Header Ads



வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தியோரை தண்டியுங்கள் - நவநீதம் பிள்ளை

சிறிலங்காவில் உண்மை கண்டறியும் பயணத்தை மேற்கொண்ட  மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை நவநீதம்பிள்ளை தனது பயணத்தின் முடிவில் இன்று 31-08-2013 செய்தியாளர்களிடம் பேசிய தெரிவித்த முக்கிய விடயங்கள் வருமாறு

“பாதுகாப்பு அமைப்புகளால், மனிதஉரிமை ஆர்வலர்கள் துன்புறுத்தப்படுவது அதிகரித்துள்ளது. இந்த உண்மை கண்டறியும் பயணத்தின் போது, என்னுடன் கலந்துரையாடிய மனிதஉரிமை ஆர்வலர்கள் சிறிலங்கா காவல்துறை மற்றும் இராணுவத்தினரால் துன்புறுத்தலை எதிர்கொண்டது கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியாதது.

இது உயர்மட்டத்தில் உள்ளது. இதுபோன்று நடந்து கொள்வதற்கு, என்னைப் போன்றவர்களை அழைக்கக் கூடாது.  இதுபோன்ற கண்காணிப்பும், துன்புறுத்தலையும் வைத்துப் பார்க்கும் போது, சிறிலங்கா மோசமான நிலையில் உள்ளது என்று தோன்றுகிறது.

போர் நடந்த வடக்கு, கிழக்குப் பகுதிகளில், நிலைகொண்டுள்ள உள்ள படைகளை சிறிலங்கா அதிபர் குறைக்க வேண்டும். 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்ட போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற, மீறல்கள் குறித்து நம்பகமான குற்றச்சாட்டுகள் குறித்து, போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.

இறுதிக் கட்டப்போரில் நடந்தது என்ன என்பது குறித்து நம்பகமான உள்நாட்டு விசாரணை நடத்தப்படாவிட்டால் அனைத்துலக விசாரணை நடத்தப்படலாம்.  சிறிலங்காவில் எட்டு வெவ்வேறுபட்ட தரப்பினை சந்தித்து கலந்துரையாடியுள்ளேன். கோரிக்கை விடுத்த அனைவரையும் சந்திக்க முடியாது போனமைக்கு வருந்துகிறேன்.

சிறிலங்கா பயணம் குறித்து அடுத்த மாதம் இடைக்கால அறிக்கையையும் மார்ச் மாதத்தில் முழு அறிக்கையையும் சமர்ப்பிக்கவுள்ளேன்.  இந்தியப் பாரம்பரியத்தில் இருந்து வந்தவள் என்பதால், விடுதலைப் புலிகளின் சார்பு பிரதிநிதி என்று இங்குள்ள சில அமைச்சர்களும், ஊடகங்களும் விபரித்தன.

அவர்களின் பணத்துக்காக செயற்படுபவள் என்றும், பெண் புலி என்றும் கூறினர். இது தவறானது என்பதுடன் மிகமோசமான தாக்குதல் ஆகும். மூன்று அரசாங்க அமைச்சர்கள் கடந்தவாரம் என்னை விமர்சித்தனர். ஆனால் நான் ஒரு தென்னாபிரிக்கர். அதனை முன்னிட்டு பெருமிதம் அடைகிறேன் என்பதை முதலில் கூற வேண்டும்.

பல உயிர்களை கொன்றழித்த இரக்கமற்ற அமைப்பே புலிகள் அமைப்பு. நீலன் திருச்செல்வத்தையும் அவர்கள் கொலை செய்தனர். இப்படியான இரக்கமற்ற அமைப்புக்கு, மகிமைமிக்க ஐ.நா அமைப்பில் மரியாதை கிடைக்கும் என்று புலிகளிடம் பணம் பெறும் புலம்பெயர் அமைப்புக்கள் எதிர்பார்க்க முடியாது.

30 ஆண்டு போரில் உயிர் பலிகொடுத்த அனைத்து இலங்கையர்களையும் நான் மதிக்கிறேன். அவர்களுடைய குடும்பங்களுக்கு நான் அனுதாபத்தை தெரிவிக்க விரும்புகிறேன். அந்த இழப்பை அவர்களால் ஈடுசெய்து கொள்ள முடியாது. மோதல் முடிவடைந்தும் துன்பம் தீரவில்லை.

