யார் இந்த துன்டா..?
(Thoo)டெல்லி நீதிமன்ற வளாகத்தில் செய்யத் அப்துல் கரீம் என்ற துன்டா (வயது 70) சரமாரியாக தாக்கப்பட்டார். அவரது வழக்கில் இரகசிய விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த சில தினங்களாக அனைத்து ஊடகங்களும் துன்டா என்கிற 70 வயது முதியவரைப் பற்றி சரமாரியாகச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இவற்றில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்று யாருக்கும் உறுதியாகத் தெரியாத நிலையில் ஊடகங்கள் ஏற்படுத்தும் கசப்பான பகை உணர்வுகள் நீதிமன்ற வளாகத்திலேயே நேற்று வெளிப்பட்டது.
3 நாள் போலீஸ் காவல் முடிந்த நிலையில், டெல்லி பாட்டியாலாவில் உள்ள மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக துன்டா அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கே கூடியிருந்த வன்முறைக்குப் பெயர்போன இந்து சேனா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த குண்டர்கள், துண்டாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது துன்டாவின் முதுகில் ஒருவன் சரமாரியாகத் தாக்கினான். அவன் துண்டாவின் முகத்தில் குத்த முயற்சித்தபோது, போலீசார் தடுத்து விட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் துன்டா, மாஜிஸ்திரேட்டு ஜெய் தரேஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மாஜிஸ்திரேட்டு ஜெய் தரேஜாவிடம் துன்டா, ‘‘ஐயா, என்னிடம் வக்கீல் வைத்து வாதாட பணம் இல்லை’’ எனக் கூறினார். ஆனால், அப்போது வக்கீல் எம்.எஸ். கான் என்பவர், ‘‘இந்த வழக்கில் நான் துன்டா சார்பில் ஆஜராகிறேன். டெல்லி சிறப்பு போலீஸ் அலுவலகத்திற்குச் சென்று நான் இதுதொடர்பாக துன்டாவின் கையெழுத்தைப் பெற்றிருக்கிறேன்’’ என்று கூறினார்.
இதுகுறித்து துன்டாவிடம் மாஜிஸ்திரேட்டு கேள்வி எழுப்பினார். அப்போது துன்டா, ‘‘வக்கீலுக்குக் கொடுக்க என்னிடம் பணம் இல்லை. வக்கீல் கானை எனக்கு நிறைய தெரியாது. ஆனால் அவர் எனது சார்பில் ஆஜராவார்’’ எனக் கூறினார். இதற்கிடையே ஒரு வக்கீல், துன்டாவுக்கு எதிராகக் கோஷம் போட்டார். நீதியை நிலைநாட்டுவதற்காகப் பாடுபட வேண்டிய வக்கீல்களின் நிலை இப்படி உள்ளது.
அப்போது துன்டா தொடர்பான வழக்கு விசாரணையை மூடிய நீதிமன்ற அரங்கில் இரகசியமாக நடத்த மாஜிஸ்திரேட்டு முடிவு செய்து அது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். துன்டாவின் வக்கீல், அரசு வக்கீல் தவிர்த்து மற்றவர்களும், பத்திரிகையாளர்களும் நீதிமன்ற அரங்கை விட்டு வெளியேற அவர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து துன்டாவை மேலும் 10 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்குமாறு அரசு வக்கீல் கேட்டுக்கொண்டார். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட மாஜிஸ்திரேட்டு ஜெய் தரேஜா, துன்டாவை மேலும் 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.
இதற்கிடையில் துன்டாவைத் தாக்கியதாக, ஷிவ்குமார் ராகவ், விஷ்ணுகுப்தா ஆகிய இரு குண்டர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களில் ஷிவ்குமார் துன்டாவை முதுகில் தாக்கியவன். அவன் துன்டாவைத் தாக்கும்போது, ‘‘காட்டிக்கொடுத்த துரோகி துன்டா. அவரை தூக்கில் போட வேண்டும்’’ என்று கோஷம் எழுப்பியதாக, நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
துன்டா மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள்: மும்பை, டெல்லி உள்பட நாடு முழுவதும் நடைபெற்ற 43 குண்டு வெடிப்புகளில் மூளையாகச் செயல்பட்ட லஷ்கர்–இ–தொய்பாவின் முக்கிய நபர்.
இவர் கடந்த 16ந்தேதி இந்திய–நேபாள எல்லையில் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்று ஊடகங்கள் கூறுகின்றன. இது எந்த அளவுக்கு உண்மை என்பது விசாரணையின்போதுதான் தெரிய வரும்.
அதைத் தொடர்ந்து டெல்லி மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு நிதிமன்றத்தில் கடந்த சனிக்கிழமை துண்டா ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
இதற்கிடையில் இவரைக் குறித்து பல பரபரப்பு தகவல்கள் ஊடகங்களில் உலா வருகின்றன. நமதூர் ஊடகங்களைப் பற்றி எல்லோருக்கும் தெரியும்.
அவரை இரகசிய இடத்தில் வைத்து டெல்லி போலீசார் விசாரித்து வந்தனர். அப்போது அவர் தனக்கும், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கும் உள்ள நெருங்கிய தொடர்பு குறித்து பரபரப்பு தகவல்களை வெளியிட்டார் என்று கூறப்படுகிறது.
மும்பை தாவூத் இப்ராஹீம், இந்திய நகரங்களில் நாசவேலைகளை அரங்கேற்றியதால் தேடப்பட்டு வரும் ஹபீஸ் சையத், மசூத் அசார், ஜாகிவுர் ரஹ்மான் லக்வி ஆகியோருக்கும் உள்ள தொடர்பு குறித்த தகவல்களையும் அவர் தெரிவித்தார் என்றும் கூறப்படுகிறது.
போலீஸ் காவலில் நடத்திய விசாரணையின்போது, ‘‘இந்திய கள்ள ரூபாய் நோட்டுகள் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு அதிகாரி மூலம், வங்காள தேசம் மற்றும் நேபாள எல்லை வழியாக இந்தியாவுக்குக் கடத்தப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டதாக துண்டா தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இப்பொழுதுதான் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு அவர் விசாரிக்கப்படுகிறார். இனி நீதிமன்ற விசாரணை ஆரம்பிக்கும். அதன் பிறகு உரிய சாட்சியங்கள், ஆதாரங்கள் அடிப்படையில் அவர் உண்மையிலேயே குற்றம் செய்தாரா, இல்லையா என்பது நிரூபணமாகும். ஆனால் அதற்குள்ளேயே அனைத்துத் தீர்ப்புகளையும் ஊடகங்கள் எழுத ஆரம்பித்துள்ளது நடுநிலையாளர்களின் புருவங்களை உயர்த்தியுள்ளது.
Post a Comment