அது யதார்த்தமுமாகாது.

தென்கிழக்கு பலலைக்கழகத்திற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோது, அதற்கு அப்போது பல எதிர்பலைகள் உருவானது. இன்று இப்பல்கலைக்கழகத்தினால் பயன்பெறுவர்கள் அதிகம். அன்று இப்பல்கலைக்கழகம் உருவாகாது தடுக்கப்பட்டிருந்தால் தென்கிழக்கு பேசப்பட்டிருக்காது என்பதை நினைவில் கொள்ளவேண்டியது அவசியமாகும்.

ஏதோ ஒருவகையில் தென்கிழக்கின் கனவு நகரம் என அஷ்ரப் கருதிய ஒலுவில் அரசாங்கம் மேற்கொண்ட அபிவிருத்தியினால் வளம் பெறுவது நிச்சயம். கிடைக்கப்பெறுகின்ற வசதிகளையும் வாய்ப்புக்களையும் சரியாக பாதகமில்லாது பயன்படுத்துவது அவரவர், மற்றும் சமூக ஆளுமைகளைப்; பொறுத்தது. 

ஒலுவிலில் துறைமுகம் திறக்கப்படுவதனால் ஒலுவில் பல்வேறு வழிகளில் நன்மையடையும் என்பது உண்மை. அதேநேரம் ஒரு சில வேண்டத்தகாத விளைவுகளையும் எதிர்நோக்கலாம். எத்தகையை விளைவுகள் ஏற்படும் என ஆய்வு செய்து அந்த விளைவுகள் ஏற்படாது தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதே சிறந்தது. மாறாக அறிக்கைகளைவிட்டு கிடைக்கின்ற வளங்களை, பயன்களைத் தடுப்பது நியாயமாகாது என்பதை அறிக்கை அறிவாளிகள் உணர்ந்து செயற்படுவது வீணான விளைவுகளிலிருந்து சமூகங்களைக் காப்பாற்றுவதுடன்; அது பிரதேச அபிவிருத்திக்கான சந்தர்ப்பங்களுக்கு மேலும் வலுவூட்டும் என்பதே காலத்தின் கணிப்பாகும்.

No comments

Powered by Blogger.