மாகாண சபையின் ஆட்சியை ஐ. தே.க. கைப்பற்றினால் தேசிய அரசியலில் மாற்றம் உருவாகும்
(அஸ்-ஸாதிக்)
தகவல்களைத் அறிந்துகொள்ளும் சட்டமூலத்தை மீண்டும் பாராளுமன்றத்தில் கொண்டு வரவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்தார். கெலிஓயாவில் ஐக்கிய தேசிய கட்சியின் கண்டி மாவட்ட வேட்பாளர் லகீ ஜெயவர்தனவின் தேர்தல் பிரசார அலுவலகத்தை 29.08.2013 இல் திறந்து வைத்த பின்பு நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
தகவல்களைத் அறிந்து கொள்ளும் சட்டமூலத்தை தனிநபர் பிரேரணையாக பாராளுமன்றத்தில் கொண்டு வந்தேன். ஆனால் அதனை அப்போது பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. எனவே நாட்டின் நன்மை கருதி மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு இச்சட்டமூலத்தை மீண்டும் பாராளுமன்றத்தில் கொண்டு வருவேன். இதற்குப் பாராளுமன்றத்தில் இருக்கும் மூன்றில் இரண்டு பலத்தில் இருந்து ஆதரவைப் பெற்றுக் கொள்ள வேண்டும். தற்போது பாராளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு இருக்கும் மூன்றில் இரண்டு பலம் என்பது மக்களால் கொடுக்கப்பட்ட பலம் அல்ல.
எனவே தகவல்களைத் அறிந்துகொள்ளும் சட்டமூலத்திற்கான ஆதரவை திரட்டிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் மக்கள் தமது அடிப்படை உரிமைகளில் ஒன்றான தகவல்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றுக் கொள்வர்.
சுயாதீன் பொலிஸ் ஆணைக்குழு , சுயாதீன் நீதிச்சேவை மற்றும் சுயாதீன பரிபாலனம் என்பவற்றை ஐக்கிய தேசிய கட்சி கோருவது நாட்டில் சகல மக்களுக்கும் நீதி நியாயமான ஆட்சியைப் பெற்றுக் கொடுப்பதற்காகும்.
ஐக்கிய தேசிய கட்சி நாட்டில் பல தலைவர்களை உருவாக்கி பெரும் சேவைகளை முன்னெடுத்த கட்சியாகும். நாம் தேசப்பிரேமிகளாக சந்திகளில் காட்போட்டுகளை தூக்கவில்லை. ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாக நாட்டில் பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி டி.பி. விஜேதுங்க உடுநுவரை தொகுதி மக்களின் தலைவராக இருந்து நாட்டுக்கு முன்மாதிரியான தலைவராக செயற்பட்டார். நிறைவேற்று அதிகார பதவியை ஜனாதிபதி டி.பி. விஜேதுங்க துஸ்பிரயோகம் செய்யாமல் இப்பதவியை எவ்வாறு முன்மாதிரியாக பயன்படுத்த முடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தார்.
நாட்டில் பொருட்கள் சேவைகளின் விலைகள் அதிகரித்துச் செல்லும் நிலையில் மக்களின் வாழ்க்கைத் தரம் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு வருகின்றது. எனவே மக்கள் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல் மூலம் அரசுக்கு தமது அதிருப்தியை தெரிவிக்க வேண்டும் என்றார்.
Post a Comment