முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு, ஜெமீல் போர்க்கொடி - அடங்கினார் ஆரிவதி கலப்பதி
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டம் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் கிழக்கு மாகாண சபையில் தன்னால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையை விவாதத்திற்கு எடுக்குமாறு கோரி கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் இன்றைய சபை நடவடிக்கைகளின் போது போர்க்கொடி தூக்கியுள்ளார்.
அதேவேளை அடுத்த மாத சபை அமர்வில் அதனை விவாதத்திற்கு எடுப்பதாக தவிசாளர் ஆரிவதி கலப்பதி சபை அமர்வில் உறுதியளித்துள்ளார்.
கிழக்கு மாகாண சபையின் இன்றைய மாதாந்த சபை அமைவுக்கு முன்னதாக இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் பின்னர் இடம்பெற்ற ஆளும் கட்சிக் குழுக் கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற சபை அமர்விலும் இது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் சர்ச்சையைக் கிளப்பி அழுத்தம் கொடுத்தார்.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது; தன்னால் கடந்த அமர்வுக்கு அவசர பிரேரனையாகவும் இம்மாத அமர்வுக்காகாக இரு வாரங்களுக்கு முன்னதாகவே சாதாரண பிரேரனையாகவும் சமர்ப்பித்த 13 ஆவது திருத்த சட்டம் தொடர்பிலான பிரேரணை இன்றைய நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படாமைக்கு ஆட்சேபனை தெரிவித்த மு.கா. குழுத் தலைவர் ஜெமீல் இன்று இப்பிரேரணையை கட்டாயம் விவாதத்திற்கு எடுத்தாக வேண்டும் என வற்புறுத்தினார்.
அங்கு இது தொடர்பாக கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்ற போதிலும் சபை அமர்வுக்கு நேரமானதால் இடைவேளையின் போது ஆளும் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆராய்வோம் எனக் கூறி தவிசாளரினால் அக்கூட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சபை அமர்வு ஆரம்பமாகி 11.30 மணியளவில் இடைநிறுத்தப்பட்டு ஆளும் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் காரசாரமான கருத்துகளை தெரிவித்து பிரேரணையை விவாதத்திற்கு எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இதன்போது கூட்டத்திற்கு சமூகமளித்திருந்த ஏனைய முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஐவரும் ஜெமீலின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.
இதற்கு கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் ஆரியவதி கலப்பதி பதிலளிக்கையில்,
13 ஆவது திருத்த சட்டம் தொடர்பாக ஆராய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதால் நமது சபையில் இதனை அவசரமாக விவாதத்திற்கு எடுக்க வேண்டிய தேவை இல்லை என்று குறிப்பிட்டார்.
எனினும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அதற்கு இணங்காமல் தொடர்ந்தும் கருத்துகளை தெரிவித்துக் கொண்டிருந்த போது சபை அமர்வை மீண்டும் ஆரம்பிக்க வேண்டியுள்ளது எனத் தெரிவித்து தவிசாளர் இக்கூட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.
இதனைத் தொடர்ந்த சபை அமர்வு மீண்டும் ஆரம்பமானது. இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல், 13 ஆவது திருத்த சட்டம் தொடர்பான பிரேரணையை இன்றைய நிகழ்ச்சி நிரலில் ஏன் சேர்த்துக் கொள்ளவில்லை என கேள்வி எழுப்பி, காரசாரமான கருத்துகளை தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பதிலளித்த தவிசாளர் ஆரியவதி கலப்பதி; குறித்த பிரேரணையை அடுத்த மாத அமர்வில் (செப்டம்பர் 24ஆம் திகதி) கட்டாயம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதாக சபைக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்து இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
Post a Comment