Header Ads



பஷீர் சேகுதாவூத்துக்கு எதிராக எவரும் வாய் திறக்கவில்லை - சபீக் ரஜாப்தீனுக்கும் கண்டனம்

(ADT) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதிஉயர் பீடக் கூட்டம் மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் கட்சியின் தலைமையகமான தாருஸ்லாமில் நேற்று (29) இரவு நடைபெற்றது. கட்சியின் தவிசாளர் - அமைச்சர் பஷீர் சேகுதாவூதை கட்சியில் இருந்து விலக்கும் தீர்மானம் ஒன்று தலைவர் ஹக்கீமினால் இக்கூட்டத்தில் அறிவிக்கப்படும் என ஊடகங்களில் வெளிவந்த செய்திகளே இப்பரபரப்புக்கு காரணமாகும்.

கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்தும் கலந்து கொண்டார்.

எனினும் இக்கூட்டத்தில் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்துக்கு எதிராக எவரும் வாய் திறக்கவில்லை. வெளியில் வாய்கிழிய பேசியோர் அங்கு அமைதியாக இருந்தனர் என உயர்பீட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த கூடத்தில் 3 மாகாண சபைகளுக்குமான தேர்தல் குறித்து ஆராயப்பட்டது.

அத்துடன் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் கட்சியின் செயலாளருக்கு எழுதிய கடிதம் தொடர்பாக ஆராயப்பட்டது.

அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் பஷீர் சேகுதாவூத்துடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸை பிளவுப்படுத்தும் சதித்திட்டத்தில் ஈடுபடுவதாகவும், அமைச்சர் பதவியை வகிக்கும் சேகுதாவூத், அரசாங்கத்தின் கைப்பாவையாக வேலை செய்து வருவதால் அவருக்கு எதிராக நடத்தப்பட்ட ஒழுக்காற்று விசாரணை தொடர்பான குற்றச்சாட்டு பத்திரம் அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது எனவும் அவரை கட்சியில் இருந்து நீக்குவது தொடர்பிலான தீர்மானம் எடுக்கப்படும் எனவும் சபீக் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.

இவரது கருத்து பற்றி தவிசாளர் பஷீர் சேகுதாவூத் நேற்றுக் காலை கட்சியின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அதில் சபீக் ரஜாப்தீன் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்து தொடர்பாக அதியுயர் பீடக் கூட்டத்தில் ஆராயுமாறு கேட்டிருந்தார்.

தவிசாளரின் கடிதம் அதியுயர் பீட அமர்வில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அங்கு சபீக் ரஜாப்தீனுக்கு தன்னைப் பற்றி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட எந்தவிதமான அதிகாரமும் இல்லை என பஷீர் சேகுதாவூத் தெரிவித்ததோடு, கட்சி சார்பாக தலைவர் மற்றும் செயலாளர் மாத்திரமே தன்னைப் பற்றி கருத்து வெளியிட அதிகாரம் உள்ளவர்கள் என்றும் தெரிவித்தார்.

பஷீர் சேகுதாவூத்தின் கருத்து அதியுயர் பீட உறுப்பினர்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு அவர் மீது முழுமையான நம்பிக்கை வெளியிடப்பட்டது.

அத்துடன் சபீக் ரஜாப்தீன் மீது உயர் பீட உறுப்பினர்களால் பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

கட்சியையும் ஆதரவாளர்களையும் குழப்பும் வகையில் சபீக் ரஜாப்தீன் நடந்துள்ளார் என்றும் அங்கு தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் கட்சி சார்பாக இவ்வாறான பாரதூரமான கருத்துகளை இனி ஊடகங்களுக்கு வெளியிடக் கூடாது என்று சபீக் ரஜாப்தீனுக்கு தலைவர் ஹக்கீம் உத்தரவிட்டார் என அந்த உயர்பீட உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.