இடம் பெயர்ந்த முஸ்லிம் வாக்காளர்கள் குறித்து தேர்தல் ஆணையாளரிடம் வேண்டுகோள்
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
வடக்கிலிருந்து இடம் பெயர்ந்த நிலையில் புத்தளம்,மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் வாழும் வாக்காளர்களின் வாக்களிப்பு வசதிகருதி வாக்களிப்பு நிலையங்களை ஏற்படுத்தி தருமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடத்தில் வேண்டுகோளினை முன் வைத்துள்ளனர்.தேர்தல் ஆணையாளரை ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் சந்தித்த கட்சியின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக்,கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் ஆகியோர் இதனை கூட்டாக முன் வைத்தததாக பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் தெரிவித்தார்.கொத்தனி வாக்களிப்பு நிலையங்களை ஏற்படுத்துவது தொடர்பில் வாக்காளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டன.அதனடிப்படையில் 14 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தமது விண்ணப்ப படிவங்களை அனுப்பியிருந்தனர்.அதில் ஒரு சில நிராகரிக்கப்பட்ட நிலையில் 13 ஆயிரம் வரையிலான விண்ணப்பங்கள் எற்றுக் கொள்ளப்பட்டதாகவும் தேர்தல் அலுவலகத்தின் தரவுகளை மேற்கோள்காட்டி பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் இவ்வாறு கூறினார்.
தற்போது வடமேல் மாகாண சபைக்கான தேர்தல் நடை பெறுவதாலும்,இடம் பெயர்ந்த மக்களும் வடமாகாண சபைக்கு வாக்களிக்கவுள்ளதாலும்,கடந்த பாராளுமன்ற தேர்தலினை போன்று இடம் பெயர் மக்கள் வசிக்கும் தற்காலிக முகாம்களுக்கு அருகிலுள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்குச் சாவடிகளை அமைப்பதன் வசதிபாடுகள் குறித்து கட்சியின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தேர்தல் ஆணையாளரிடத்தில் எடுத்துரைத்தார்.
புத்தளம் மாவட்டத்தில் கல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவில் கல்பிட்டி,குறிஞ்சிப்பிட்டி,பள்ளிவாசல் துறை,கண்டல்குளி,அல-அறபா,கொய்யாவாடி,ஆலங்குடா,உலுக்காப்பள்ளம்,ஆகிய பகுதிகளிலும், முந்தல் பிரதேச செயலகப் பிரிவில் புளிச்சாக்குளம்,ஹிதாயத் நகர், நாகவில்லு, காசிம்சிட்டி ,தம்பபண்ணி,ரஹ்மத் நகர்,இஸ்மாயில்புரம் ஆகிய பிரதேசங்களிலும்,அநுராதபுரம் மாவட்டத்தில் இக்கிரிகொல்லாவ,கணேவல்பொல ஆகிய பிரதேசங்களிலும் வாக்குச் சாவடிகள் அமைப்பதன் அவசியத்தையும் தமது கட்சி வலியுறுத்தியதாகவும்,வாக்கார்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தை தேர்தல் ஆணையாளர் வழங்கியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் மேலும் கூறினார்.
Post a Comment