தைரியமான பெண் அதிகாரிக்காக குரல் கொடுக்கும் முஸ்லிம் அமைப்புக்கள்
(India) உத்திர பிரதேச பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி துர்காசக்தி, வழிபாட்டு தல சுவரை இடிக்க உத்தரவிட்டதால் அவரை சஸ்பெண்ட் செய்ததாக உ.பி., அரசு கூறி வரும் குற்றச்சாட்டு பொய்யானவை என இஸ்லாமிய அமைப்புக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் வழிபாட்டு தலத்தின் சுவரை இடிக்க எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை எனவும் இஸ்லாமிய அமைப்புக்கள் தெரிவித்துள்ளதால் உ.பி.,அரசின் பொய் குற்றச்சாட்டு அம்பலத்திற்கு வந்துள்ளது.
துர்கா சஸ்பெண்ட் :
மணல் கொள்ளை மாபியாக்கள் மீது நடவடிக்கை எடுத்ததற்காக ஐ.ஏ.எஸ்., அதிகாரி துர்காசக்தி நாக்பால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால் அவர் இஸ்லாமிய வழிபாட்டு தலத்தின் சுவரை இடிக்க உத்தரவிட்டதாகவும், அதனால் மத நல்லிணக்கத்தை காப்பதற்காக அவரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்ததாக உத்திர பிரதேச அரசு தெரிவித்தது. துர்கா சஸ்பெண்ட்டை எதிர்த்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கழகம், காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தும், தங்களின் சஸ்பெண்ட் உத்தரவை மாற்றிக் கொள்ள முடியாது என சமாஜ்வாதி கட்சியும், மாநில முதல்வர் அகிலேஷூம் பிடிவாதமாக இருந்து வருகின்றனர். இதனால் உத்திர பிரதேச அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
உண்மை அம்பலம் :
இஸ்லாமிய வழிபாட்டு தலத்தை இடிக்க துர்கா உத்தரவிட்டதாக உ.பி., அரசு கூறியதை அடுத்து அம்மாநில வக்ப் வாரிய அமைப்பினர் கதல்பூர் கிராமத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். இது தொடர்பாக கிராம மக்களிடமும், கிராம தலைவர்களுடனும் அவர்கள் ஆலோசனை நடத்தினர். பின்னர் தெரிவித்த அவர்கள் கூறியதாவது : அதிகாரி துர்கா, வழிபாட்டு தல சுவரை இடிக்க எந்த உத்தரவையும் போடவில்லை; மாறாக அரசு விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறு அறிவுரை மட்டுமே கூறி உள்ளார்; சில மணல் கொள்ளை மாபியாக்களின் சூழ்ச்சியால் தான் துர்கா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்; எங்களின் ஆய்வு தொடர்பான அறிக்கை உ.பி., அரசிடம் அளிக்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளனர். துர்காவை சஸ்பெண்ட் செய்ததும், அவருக்கு குற்றப்பத்திரிக்கை அனுப்பப்பட்டுள்ளதும் சரியானது தான் என முலாயமும், அகிலேஷூம் கூறி வரும் நிலையில் இஸ்லாமிய அமைப்பினர், துர்கா சஸ்பெண்ட் விவகாரம் குறித்த உண்மையை அம்பலப்படுத்தி உள்ளது இந்த விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் ஆதரவு :
ஆய்வைத் தொடர்ந்து இஸ்லாமிய அமைப்பின் உறுப்பினர்களும், பொது மக்களும் துர்காவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், துர்காவால் இப்பகுதியில் எந்த மத ரீதியான பதற்றமும் ஏற்படவில்லை; சில அரசியல் கட்சிகள் தான் சிறுபான்மையினர் ஓட்டுக்களை பெறுவதற்காக இவ்வாறு மத பிரச்னைகளை கிளப்பி வருகின்றனர்; சில மணல் மற்றும் நில மாபியாக்களால் தான் துர்கா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்; மாபியாக்கள் மற்றும் சில உள்ளூர் தலைவர்களின் நெருக்கடிய காரணமாகவே சமாஜ்வாதி இந்த முடிவை எடுத்துள்ளது; இதற்கு எதிராக எஸ்.எம்.எஸ்., பிரச்சாரம் ஒன்றையும் நடத்த உள்ளோம்; துர்கா அவரின் மூத்த அதிகாரிகளின் உத்தரவுபடியே நடந்துள்ளார்; அவர் மிகவும் தைரியமான பெண்; ஆண் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்கிய மாபியாக்கள் மீது துணிச்சலாக நடவடிக்கை எடுத்த அதிகாரி; மாபியாக்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பல கோடி மதிப்பிலான வகுப்பு வாரியத்திற்கு சொந்தமான நிலங்கள் துர்காவின் நடவடிக்கையால் மீட்கப்பட்டுள்ளது; பல கிராம நிலங்களும் மீட்கப்பட்டுள்ளது; நில ஆக்கிரமிப்பு தொடர்பாக கடந்த ஆண்டு ஜூலை மாதமே போலீஸ், முதல்வர் அகிலேஷ், அமைச்சர்கள் உள்ளிட்ட பலரிடம் முறையிட்டோம்; ஆனால் எந்த பலனும் இல்லை; ஆனால் துர்கா வந்த பிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டது; எவ்வித பாதுகாப்பும் இன்றி உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து உரிய நடவடிக்கையும், மக்களிடம் விசாரணையும் நடத்தும் புத்திசாலியான தைரியமான அதிகாரி துர்கா; துர்கா பொறுப்பேற்ற பின் இப்பகுதி கிராமங்களில் பல மாற்றங்களும் முன்னேற்றங்களும் நடைபெற்றுள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment