Header Ads



'ஊடக சுதந்­திரம் குறித்து உதட்­ட­ளவில் மட்டும் செயற்­பட வேண்­டா­ம்'

(Vi) கம்­பஹா மாவட்­டத்தில் உள்ள வெலி­வே­ரியா பிர­தேச மற்றும் அதனைச் சூழ­வுள்ள பிர­தே­சங்­களைச் சேர்ந்த மக்கள் நீர் அசுத்­த­மாக்கல் பிரச்­சி­னை­யொறுக்கு தீர்வு கோரி கடந்த வியா­ழ­னன்று நடத்­தி­யி­ருந்த வீதி ஆர்ப்­பாட்­டங்­களைத் தடுத்து நிறுத்தி அங்கு அமை­தியை நிலை­நாட்­ட­வென அர­சாங்கம் பாது­காப்புப் படை­யி­னரைக் கட­மையில் ஈடு­ப­டுத்­திய விதம் குறித்து இலங்கை பத்­தி­ரிகை ஆசி­ரியர் சங்கம் வன்­மை­யாகக் கண்­டித்­துள்­ளது.

இது குறித்து மேற்­படி சங்கம் வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

பொது மக்­களால் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்த ஆர்ப்­பாட்டம் குறித்து செய்தி சேக­ரிக்­க­வென அனுப்­பப்­பட்­டி­ருந்த ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் மீதான தங்­களின் கண் மூடித்­த­ன­மான தாக்­கு­தலை புகைப்­ப­டங்கள் அல்­லது காணொ­ளியை எடுப்­ப­தனைத் தவிர்த்துக் கொள்­ளு­மாறு அர­சி­ய­ல­மைப்­புக்கு முர­ணான வகையில் பாது­காப்புப் படை­யி­னரால் முன்­னெச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

அங்கு குழு­மி­யி­ருந்­தோரை தடி­யடி மற்றும் ஆயுதப்பிர­யோகம் செய்து கலைப்­ப­தற்கு அவர்கள் ஆரம்­பித்­ததும், அடி­யுதை­பட்டும் அச்­சு­றுத்­தப்­பட்டும் தூஷிக்­கப்­பட்­டு­மி­ருந்த ஊட­க­வி­ய­லா­ளர்கள் மீது தாக்­கு­தலை மேற்­கொண்­டனர்.

ஊட­க­வி­யலா­ளர்கள் அத்­த­ரு­ணத்தில் தங்­களின் சட்­ட­பூர்வத் தொழிலில் ஈடு­பட்ட வண்­ண­மி­ருந்­தனர். தங்கள் பணியைச் செவ்­வனே செய்­வ­தற்­கென அவர்­க­ளுக்கு அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தால் வழங்­கப்­பட்­டுள்ள ஊடக அங்­கீ­கார அட்­டை­களை அவர்கள் சமர்ப்­பித்­தி­ருந்த போதிலும் அவை பய­னற்­ற­வை­யா­கவே இருந்­தன.

இலங்கை வாழ் மக்­க­ளுக்கு தகவல் வழங்­கு­வ­தி­லான சட்ட சம்­மதம் பெற்ற தங்­களின் கட­மையை நிறை­வேற்­று­வ­தி­லி­ருந்து அங்கு கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த பாது­காப்புப் படை­யி­னரால் அவர்கள் தடுக்­கப்­பட்­டனர்.

மாகாண செய்­தி­யா­ளர்­களுள் ஒரு­வ­ரான பெண் ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் பல­வந்­த­மான முறையில் தள்­ளப்­பட்டு அச்­சு­றுத்­தப்­பட்ட நிலையில் வீடொன்றில் இரண்டு மணித்­தி­யா­லங்­க­ளுக்கு மேலாக இத்­த­கைய பாது­காப்­புப்­ப­டை­யி­னரால் பல­வந்­த­மாக பூட்டி வைக்­கப்­பட்டார். உருத்­தோட்ட எனு­மி­டத்தில் இன்­னு­மொரு ஊட­க­வி­யலாளர் படை­யி­னரால் தாக்­கப்­பட்­ட­துடன் அவ­ரது கமெ­ராவும் அடித்து நொருக்­கப்­பட்­டது.

தாக்­கு­த­லுக்­குள்­ளான அவர் பலத்த காயங்­க­ளுடன் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு இரண்டு நாட்­களின் பின்­னரே அங்­கி­ருந்து வீடு திரும்­பினார்.

ஊடக சுதந்­திரம் குறித்து வெறும் உதட்­ட­ளவில் மட்டும் செயற்­பட வேண்­டா­மென நாம் அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­து­கின்றோம். சர்­வ­தேச ஊடகச் சுதந்­திரம் சம்­பந்­த­மான சுட்­டியில் இலங்கை மிகவும் தாழ்­வுற்ற நிலை­யி­லேயே இருந்து வருவதுடன் ஊடகச் சுதந்திரம் மிகவும் கேவலமாக மதிக்கப்பட்டு வரும் நாடுகளுள் ஒன்றாகவும் கணிக்கப்பட்டுள்ளது. நாம் சாட்சி யம் கூறியுள்ளவாறு அரசாங்கத்தின் பணிப்புரைகளின் கீழ் பாதுகாப்புப் படை யினர் நடந்துகொண்ட விதம் அதன் துக்கம் தோய்ந்த இருண்ட பக்கத்தை வெளி ச்சமாக்கிட உதவப் போவதேயில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.