Header Ads



சதி வழி சென்றேன், நல்வழி கண்டேன்

(அவ்பர் முஸ்தபா + அரப் நியூஸ்)

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் கிறிஸ்தவரான ஷரிபா கார்லோ அவர்கள், அமெரிக்காவில், “இஸ்லாத்தை அழிக்க வேண்டும்" என்ற சதித்திட்டத்துடன் இயங்கும் ஒரு குழுவில் சேர்ந்துஅவ்வஞ்சனையான எண்ணத்துடன் முஸ்லிம்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தினார். ஆனால் “அல்லாஹ்வோ.... அதைவிட மிகச்சிறந்த திட்டம் வைத்திருந்தான்” என்கிறார் கார்லோ.

இஸ்லாத்திற்குச் சதி செய்ய வந்தவர் அழகு விதி கண்டார்; இகழ வந்தவர் அல்லாஹ்வைப் புகழ்ந்து மகிழ்ந்தார்; இஸ்லாத்தைச் சரிசெய்ய வந்து, தன்னைச் சரிசெய்து கொண்டார்; நெஞ்சுருகினார்; இஸ்லாத்துடன் நெருக்கமாகினார்; இன்னும் இறுக்கமாகினார்.

சாந்தி பெற்று புதிய பாதையில் இப்போது புறப்பட்டுச் செல்கிறார். இச்சுவையான கதையை அவரே சொல்லக் கேட்போம்.

“நான் எப்படி இஸ்லாத்தில் நுழைந்தேன் என்பது, பல கபட திட்டங்களின் ஒரு கதை! நான் திட்டம் தீட்டினேன்; நான் இருந்த குழுவும், திட்டங்களைத் தீட்டியது; அல்லாஹ்வும் திட்டங்களைத் தீட்டினான்திட்டம் தீட்டுவதில் அல்லாஹ் மிகச்சிறந்தவனாக இருக்கிறான்.

எனது பதின்பருவ காலத்தில் ஒருநாள், நயவஞ்சகத் திட்டங்களைக் கொண்ட ஒரு குழுவின் பார்வை என்மீது விழுந்தது. அவர்கள் அமெரிக்க அரச பதவிகளில் உள்ளவர்கள். இக்குழுவோ தளர்வான தனிநபர்கள் கூட்டணியாகத்தான் இருந்தது. அநேகமாக இன்றும் அப்படித்தான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். அவர்களிடம் “இஸ்லாத்தை அழிக்க வேண்டும்” என்ற ஒரு விசேட திட்டம் இருக்கிறது.

நான் அறிந்த மட்டும், இது ஒரு அரசசார்பான குழுவாகத் தெரியவில்லை. வெறுமனே சொல்வதானால், தமது நிலைப்பாட்டைப் பயன்படுத்தி தங்கள் காரியத்தை முன்னெடுக்கவே அமெரிக்க அரசாங்கத்தில் வேலையில் சேர்ந்திருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.

எனது பேச்சில் உள்ள தெளிவையும், எனது இயல்பில் உள்ள உந்துதல் உணர்வையும், பெண்கள் உரிமைகள் பரிந்துரைப்பதில் நான் காட்டும் அக்கறையையும் கண்ட, இந்தக்குழுவில் உள்ள ஒருவர், என்னை அணுகி, “மத்திய கிழக்கை மையமாகக் கொண்ட சர்வதேச உறவுகள்” கற்கையை நான் கற்றுத் தேர்ந்தால், எனக்கு எகிப்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் வேலை பெற்றுத் தருவதாகத் திடமானதொரு வாக்குறுதியை வழங்கினார்.
அவர், நான் எகிப்திற்குப் போக வேண்டும்; என் நிலையைப் பயன்படுத்தி அங்குள்ள முஸ்லிம் பெண்களுடன் பேசிப்பழகவும் மற்றும் அனுபவமற்ற பெண்கள் உரிமைகள் இயக்கத்தை ஊக்குவித்து, அதனூடாக இக்குழுவின் திட்டங்களை அமுல்படுத்தவும் நினைத்தார்.

இது ஒரு நல்ல யோசனையாக எனக்குத் தோன்றிற்று. ஏனெனில், முஸ்லிம் பெண்களும் 20 ஆம் நூற்றாண்டின் சுதந்திர ஒளியைக் காணவேண்டும் என்ற அவா எனக்குள் இருந்தது. இதற்காக, அவர்களை வழிநடத்த வேண்டும் என்று நினைத்தேன். காரணம் முஸ்லிம் பெண்களை ஒரு நலிவுற்ற – ஒடுக்கப்பட்ட - ஒரு குழுவாகவே தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கிறேன்.

