எச்சரிக்கை..! அமெரிக்க உளவுத்துறை எந்த வடிவிலும் உங்களை பின்தொடரலாம்..!
புகழ்பெற்ற இணையதளம் ஒன்றில் கடந்த ஆண்டு ஒரு விளம்பரம் வெளியாகி இருந்தது. விளம்பரம் செய்த நபர், அணுக்களை செறிவூட்டக்கூடிய ‘யெல்லோ கேக்’ எனப்படும் யூரேனியம் தனக்கு ஏராளமாக தேவைப்படுவதாகவும், விற்க விரும்புவோர் தொடர்பு கெள்ளலாம் எனவும் விளம்பரப்படுத்தி இருந்தார்.
அந்த விளம்பரத்தை பார்த்த பேட்ரிக் கேம்பெல் என்ற நபர், தனக்கு தங்கம், வைரம், யூரேனியம் ஆகியவற்றை விற்கும் பலருடன் தொடர்பு உள்ளதாக பதிலளித்தார். விளம்பரத்தில் கண்டபடி, தன்னால் ஆயிரம் கிலோ வரை யூரேனியத்தை சப்ளை செய்யமுடியும் எனவும் அவர் உறுதியளித்தார்.
விளம்பரம் செய்த நபரை போனில் தொடர்பு கொண்டு சரக்கை எங்கே சப்ளை செய்ய வேண்டும் ? என்று கேட்டதற்கு எதிர்முனையில் பேசிய நபர், ஈரானுக்கு அனுப்பி வைக்கவேண்டும். உங்களால் முடியுமா ? என விசாரித்துள்ளார்.
அதற்கு பதிலளித்த பேட்ரிக் கேம்பெல், லிபேரியா மற்றும் சியரா லியோன் நாடுகள் வழியாக சுலபமாக யூரேனியத்தை ஈரானில் உள்ள பந்தர் அபாஸ் துறைமுகத்துக்கு என்னால் சப்ளை செய்ய முடியும் என்று மார்த்த்ட்டியுள்ளார்.
யூரேனியத்தை வாங்க விரும்பிய நபர், தனக்கு ‘சாம்பிள்’ காட்ட வேண்டும் என்று கூறியதையடுத்து, கடந்த புதன் கிழமை பிரான்ஸ் தலைநகர் பாரிசிலிருந்து அமெரிக்காவில் உள்ள நியூ யார்க் நகருக்கு சாம்பிளுடன் பேட்ரிக் கேம்பெல் வந்தார்.
தனிநபர்கள் யூரேனியத்தை வாங்கவோ, விற்கவோ உலக நாடுகள் தடைசெய்துள்ளதால், யூரேனியத்தை ஒரு பிளாஸ்டிக் கவரில் அடைத்து கால் ஷூவினுள் மறைத்து கொண்டு வந்த பேட்ரிக் கேம்பெல்லை நியூ யார்க்கில் உள்ள ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.
பாவம், "யூரேனியம் தேவை" என்று விளம்பரப்படுத்தியிருந்த நபர் அமெரிக்காவின் குடியுரிமை உளவுத்துறை அதிகாரி என்பது பேட்ரிக் கேம்பெலுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்க நியாயமில்லை.
தற்போது, நியூ யார்க் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேட்ரிக் கேம்பெல் மீது புளோரிடாவில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், 10 லட்சம் அமெரிக்க டாலர்களும் அபராதமாக விதிக்கப்படலாம் என தெரிகிறது.
Post a Comment