அம்பாரையில் இன ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக நடைபெற்ற கிரிக்கட் போட்டி
(அனாசமி)
இன உறவையும், சமயப்புரிந்துணர்வையும், மத ஒற்றுமையையும் எடுத்துக்காட்டும் வகையில் மூவினங்களையும் சேர்ந்த வலயக் கல்வி அலுவலகங்கள் இணைந்து மாபெரும் உள்ளக மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி ஒன்று (2013.08.11) அம்பாரை சிங்கள மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. மூவினங்களும் ஒன்றாக வாழும் அம்பாரை மாவட்டத்தில் முஸ்லீம்கள் பெரும்பான்மையினமாக வாழ்கின்றனர். இன்று பள்ளிவாசல்கள் உடைக்கப்படுகின்றன. ஒரு இனத்தை மற்றொரு இனம் சந்தேகத்துடன் பார்க்கும் நிலைமை நாட்டில் ஏற்பட்டுள்ள இக்கால கட்டத்தில் கல்வியின் ஊடாக சமாதானம், கல்வியின் ஊடாக புரிந்துணர்வு போன்றவற்றிக்கு எடுத்துக்காட்டாக இன்றைய கிரிக்கெட் சுற்றுத்தொடர் நடைபெற்றது.
அக்கரைப்பற்று கல்வி வலயம், திருக்கோவில், அம்பாரை, மற்றும் தமண கல்வி வலயங்களில் கடமையாற்றுகின்ற ஊழியர்கள் இணைந்து இந்தப்போட்டியினை நடாத்தினர். சினேக பூர்வமான முறையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் கணக்காளர் கே. றிஸ்வி யஹ்ஸர் தலைமையில் களமிறங்கினர். தமன கல்வியலுவலகக் குழுவினர் அதன் வலயக் கல்விப் பணிப்பாளரான தர்மசேன குருவிட்ட அவர்ளும், திருக்கோவில் வலயத்தின் தலைவராக அதன் கணக்காளர் அவர்களும், அம்பாரை கல்வி வலயத்தின் அணியினர் உதவிக் கல்விப்பணிப்பாளர் தலைமையிலும் போட்டியில் கலந்து கொண்டனர். ஆரம்ப நிகழ்வுகளில் அம்பாரை வலயக் கல்விப்பணிப்பாளர் சுனில் குனதில தேசியக் கொடியினை ஏற்றிவைத்து உரையாற்றினார். சமயம், மொழி, நிறம், இனம் போன்றவைகளை மறந்து ஒற்றுமையினை ஏற்படுத்துவதுதான் விளையாட்டு. இதனை கல்வியின் மூலம் அடைவதற்கான நடைமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இன்று மூவினங்களையும் சேர்ந்த கல்வி ஊழியர்கள் ஒன்றாக இணைந்து ஒற்றுமையாக விளையாட முன்வந்திருப்பது உண்மையிலேயே ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக காணப்படுகின்றது என்றும் தெரிவித்தார்.
இன்று நாட்டின் பெரும்பாண்மையினரில் ஒருபிரிவினர் நாட்டில் வாழும் இன்னொரு மதத்தினரின் மத சுதந்திரத்தைப் பறிக்க முயல்கின்றனர். கல்வியின் குறிக்கோளான நாட்டிற்குகந்த நற்பிரஜையைத் தோற்றுவிப்பதில் இந்தக் கல்வி சரியான முறையில் இவ்வாறவர்களைச் சென்றடையவில்லை என்றுதான் கூறவேண்டும். இன்று அம்பாரையிலுள்ள கல்வி வலயங்களின் ஊழியர்கள் ஒன்றுசேர்ந்து விளையாட்டின் ஊடாக சமாதானத்தை ஏற்படுத்த முனைந்துள்ளமை மிகவும் பாராட்டக்கூடியதாகும்.
Post a Comment