இந்த நோக்கத்தை அடைவதன் முதல் மைற்கல்லாக, கல்லூரிக்குச் சென்று, குர்ஆன்ஹதீஸ் மற்றும் இஸ்லாமிய வரலாறு என்பன கற்றேன். மேலும், இந்தத் தகவல்களைப் பயன்படுத்தும் வழிகளையும் கற்றறிந்தேன்.வார்த்தைகளைத் திரிபுபடுத்திக் கூறி வசியப்படுத்தும் உத்தியையும் கற்றுக்கொண்டேன். இந்த உத்தியைப் படிக்கும் போதெல்லாம் சுவாரஸ்யமாகவும், இன்னும் இவ்வுத்தி இன்றியமையாத ஒரு கருவியாகவும் இருந்ததை அறிந்தேன். திரிபுபடுத்தும் எனது பணிக்கு இந்த வழி சரியென என் புலனும் சொன்னது. அதனோடு, என் மனதை ஒரு பெரும் பீதியும் ஆட்கொண்டிருந்தது.
இஸ்லாத்திற்கு எதிராகச் செயற்பட வேண்டும் என்ற குறிக்கோளுடன், நான் கிறிஸ்துவத்தைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள வகுப்புகள் எடுத்தேன். ஹாவேட் பல்கலைக்கழகத்தில் இறையியலில் முனைவர் பட்டம் பெற்றவரும், புகழ்பெற்றவருமான ஒரு பேராசிரியரிடமே இதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என முடிவும் செய்தேன்.

நான் விரும்பியதைப்போல் நல்லதொரு குரு அமைந்தார்; வகுப்புகள் நடந்தேறின. எனது திட்டத்திற்கும் நான் கற்கும் பாடங்களுக்கும் சம்பந்தமில்லாமல் இருந்ததை ஒருகட்டத்தில் என்னால் உணர முடிந்தது. கடைசியில் இந்த பேராசிரியர் **‘ஒரு யுனிட்டேரியன்’ கிறிஸ்தவர் என்பதை அறிந்து கொண்டேன். அவர் **“ற்ரினிட்டி” கொள்கையை அடியோடு மறுப்பவர். இதை, நிரூபிக்க; அவர் கிரேக்கம்ஹீப்ரு மற்றும் **அராமிக் போன்ற மொழிகளில் இருந்த பைபிள்களின் ஆதாரங்களை எடுத்துகாட்டி; அவை எப்படி மாற்றப் பட்டிருக்கின்றன எனத் தெளிவாகக் காட்டினார். அதேபோல், பைபிளில், மனிதர்களால் சேர்க்கப்பட்டவைகளையும், நீர்த்தவைகளையும், நீக்கியவைகளையும், கலப்படம் செய்தவற்றையும்; அவை எவ்வாறு, வரலாற்று நிகழ்வுகளால் வடிவம் கொடுத்து மறைக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் சான்றுகளுடன் எடுத்து விளக்கினார்.

இந்தக் கற்கை முடிந்த போது, இத்தனை கால எனது நம்பிக்கை நலிவடைய ஆரம்பித்தது - நூற்றுக்கு நூறு உண்மையான மார்க்கம் என நம்பிய - எனது மதம் மனிதக் கரங்களால் மாசுபடுத்தப் பட்டிருப்பதை எனது கற்கை சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்துக் காட்டியது; சதித்திட்டங்கள் சங்கடத்துக்குள்ளாயின. மனம் மார்க்கமின்றி வெறுமையாகியது, ஏமாற்றப்பட்ட உணர்வுடன் ஊமையாகியது. நான் சோர்ந்து போனேன். இந்நிலை என்னைச் சிறுமையாக்கியது. பொறுமையானேன்; வெறுமை போக்க உள்ளம் உண்மை தேடியது. ஆனால், அன்று இஸ்லாம்தான் உண்மை என்பதை ஏற்றுக்கொள்ளும் எண்ணமோ, தயார்நிலையோ எனக்குள் இருக்கவேயில்லை.

காலம், நான் காத்திருக்க மாட்டேன்! என்பதுபோல், கடந்து கொண்டே இருந்தது. எனது ஆய்வும் தொடர்ந்து கொண்டே இருந்தது. இதுவே எனது எதிர்காலமும் எனது வேலையும் என உறுதி செய்துகொண்டு, கற்றல் தொடர்ந்தது. இந்தக் கற்றலில் மூன்று ஆண்டுகள் கழிந்தன. இதற்கிடையில்முஸ்லிம்களிடம் அவர்களின் நம்பிக்கைகளைப்பற்றி அடிக்கடி கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தேன். இப்படிக் கேட்டவர்களுள், முஸ்லிம் மாணவர்கள் சங்க அங்கத்தவர்களில் ஒருவரே, சகோதரர் அப்துல்லாஹ் ஆவார்.

