Header Ads



பொலிஸ் திணைக்களம் தனியாக்கப்பட்டமை வரவேற்கப்படவேண்டியது - அஸாத் சாலி

பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்து பொலிஸ் திணைக்களம் விடுவிக்கப்பட்டு சட்டம் ஒழுங்கு என்ற தனியான அமைச்சின் கீழ் ஜனாதிபதியின் கீழ் பொலிஸ் திணைக்களம் கொண்டுவரப்பட்டுள்ளமை வரவேற்கப்பட வேண்டிய ஒரு விடயம் என்று தெரிவித்துள்ளார் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி.

பொலிஸ் திணைக்களம் எப்போதுமே பொது மக்களுக்காக சேவை புரியும் ஒரு சிவில் திணைக்களமாகத்தான் இருந்து வந்துள்ளது. யுத்தகாலத்தில் அவசர கால நிலைமைகளின் கீழ் தவிர்க்க முடியாத காரணங்களால் அது பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது. ஆனால் யுத்தம் முடிவடைந்த பின்னரும் அது மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரப்படாததால் மக்களிடம் இருந்து பொலிஸ் திணைக்களம் தூர விலகி நிற்கும் ஒரு நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக பொலிஸ் திணைக்களம் ஊழல் மோசடிகள் மிக்க ஒரு திணைக்களமாக மாறியது. இன்று நாட்டில் இலஞ்ச ஊழல் விடயத்தில் இரண்டாவது இடம் வகிக்கும் திணைக்களமாக பொலிஸ் திணைக்களம் மாறியுள்ளதாக மிக அண்மைய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. யுத்தத்துக்குப் பிந்திய கடந்த சுமார் நான்கு வருட காலத்தில் பொலிஸ் திணைக்களம் பொது மக்களுக்கு சேவையாற்றியதை விட தனிப்பட்ட முறையில் சில உயர் அதிகாரிகளுக்கு சேவையாற்றியது தான் அதிகம் என்று குறிப்பிடலாம்.

பொலிஸ் திணைக்களத்துக்கு பொறுப்பாக இருந்த சில உயர் அதிகாரிகள் கடந்த சுமார் நான்கு வருட காலத்தில் தமது இஷ்டத்துக்கு அந்த திணைக்களத்தை ஆட்டிப் படைத்ததால் பல சந்தர்ப்பங்களில் தனது கடமையை செய்வதற்கு பதிலாக பொலிஸ் திணைக்களம் வேடிக்கை பார்க்கும்; ஒரு திணைக்களமாகவே செயற்பட்டு வந்துள்ளது. இதனால் அந்த திணைக்களம் முன் ஒரு போதும் இல்லாத அளவுக்கு மக்கள் மத்தியில் மரியாதை இழந்து காணப்படுகின்றது.

இவ்வாறான ஒரு மோசமான சூழ்நிலையில் பொலிஸ் திணைக்களத்தின் மானத்தை மேலும் கவிழச் செய்யாமல் அதைக் காப்பாற்றும் வகையில் ஜனாதிபதி  தனது பொறுப்பின் கீழ் இந்த திணைக்களத்தை எடுத்துள்ளமை மக்கள் மத்தியில் ஓரளவு ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

இனி பொலிஸ் திணைக்களம் எந்த அரச அதிகாரியினதும் சட்ட விரோத கட்டளைகளுக்கு அடிபணிந்து எந்த இடத்திலும் கைகட்டி வேடிக்கை பார்க்கத் தேவையில்லை. மக்களின் மோசமான விமர்சனங்களுக்கும் ஊடகவியலாளர்களின் ஏளனத்துக்கும் ஆளாகத் தேவையில்லை.அவர்கள் ஜனாதிபதியின் உத்தரவின் கீழ் நெஞ்சு நிமிர்தி நேர்மையாக பக்கச்சார்பின்றி தமது கடமைகளைப் புரியலாம். பழைய கௌரவத்தோடு அவர்கள் தொழில் புரியலாம். அவ்வாறு பொலிஸார் நடந்து கொள்வார்கள் என நம்புகின்றோம். மக்களுக்கு விரோதமாக அன்றி மக்களின் நண்பனாகவும், சட்டவிரோத கும்பல்களின் பாதுகாவலனாக அன்றி சட்டத்தின் பாதுகாவலர்களாக நடந்து கொள்வார்கள் என்றும் சட்ட விரோத கட்டளைகளுக்கு தலைசாய்ப்பவர்ளாக அன்றி சட்டத்துக்கு தலை சாய்ப்பவர்களாக நடந்து கொள்வார்கள் என்றும் நாம் எதிர்ப்பார்க்கின்றோம்.

2 comments:

  1. நவதீம்பிள்ளை ஊருக்கு வந்திருப்பது உங்களுக்கு தெரியுமா சார்?

    ReplyDelete
  2. இதற்கு நல்ல உதாரணம் பொலிஸ் மா அதிபரால் மேற்கொள்ளப்பட்ட சியாமின் கொலை.

    ReplyDelete

Powered by Blogger.