Header Ads



அன்றும், இன்றும்..!


வெலிவேரிய ரத்துபஸ்வலவில் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூட்டை நடத்தி இராணுவம் இத்தகைய விபரீதங்களை நடத்தியிருக்குமானால், வன்னியில் யுத்தத்தின் போது இதே இராணுவம் தமிழ் மக்கள் மீது எத்தகைய கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியிருக்கும் என்ற கேள்விகள் இப்போது தெற்கில் பரவலாக எழுப்பட்டு வருகின்றன.

இந்த கன்மூடித்தனமான தாக்குதல்களுக்கு ஆணையிட்டது யார் என்ற கேள்வி உரக்க கேட்கப்படுகின்றது. தென்னிலங்கை பொரும்பான்மை அரசியல் கட்சி தலைவர்கள், தேரர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் இப்போது இந்த கேள்விகளை எழுப்பி வருகின்றார்கள்.

'இங்கேயே இன்று இப்படி என்றால் அன்று வன்னியில் எப்படி" என்ற கருத்துகளை கேட்கும்போது என் நெஞ்சம் கனக்கின்றது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

2009 மே மாதத்தில் யுத்தம் முடிவடைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரே புலிகள் சண்டையிடுவதை நிறுத்தி விட்டார்கள். பெருந்தொகை போராளிகள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு சரணடைய தொடங்கிவிட்டார்கள். அந்த இயக்கம் செயலிழந்துவிட்டது. புலிகளில் சரணடைய வந்தவர்கள் சரணடைந்தார்கள். ஏனையோர் போரிட்டு மடிந்தார்கள். 

ஆனால் அப்போது முள்ளிவாய்க்காலில் சிக்கிக்கொண்ட பெருந்தொகை அப்பாவி தமிழ் மக்கள் மரண ஓலம் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். அப்பாவி தமிழ் மக்கள் சிக்கி தவிப்பதை அறிந்தும் அறியாதது போல், புலிகளை கொல்கின்றோம் என்ற பெயரில் அப்பாவி தமிழ் மக்கள் மீது பல்குழல் எறிகணை இராணுவ தாக்குதல் கண்மூடித்தனமாக நடத்தப்பட்டது. 

அதைதான் உலகம் நிறுத்தச் சொன்னது. புலிகளை பாதுகாக்க சொல்லவில்லை. அப்பாவி மக்களை கொலை செய்ய வேண்டாம் என உலக சமூகத்துடன் சேர்ந்து நாமும் சொன்னோம். அதை சொன்ன எங்களை பார்த்து பயங்கரவாதிகள் என்றும், புலிகள் என்றும், பிரிவினைவாதிகள் என்றும் இங்கே முத்திரை குத்தி பயமுறுத்தினார்கள்.

இப்போது 'இங்கேயே இன்று இப்படி என்றால் அன்று வன்னியில் எப்படி' கேள்வி எழுப்பும் ஜே.வி.பி.கூட அன்று கைதட்டி யுத்தத்தை ஆதரித்துவிட்டு எங்களை பார்த்து புலிப்பயங்கரவாதிகள் என்று பட்டம் சூட்டியது.

இன்று பிரதான எதிர்கட்சியான ஐதேக, வெலிவேரிய ரத்துபஸ்வல இராணுவ துப்பாக்கி சூட்டை விசாரிக்க சர்வதேச விசாரணை தேவை என்று சொல்லுகின்றது. இதைத்தான் நாங்களும் அன்று வன்னி யுத்தம் பற்றி சொன்னோம். வன்னியில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை நிறுத்த சொன்னோம். அங்கு நடைபெற்ற படுகொலைகள் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்றும் சொன்னோம்.

இப்போதும் நாம் சொல்கின்றோம். முள்ளிவாய்க்கால் படுகொலைகள் பற்றி சர்வதேச விசாரணை தேவை. அதேபோல் வெலிவேரிய ரத்துபஸ்வல படுகொலைகள் தொடர்பிலும் சர்வதேச விசாரணை தேவை. முள்ளிவாய்க்காலிலும், ரதுபஸ்கலவிலும் அப்பாவி மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்த ஆணையிட்டது யார் என கேட்கின்றோம்.

அன்று ஒன்றும், இன்று ஒன்றும் பேசுபவர்கள்தான் வெட்கப்பட, பயப்பட வேண்டும். நாங்கள் அன்று ஒன்றும், இன்று வேறொன்றையும் பேசவில்லை. நான் ஒருபோதும் அப்படி மாற்றி, மாற்றி பேச மாட்டேன். கொல்லப்பட்ட அனைத்து இலங்கை மக்களுக்கும் பொதுவான நியாயத்தை தான் நான் கேட்கின்றேன். தமிழ், சிங்கள, முஸ்லிம் அப்பாவி மக்கள் அனைவருக்கும் ஒரே சமநீதியைதான் நாம் இங்கே ஒருசேர கேட்கின்றோம்.

துப்பாக்கி சூடு நடத்த ஆணையிட்டது யார்? இராணுவ தளபதியா? பாதுகாப்பு செயலாளரா? ஜனாதிபதியா? இந்த கேள்விக்கு இந்த நாட்டு மக்களுக்கு பதில் கூற முடியாவிட்டால் எல்லாம் முடிந்து போய் விடாது. இதோ, அதோ என்று இந்த மாத இறுதியில் ஐநா மனித உரிமை ஆணையர் நவநீதன்பிள்ளை இலங்கை வருகின்றார். அவருக்கு நீங்கள் இவற்றுக்கான பதில்களை கூறியே ஆக வேண்டும். பதில் கூறினாலும், கூறாவிட்டாலும் இந்த விடயங்கள் இந்த செப்டம்பரிலும், அடுத்த மார்ச்சிலும் ஐநா மனித உரிமை பேரவையில் ஒலிக்கத்தான் போகின்றன.

இராணுவத்தை ஏவிவிட்டு தமிழ் மக்கள் மீது எத்தகைய தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்ககூடும் என்பதை சிங்கள மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். எங்கள் பிரச்சினைகளை காது கொடுத்து கேட்டு, கண்களை திறந்து பார்த்து புரிந்து கொள்ள வேண்டும் என சிங்கள மொழியில் நான் இங்கே கூறுகின்றேன்.

போர் முடிவுக்கு வந்து விட்ட இன்று, தமிழ் மாகாணங்களில் இருந்து இராணுவத்தை ஏன் அகற்ற சொல்கின்றோம் என்பதையும், சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பை சிவில் திணைக்களமான போலிஸ் திணைக்களத்திடம் ஒப்படையுங்கள் என நாம் ஏன் சொல்கின்றோம் என்பதையும், இனியாவது சிங்கள மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். vi

No comments

Powered by Blogger.