அல் அஸ்ஹரின் அழைப்பு - இஹ்வான்கள் நிராகரித்தனர்
(Tn) எகிப்து பதற்றத்தை தணிக்கும் முயற்சியாக அல் அஸ்ஹர் விடுத்த சமரச பேச்சுக்கான அழைப்பை முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு நிராகரித்துள்ளது.
அல் அஸ்ஹரின் தலைமை இமாம் ஷெய்க் அஹமட் அல் தய்யிப் தேசிய நல்லிணக்க பேச்சுவார்த்தைக்கு நாட்டின் அரசியல் தரப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். எனினும் இந்த அழைப்பை நிராகரிப்பதாக இராணுவ சதிப் புரட்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி மொஹமட் முர்சிக்கு ஆதரவான முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு அறிவித்துள்ளது.
அல் அஸ்ஹர் தலைமை இமாம் அல் தய்யிப் இராணுவ சதிப்புரட்சியாளர்களுக்கு ஆதரவாக செயற்படுவதாக துருக்கியின் அனடொலும் செய்திச் சேவைக்கு வெளியிட்ட கருத்தில் சகோதரத்துவ அமைப்பின் தலைமைகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
சமரச பேச்சுவார்த்தைக்கு திரும்புவதற்கு முர்சி மீண்டும் பதவியில் அமர்த்தப்பட வேண்டும் என முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு நிபந்தனை விதித்து வருகிறது.
எகிப்தில் கடந்த ஜூன் 3ம் திகதி இராணுவ சதிப்புரட்சி இடம்பெற்ற போது, ஜனாதிபதி முர்சி பதவி கவிழ்க்கப்பட்ட அறிவிப்பை இராணுவத் தளபதி அப்துல் பத்தா அல் சிசி தொலைக்காட்சியில் நேரடியாக அறிவித்த போது அதனை ஆமோதிக்கும் வகையில் அல் அஸ்ஹர் தலைமை இமாமும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே எகிப்து நிர்வாகம் தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்துவரும் நிலையிலும் தலைநகர் கெய்ரோவில் முர்சி ஆதரவாளர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Post a Comment