வடக்கு தேர்தல் அறிவிப்பை வரவேற்கிறேன். அமைதியான- நீதியான சூழலில் தேர்தல் நடக்கும் என நான் நம்புகிறேன். அதிகார பகிர்வுக்கு அது புதிய கட்டமாக அமையும். சிவில் நடவடிக்கைகளில் இராணுவ தலையீடு குறித்து கவலை அடைகிறேன். சில இராணுவ முகாம்கள் தேவை என்பது தெளிவு. ஆனால் காணி அபகரிப்பு சிவில் விடயங்களில் தலையிடுதலுக்கு கட்டுப்பாடு இருக்க வேண்டும்.

ஒரே இரவில் இராணுவத்தை குறைத்துவிட முடியாது என்ற பாதுகாப்பு செயலரின் கருத்தை நான் ஏற்கிறேன். ஆனால் போரால் பாதிக்கப்பட்ட இரண்டு மாகாணங்களிலும், படைக்குறைப்பு நடவடிக்கை விரைவுபடுத்தப்பட வேண்டும். தொடர்ந்து, அதிகளவு படைச்செறிவு காணப்பட்டால் அது இடையூறு மற்றும் கட்டுப்பாட்டுக்கு வழிவகுக்கும்.

பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் முறைப்பாடுகள் கவலையளிக்கின்றன. மாகாண அமைச்சர்கள், ஆளுநர்கள் கலந்து கொண்ட பாதுகாப்பு அமைச்சின் கூட்டத்தில் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து கடும் எச்சரிக்கையை விடுத்தேன். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தினேன்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குவதற்கான நேரம் இதுவெனவும் ஆலோசனை வழங்கியுள்ளேன். அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு வடக்கில் கட்டுப்பாடு விதித்துள்ளதை அறிந்து நான் அதிர்ச்சி அடைந்தேன். அந்த கட்டுப்பாட்டை அரசாங்கம் தளர்த்தும் என்று நம்புகிறேன்.

காணாமல் போனவர்களது உறவினர்களை சந்தித்து பேசினேன். வெள்ளை வான் கடத்தல்கள் குறித்தும் தகவல் அறிந்தேன். அரசாங்கம் நியமித்துள்ள ஆணைக்குழுவிடம் இருந்து நான் கூடிய தகவல்களை எதிர்பார்க்கிறேன். சட்டம் ஒழுங்கு என புதிய அமைச்சு உருவாக்கி பொலிஸ் அதிகாரங்கள் அதன் கீழ் கொண்டு வரப்பட்டாலும் இந்த இரு அமைச்சுக்களும் சிவில் அமைச்சரின் கீழ் அல்வாது சிறிலங்கா அதிபரின் கீழ் உள்ளமை கவலையளிக்கிறது.

வழிபாட்டுத் இடங்கள் மீதான தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் காணொலி ஆதாரத்தில் இனங்காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

என்னை சந்தித்தவர்கள் சந்திக்க முயன்றவர்கள் அச்சுறுத்தப்பட்டமை குறித்து தகவல் கிடைத்துள்ளது. முல்லைத்தீவு மீள்குடியேற்ற கிராமங்களுக்குச் சென்று நான் திரும்பியதும் காவல்த்துறையினரும், இராணுவத்தினரும் அங்கு சென்றதாக அறிகிறேன்.  திருகோணமலையிலும் என்னை சந்தித்தவர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

சிறிலங்காவில் இவ்வாறான நிலை காணப்படுவது மிகவும் கவலையளிக்கிறது. அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ள ஊடகவியலாளர்கள், சிவில் சமூக அமைப்பினருக்கு பாதுகாப்பு வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன்.

2005ம் ஆண்டுக்குப் பின் 30ற்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பிரகீத் எக்னெலிகொட உள்ளிட்ட பலர் காணாமல் போயுள்ளனர். பலர் நாட்டை விட்டுச் சென்றுள்ளனர். உதயன் தொடர் தாக்குதலுக்கு உள்ளானது. ஏனைய பத்திரிகைகளும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின. சிறிலங்காவில் கருத்து வெளியிடும் சுதந்திரத்திற்கு பாதிப்பு உள்ளது.

பல சார்க் நாடுகளில் உள்ளது போல தகவல் அறியும் சட்டம்  கொண்டு வரப்பட வேண்டும்.18வது திருத்தச் சட்டம் தேர்தல் திணைக்களம், மனிதஉரிமை ஆணையம் போன்றவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் பிரதம நீதியரசர் நீக்கப்பட்டமை நீதித்துறை மீதான அரசியல் அழுத்தத்தை உறுதி செய்கிறது.”என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.