‘தீன்’ பற்றிய தேடலில் எனக்கிருந்த ஆர்வத்தைக் கண்ட அவர்அவரின் சொந்த அலுவலைப் போன்று உற்சாகத்துடன்; இஸ்லாம் பற்றிய நல்ல அறிமுக அறிவை எனக்கு ஊட்டினார். நானும் அவரும் சந்திக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், இந்த தஃவாப் பணியை அவர் செய்தார். இது நான் செல்ல இருந்த சதிவழியை துவக்கத்திலேயே துவம்சம் செய்தது. நந்நெறி வழிதேட பாதையமைத்தது.

அல்லாஹ் அவனின் அருட்கொடைகளை அந்த சகோதரருக்கு அதிகரிக்கச் செய்வானாக!

ஒரு நாள்இவர் என்னைத் தொடர்பு கொண்டுமுஸ்லிம்களின் குழு ஒன்று இந்நகரத்திற்கு வரவுள்ளதாகவும், அவர்களை நான் சந்திக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். எனது மார்க்கத்தின் மீதான என் நம்பிக்கை சிதறுண்டுபோய், நான் வழிதடுமாறி நின்றதாலும், சகோதரர் அப்துல்லாஹ்வின் தஃவாவில் உண்மை நிறைந்திருப்பதை உணர்ந்ததாலும் அவரின் அழைப்பை விருபோடு ஏற்றுக்கொண்டேன். எனது சந்திப்புக்கு அன்றையதினம் இஷா தொழுகையின் பின்னர் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

என்னை ஓர் அறைக்குள் அழைத்துச் சென்றார்கள். அங்கே குறைந்த பட்சம் 20 ஆண்கள் உட்கார்ந்திருந்தனர். நான் உட்கார ஓர் இடமும் அமைத்திருந்தனர். அங்கு நான் முதிர்ச்சியான, பண்புள்ள ஒரு பாகிஸ்தான் சகோதரர் முன், நேருக்கு நேராக அமர்ந்திருந்தேன். ‘மாஷாஅல்லாஹ்!’ அவரிடம், கிறிஸ்தவம் பற்றிய ஆழமான அறிவும், தெளிவும் அதிகமாக இருப்பதைப் புரிந்துகொண்டேன். நானும் அவரும் பைபிளின் மற்றும் குர்ஆனின் பல்வேறு பகுதிககளைப் பற்றிக் கலந்துரையாடினோம்; வாதிட்டோம். எமது இந்த கருத்துப் பகிர்வுகள் எங்களை ‘பஜ்ர்’ வரைக்கும் இழுத்துச் சென்றது.

கிறிஸ்தவம் சம்பந்தமாக நான் கற்றுக் கொண்டவையும், எனக்குத் தெரிந்திருந்தவையும், இந்த அறிஞர் சொல்லச் சொல்லச் சமன்பாடானது. நான் அறிந்திராதவைகளையும், அரிதானவைகளையும் என்னை அறிய வைத்தார். இப்படிக் கருத்துப் பரிமாற்றத்தில் இருந்தபோது, என்னில் எதோ ஒரு மாற்றத்தை அவர் உணர்ந்திருக்க வேண்டும்!... அவர் என்னை சாந்தி வழி செல்ல அழைத்தார்; அந்த அழைப்பு என்னைக் கொஞ்சம் தூக்கி நிமிர்த்தியது; இன்னும் அது எனக்கு அவசியமாகவும் இருந்தது.

இதுவரை யாருமே என்னை இப்படி அழைத்ததில்லை. எனது மூன்று வருடகால ஆராய்ச்சியின் போதோ, அல்லது தேடலின் போதோ எவருமே இப்படியான ஓர் அழைப்பை எனக்கு விடுத்ததே இல்லை. எனக்குக் கற்றுத் தந்திருக்கிறார்கள்; என்னோடு வாதிட்டிருக்கிறார்கள்; இன்னும் என்னை அவமதித்தும் இருக்கிறார்கள்; ஆனால், யாரும், ஒருபோதும் என்னை இஸ்லாத்தின் பக்கம் அழைக்கவே இல்லை. அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்வழி காட்டுவானாக!
இந்த மகான் என்னை இஸ்லாத்துக்கு அழைத்ததும், என்னுள் ஒரு ‘சுவிட்ச்’ அழுத்தப்பட்டது போல், உடல் முழுவதும் வெளிச்சம் பரவியது. ஒளி தொடுவதையும் அதன் ஸ்பரிசத்தையும் என் நரம்புகள் உணர்ந்தன. அவரின் அழைப்பும், அவர் காட்டும் வழியும் உண்மை என்று, என் ஆத்மாவின் ஆழத்தில் ஒரு சமிக்ஞை சத்தியம் செய்தது. சறுக்கலற்றதும் – முக்கியமானதும் - முழுமையானதுமான - ஒரு முடிவு எடுக்கும் அந்த வேளையானது, என் சிந்தனைக்குள் வேகமாய் வந்து விவேகம் தந்தது. ‘அல்ஹம்துலில்லாஹ்!’ இரும்புத் துகள்களை இழுக்கும் காந்தம் போல் சிந்தனைகள் எல்லாம் உளத்தில் சங்கமமாகித் தெளிவாயின; உண்மைகள் தெரிவாயின; இறுதியில் இறைவனின் இஷ்டம் முடிவானது.

