Header Ads



"இஸ்லாத்தின் பெயரால் உள்வீட்டில் துவேஷம் வளர்க்கும் குழுக்களே மிகவும் ஆபத்தானவை"

(மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்)

அல் குரானும்  இறை தூதரின்  ஸுன்னஹ்வும் எவ்வாறு அல்லாஹ்வின் இறைவன் மனிதனுக்கு அருளிய வழி  காட்டல்களோ அதேபோல் தான் மனிதனில் பொதிந்துள்ள பகுத்தறிவும் நல்லுணர்வுகளும் மனச் சாட்சியும் அல்லாஹ்வின் மிகப் பெரிய வழிகாட்டல் மூலங்களாகும்.  

அறிவு ஞானம், நீதி, நியாயம், உண்மை,பொய், நேர்மை, வஞ்சகம், சரி பிழை, அநீதி அக்கிரமம், கள்ளம் கபடம், ஆசைகள், இச்சைகள், அன்பு கருணை, விசுவாசம், குரோதம், துவேஷம் நய வஞ்சகம்,விட்டுக் கொடுத்தல், மன்னித்தல், பழிக்குப் பழி வாங்கல், இங்கிதம், சமயோசிதம், பொறுமை, பொறாமை, பெரும்தன்மை, பேராசை, அகம்பாவம், அகங்காரம், நிதானம், அவசரம், அமைதி பதட்டம், பக்குவம் முதிர்ச்சி, அனுபவம், ஆற்றல் என இன்னோரன்ன பகுத்தறிவு சார்ந்த, உள்ளுணர்வுகள் சார்ந்த நல்ல தீய குணாதிசியங்கள் இன மத குல மொழி நிற வேறுபாடின்றி எல்லோருக்குமாக எல்லாம் வல்ல அல்லாஹ்வால் வழங்கப்பட்டிருக்கின்றது.  

மேற்சொன்ன பகுத்தறிவு மற்றும் உள்ளுணர்வுகள் சார்ந்த மூலங்களை எல்லாம்  வல்ல அல்லாஹ் விரும்புகின்ற வாழ்வு நெறியின் வழி வயப்படுத்துவதற்காகவே அல் குரானும் ஸுன்னஹ்வும் அருளப்பட்டனவே அன்றி அவற்றை முற்று முழுதுமாக நிராகரிப்பதற்காக அல்ல.  

இறைவன் பற்றிய உணர்வு, அவனது தூதர்கள், வானவர்கள், அவர்களது பணிகள்,மறுமை வாழ்வு பற்றிய அசையாத நம்பிக்கை, மறைவான விடயங்கள் மீதான விசுவாசங்கள் இவை  தான் மனிதனை நேர்வழி செலுத்தும் "தக்வா" எனும் இறையுணரவாக அடையாள படுத்தப் படுகிறது.    

அவரவருக்கு வழங்கப்பட்டுள்ள செல்வம் செல்வாக்கு, வளங்கள் ஆற்றல்கள் ,திறமைகள்  என்பவற்றிற்கும் அவரவரது அறிவு தெளிவு முதிர்ச்சியிற்கும் ஏற்பவே பொறுப்புக்களும் கடமைகளும் விசாரணைகளும் இடம் பெறுகின்றன.  

மேற்படி பகுத்தறிவும் மன நிலையும் பாதிக்கப் பட்ட சித்த சுவாதீனமற்ற ஒருவனுக்கு சன்மார்க்க கடமைகள் விதியாவதில்லை.அல்லாஹ் எந்த ஒருஆன்மாவையும் அதன்சக்தியிற்கு அப்பால் சோதிப்பதில்லை.


அறிவு ஞானம், விவேகம், சமயோசிதம், உளவியல் விஞ்ஞான அணுகுமுறைகள் போன்ற பல்வேறு நுட்பங்களை "ஹிக்மத்து" என்போம் அவ்வாறான ஹிகமத்தைக் கொண்டும் சிறந்த(கனிவான) உபதேசங்கள், அழகிய கருத்துப் பரிமாறல்கள் கொண்டு சத்தியத்தின் பால் அழைக்க வேண்டிய நாம் விஷம் கக்கும் விஷாமிகளாய் மாறி வருகின்றோமா ? என்ற கேள்வி எழுகிறது.

