சிரியா மீது ராணுவ நடவடிக்கைக்கு அவசரம் காட்டாதீர் - அமெரிக்காவிடம் ரஷ்யா கோரிக்கை
சிரியாவில் கடந்த 1 ஆண்டுக்கும் மேலாக அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். சுமார் 7 லட்சம் பேர் அகதிகளாகினர். பஷார் அல் ஆசாத் அரசுக்கு சீனா, ஈரான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் உதவி வருகின்றன. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டமாஸ்கஸ் நகருக்கு வெளியே புறநகர் பகுதியில் ராணுவத்தினர் நடத்திய ரசாயன குண்டு தாக்குதலில் சிறுவர்கள் உள்பட 1300 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சிரியா மீது ராணுவ தாக்குலை நடத்த அமெரிக்கா தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடன் ஒபாமா ஆலோசனை நடத்தினார். இந்த சம்பவத்திற்கு ஐநா பொது செயலாளர் பான் சீ மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ரசயான தாக்குதல் நடந்த இடத்தில் ஆஞ்சலா கேன் தலைமையிலான ஐநா குழுவினர் ஆய்வு நடத்தவும், அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தவும் சிரியா ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பான் கீ மூன் தெரிவித்தார்.
இதற்கு சிரியா அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. சிரியா விவகாரம் குறித்து பிரான்ஸ் அதிபர் பிரங்காய்ஸ் கொலண்டேவும், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனும் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினர். சிரியாவில் ரசாயன குண்டு தாக்குதல் குறித்து தாமதமின்றி ஆய்வு நடத்த வேண்டும் என்று ஜெர்மனியின் வெளியுறவு மந்திரி கைடோ வெஸ்டர் வெல்லே தெரிவித்துள்ளார்.
அங்கு ராணுவ நடவடிக்கை மேற்கொள்வது மத்திய ஆசியாவில் போர் பதற்றத்தை ஏற்படுத்தும் என ரஷ்யா, சீனா, ஈரான் போன்ற நாடுகள் எச்சரித்துள்ளன. ஐநா குழுவினர் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் வரை சிரியாவில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள கூடாது என ரஷ்ய வெளியுறவு செயலர் அலெக்சாண்டர் லுகாசேவிச் விடுத்துள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
Post a Comment