எல்லாம் வல்ல அல்லாஹ் - அந்தக் கருணையாளன் - என் இதயக் கதவைத் திறந்தான்; அந்த அறிஞரின் அழைப்புக்கு “ஆம்” நான் “முஸ்லிமாக விரும்புகிறேன்” என்றேன்!

ஆங்கிலத்திலும், அரபியிலும் **ஷஹாதாவைச் சொல்லித் தந்தார். ஓர் அழகிய விசித்திர உணர்வு என்னுள் ஊர்ந்துகொண்டிருந்தது. மேலும் என் நெஞ்சின் மீதிருந்து ஒரு மிகப்பெரிய பாரம், இப்போதுதான் இறக்கிவைக்கப்பட்டது போலும் உணர்ந்தேன்.

வாழ்கையில் முதன் முறையாக, இன்றுதான் மூச்சு விடுவதைப்போல், மூச்சு முட்டித் திணறியது. கணச்சுவாசப் பயிற்சியில் மீண்டும் ‘புதுமூச்சு’ வந்தது அதனோடு உளமும், உடலும் உச்ச உவகையடைந்தன.

அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் எனக்கு ஒரு புதிய வாழ்க்கையைத் தந்திருக்கிறான் – ஒரு புதிய துவக்கம் தந்தான் – சுவர்கத்திற்கான வாய்ப்பைத் தந்தான். எனது பிரார்த்தனை எல்லாம், நான் மரணிக்கும் வரைக்கும் முஸ்லிமாகவே வாழ்ந்து முஸ்லிமாகவே மரணிக்க வேண்டும் என்பதே!
ஆமின்

(யாஅல்லாஹ் இந்த சகோதரியின் பிரார்த்தனையை அங்கீகரித்து அருள்புரிவாயாக. ஆமீன்!!)

6 comments:

  1. allhamthulillah allah mika pormayalan

    ReplyDelete
  2. Masha Allah Please guide these BBS members

    ReplyDelete
  3. alhamdhulillah.............

    kaetpathatke migavum sathosamaga ullathu.kangal kalangughirathu.ennudaya rabbu enakum ISLAM markathil thelivai aetpaduthi ennudaiya IEMANaiyum uruthi pera cheivanaga...
    aameen.

    Ovvoru manithanum unmaiyana MUSLIMgalaga valnthu unmaiyana MUSLIMgalaga maranikka vendi thaayai vida 70 madangu karunai vaiththulla valla allah vidam pirarthikiren...

    ReplyDelete
  4. Alhamdhulillah...

    allah will Rahmath and hidayath you and 4 us sister....

    aameen.....

    ReplyDelete
  5. அல்லாஹ்வின் தீனை அல்லாஹ் காப்பாற்றிக்கொள்வான் முஸ்லிமகளே உ(எ)ங்களைக் காப்பாற்றிக்கொள்ள அல்லாஹ்வின் தீனை(குர்ஆன்,ஹதீஸ் மட்டும்)பற்றிப்பிடித்துக்கொள்ளு(வோம்)ங்கள்

    ReplyDelete
  6. இஸ்லாத்தை பற்றி மற்றவருக்கு தெரியாமல் இருப்பதே பலரும் இஸ்லாத்தை ஏற்காததற்கு முக்கிய காரணமாக உள்ளது. பிறமதத்தில் இருந்து இஸ்லாத்திற்கு வருவதற்கு எத்தனையோ தியாகம் செய்கிறார்கள். தாய் தந்தையை இழந்து, உடன்பிறப்புக்களை இழந்து, கணவன் மனைவி உறவை துண்டித்து, பொருளாதரத்தை இழந்து எத்தினையோ தியாகங்கள் செய்கிறார்கள். ஆனால் நமக்கோ எந்த தியாகமும் செய்யாமல் கிடைத்துள்ளது அப்படி இருந்தும் நாமோ இஸ்லாத்தை பிறருக்கு எத்தி வைப்பது கூட இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.