அழகிய பன்பொழுக்கங்களை தறாத தொழுகையும் நோன்பும் சக்கத்தும் ஹஜ்ஜும் சிறந்த ஆன்மீக ஆளுமைகளை உருவாக்க முடியாது, நாவினாலும் நடவடிக்கைகளினாலும் அடுத்தவனை நோவினை செய்பவர்களுக்கு இஸ்லாத்தில் இடமும் இல்லை, வெறும் தர்க்கங்களுக்காக, விவாதங்களுக்காக வன்முறைகளைத்தூண்டும் வகையிலான கருத்து ஆக்ரோஷமான ஆர்ப்பரிப்புக்கள் அசிங்கங்களின் அரங்கேற்றங்கள் தூய இஸ்லாமிய தவாப் பணியின் பெயரால் இழைக்கப் படும் மிகப் பெரிய கொடுமையாகும்.

"அல்லாஹ் ஒருவனுக்கே நாம் அஞ்சுகின்றோம் அவனையே வணங்குகின்றோம், அவனையன்றி எவருக்கும் அடிபணியோம் " என்பதில் கலிமாச் சொன்ன எவருக்கும் கருத்து வேறு பாடு கிடையாது.  

ஆனால் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள்  குறைஷிக் காபிர்களுக்கு தெரியாமல் தாருல் அர்கமில் பிரச்சாரம் செய்தமையை, அல்லது அலி (ரழி) அவர்களை தனது படுக்கையில் வைத்து விட்டு ஹிஜரத்து புறப்பட்டமை, தௌர் குகையில் மறைந்திருந்தமை, ஹுதைபியா உடன்படிக்கையில் தான் அல்லாஹ்வின் தூதர் என்ற வாசகத்தையே விட்டுக் கொடுத்தமை, எதிரிகளின் பலத்தையும் பலவீனத்தையும் மட்டிட்டு யுத்த நகர்வுகளை மேற்கொண்டமை எதனையும் நாங்கள் கோழைத்தனமாக பார்ப்பதில்லை, "அல்லாஹ்வின் தூதர் நீங்கள் ஏன் ஆபூ ஜஹிலுக்கு அஞ்ச வேண்டும் ?" என்று ஆத்திரத்தில் அவசரத்தில் ஆர்ப்பரித்தவர்களுக்குக் கூட சமயோசிதத்தையும் திட்டமிடலையும் மாத்திரமன்றி உலகிற்கே இராஜ தந்திரத்தையும் இறை தூதர் (ஸல்) காட்டித் தந்தார்கள்.

பெரும்பானமையாக வாழுகின்ற முஸ்லிம் நாடுகளில் அல்லது இஸ்லாம் ஆட்சியில் இருக்கின்ற நாடுகளில் வாழ்கின்ற முஸ்லிம்கள் தமது இருப்பு பாதுகாப்பு குறித்த அச்சம் இன்றி வாழுகின்றனர், அவ்வாறில்லாமல் முஸ்லிம் அல்லாதவர்கள் அல்லது இஸ்லாமிய விரோத சக்திகளின் ஆட்சியில் வாழுகின்ற முஸ்லிம்கள் அடக்குமுறைகளுக்கு உற்படுத்தப் படின் அவற்றிற்கு எதிராக போராடும் வல்லமை இல்லாத நிலைமைகளில் ஹிஜ்ரத்து செய்ய வேண்டும் அல்லது சமயோசிதமான இஸ்லாமிய வரையறைகளுக்குள் நகர்வுகளை இயன்றவரை மேற்கொள்ள வேண்டும்.

இன்று இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாத்தின் எதிரிகளுக்கு அகலத் திறந்துவிடப் படும் வாயில்கள் இஸ்லாமியர்களுக்கு இறுக மூடிக் கொள்கின்றன, அரபு முஸ்லிம் உலகின் வளங்கள் இஸ்லாமிய உலகின் எதிரிகளுக்கே தாரை வார்க்கப் படுகின்றன, பர்மாவில் முஸ்லிம்கள் பல்லாயிரக் கணக்கில் படுகொலை செய்யப் பட்ட பொழுது அரபு முஸ்லிம் ஆட்சியாளர்கள் மௌனித்துப் போயிருந்தார்கள், இலங்கை முஸ்லிம்களுக்கு இன்னல்கள் ஏற்பட்ட பொழுது ஒரு குரலெனும் ஓங்கி ஒலிக்க வில்லை.  

உடனுக்குடன் ஆத்திரத்திலும் ஆவேசத்திலும் எதிர்வினையாற்றுகின்ற வீம்புகள் உள்வீட்டு வீராப்புகளும் மேடைக் கூச்சல்களும் உள்ளக அரங்குகளில் விடும் சவால்களும், வாய்ச் சவாடல்களும் முஸ்லிம்களுக்கு எதிரான தீவிரவாத செயற்பாடுகளை ஒரு மயிரளவும் குறைக்கவில்லை மாறாக நாளுக்கு நாள் குரைக்கின்ற நாய்களை மென்மேலும் உசுப்பேத்தவே உதவுகின்றன என்பதே உண்மையாகும்.  

 முஸ்லிம் உம்மத்துக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் இஸ்லாத்தின் எதிரிகள் கலிமாச் சொன்ன அனைவரையும் மொத்தமாகவே இலக்கு வைக்கின்றனர். அவர்கள் பிற நாட்டு இஸ்லாமிய விரோத சக்திகளின் பின்புலனில் நீண்ட கால இலக்குகளுடன் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று முஸ்லிம் நாடுகளுடனான வர்த்தக் உறவும், இலங்கை முஸ்லிம்களின் அரசியல் விழிப்புணர்வும், பெரும்பனமை சமூகத்தில் இருக்கின்ற முற்போக்கு சக்திகளும், கட்சி அரசியல் இலாப நஷ்டக் கணக்குகளும் முஸ்லிம் சிவில் சன்மார்க்கத் தலைமைகளின் நகர்வுகளும் முஸ்லிம்களுக்கு எதிரான நகர்வுகள் தீவிரமடையாது ஓரளவு தணித்துக் கொண்டிருக்கின்றன.

என்றாலும் நாளுக்கு நாள் தமது நகர்வுகளை புதிய தலை முறையினர் மத்தியில் தீவிரப் படுத்தும் பேரின தீவிரவாத சக்திகளை அவர்களது நகர்வுகளை முஸ்லிம் சமூகமும் மிகவும் விழிப்புணர்வுடன் அவதானித்து நிதானமாகவும் சமயோசிதமாகவும் சாணக்கியமாகவும் செயற்பட வேண்டிய கட்டாயத்த்தில் இருக்கின்றது.

தேசிய அரங்கிலும் சர்வதேச அரங்கிலும் பிழையான தரப்புக்களுடன் இந்த நாட்டின் ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கத்தினரும் மாத்திரமன்றி  மகா ஜனங்களும், புத்தி ஜீவிகளும் சிவில் மற்றும் சமய தலைமைகளும் கைகோர்ப்பது முழு தேசத்தினதும் அமைதி சமாதானம் அபிவிருத்தி என்பவற்றிற்கு எதிர்காலத்தில் சவாலாக அமைந்து விடக் கூடாது என்ற உயரிய இலக்கிலேயே முஸ்லிம் சிவில் மற்றும் சன்மார்க்கத் தலைமைகள் சமாதான சகவாழ்வு பற்றி அதிக அக்கறை கொண்டுள்ளனர்.

அல்-ஹம்துலில்லாஹ் இன்று இலங்கையில் உள்ள முன்னணி சிவில் மற்றும் சன்மார்க்கத் தலைமைகள் ஒன்றிணைந்து தற்பொழுது முஸ்லிம் சமூகம் எதிர் கொள்கின்ற நெருக்கடியான சூழ்நிலைகளைக் கையாள்வதற்காக மேற்கொள்கின்ற ஒரு சில நகர்வுகள் ஓரளவு ஆறுதலைத் தருகின்றன.

1 comment:

  1. இவ்வாறான கட்டுரைகள் இன்றைய காலகட்டதில் அத்தியஅவசியமானது. எந்த ஜமாஅத்தினர் என்று பார்ப்பதில்லை.முஸ்லிம் என்பது மட்டுமே அவர்களின் குறிக்கோள் .மாற்று மதத்தின்னருடன் நமது கொள்கையில்,அணுகுமுறையில்,பேஜ்ஜில் அவர்களை கவரும்படி மாற்றம் கொண்டு வர வேண்டும். நமது உலமாக்கள் ,புத்திஜீவிகள் பள்ளிவாசல்களிலும்,பாடசாலைகளிலும்.பொதுஇடங்களிலும் குத்பாக்கள் ,கருத்தரங்கம்,மேடைப்பேஜ்சுக்களில் இதை உணர்த்தவேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.