Header Ads



நாட்டில் அழிவு ஏற்படுவதற்காக காத்திருக்கிறோமா..? அரசிடம் முஸ்லீம்கள் கேள்வி

Arab News ஊடகத்தில் வெளியாகியுள்ள கட்டுரை

(ABU AHMED 
மொழியாக்கம் நித்தியபாரதி)

சிறிலங்காவில் வாழும் முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல்கள் கடந்த இரு ஆண்டுகளாகத் தொடரப்படுகின்ற போதிலும், சிறிலங்கா அரசாங்கம் இது தொடர்பில் நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை. தம் மீதான தாக்குதல்களை நிறுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் உத்தியோகபூர்வமான எவ்வித நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை என முஸ்லீம் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் இவர்கள் தமது பிரச்சினைகளை வெளியுலகுக்கு தெரியப்படுத்த வேண்டும் என நினைக்கிறார்கள். 

உலகெங்கும் வாழும் முஸ்லீம்கள், இலங்கைத் தீவில் நடைபெற்று வரும் இவ்வாறான சம்பவங்களை கண்காணிக்கும் அதேவேளையில், இதனால் இலங்கைத் தீவானது பிறிதொரு மியான்மாராக மாறலாம் எனவும் அச்சம் கொள்கின்றனர். தம்மீதான தாக்குதல்கள் தனித்தனியாக மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், இத்தாக்குதல்களில் ஈடுபடுபவர்கள் தமக்கிடையே தொடர்பைக் கொண்டுள்ளதுடன், நன்றாக ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு அமைப்பாகவும் செயற்படுகிறார்கள் என்கின்ற செய்தியானது முஸ்லீம் மக்களின் உணர்வுகளை மேலும் பாதித்துள்ளது. 

எவ்வாறெனினும், 30 ஆண்டுகாலப் போரிலிருந்து மீண்டுள்ள இலங்கைத் தீவானது மீண்டும் நாட்டில் பிறிதொரு அழிவு ஏற்படும் போது அதனை முகங்கொடுக்க முடியாத நிலை ஏற்படும். சிறிலங்காவில் வாழும் முஸ்லீம்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக, சிங்களக் காடையர்கள் மிக நன்றாகத் திட்டமிடப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக தம் மீது தாக்குதலை மேற்கொள்வதுடன், படுகொலைகளைப் புரிவதாக முஸ்லீம்கள் சந்தேகிக்கின்றனர். 

"நாங்கள் எதற்காகப் பொறுத்திருக்கிறோம்? நாட்டில் பிறிதொரு அழிவு ஏற்படுவதற்காக நாங்கள் காத்திருக்கிறோமா? நாட்டில் பிறிதொரு அழிவு ஏற்படுவதற்கு வழிசமைக்கும் பௌத்த தீவிரவாதிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கான நேரம் வரவில்லையா?" என முன்னாள் தகவற்துறை அமைச்சர் இம்ரியாஸ் பக்கீர் மார்க்கர் சிறிலங்கா அரசாங்கத்திடம் வினவியுள்ளார். 

முஸ்லீம் மக்களாலும் சிங்கள மக்களாலும் பெரிதும் மதிக்கப்படுகின்ற, நேசிக்கப்படுகின்ற அரசியல்வாதியான மார்க்கர் அண்மையில் சிங்கள வாரப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில், முஸ்லீம் மக்கள் மீது தொடரப்படும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும், இது தவறினால் நாட்டில் பெரும் அழிவு ஒன்று ஏற்படுவது தவிர்க்க முடியாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இலங்கைத் தீவின் சனத்தொகையில் 10 சதவீதத்தைக் கொண்ட முஸ்லீம் சமூகமானது, தம் மீது மேற்கொள்ளப்படும் பௌத்த தீவிரவாதத் தாக்குதல்களானது சிறிலங்கா அரசாங்கத்தின் ஆதரவுடனே மேற்கொள்ளப்படுகிறது என நம்புகின்றது. 

இதுவரையில் இத்தாக்குதல்களை நிறுத்துமாறு முஸ்லீம் மற்றும் சிங்கள சமூகங்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவை அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு போன்ற நிலையே காணப்படுகிறது. முஸ்லீம் அரசியல்வாதிகள் பொதுவாக தமது சொந்த நலன்களை அடைந்து கொள்வதிலும் தமது பதவிகளைத் தக்கவைத்துக் கொள்வதிலுமே குறியாக உள்ளனர். இதனால் இவர்கள் தமது சமூகத்தவர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவுசெய்யாது அவர்களது ஆசைகளைக் குழிதோண்டிப் புதைக்கிறார்கள். இவர்கள் அரசாங்கத்தின் நலன்களை முதன்மைப்படுத்தி மிகக் கெட்டித்தனமாக தமக்கான வாக்குகளைப் பெற்று பதவி வகிக்கிறார்கள். இதனாலேயே முஸ்லீம் அரசியல்வாதிகளை சிறிலங்கா அரசாங்கமும் முஸ்லீம் சமூகமும் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், முஸ்லீம் சமூகத்தின் மீதான தாக்குதல் தொடர்பில் அரசாங்கத்தைக் குற்றம் சாட்ட முன்வருகின்றார் என்றால், இந்த விடயத்தில் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த, முஸ்லீம்களால் தெரிவு செய்யப்பட்ட முஸ்லீம் அரசியல்வாதிகள் ஏன் தொடர்ந்தும் அமைதிகாக்கின்றனர் என்கின்ற கேள்வி எழுப்பப்படுகிறது. 

முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதலுக்கு சிறிலங்கா அரசாங்கமே துணைபோவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குற்றம் சாட்டிய போது, இத்தாக்குதல்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் பொறுப்பில்லை எனவும் 'பொது பால சேனவே இதற்குப் பொறுப்பு' எனவும் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினரான பய்சார் முஸ்தப்பா அறிவித்து சிறிலங்கா அரசாங்கத்தைப் பாதுகாத்ததானது மிகவும் வெட்கக்கேடான விடயமாகும். 

"சிறிலங்கா அரசாங்கத்தின் ஒத்துழைப்பின்றி நாட்டில் நிலவும் சட்ட வரையறைகளை மீறி மிகவும் வெளிப்படையாக பொது பால சேன இவ்வாறான தாக்குதல்களையும், வன்முறைகளையும் எவ்வாறு மேற்கொள்ள முடியும்" என முஸ்லீம்கள் கருதுகின்றனர். 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், சிறிலங்கா காவற்துறையின் கண்காணிப்பு இருந்தபோதும் அநுராதபுரத்திலுள்ள முஸ்லீம் புனித பள்ளிவாசல் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்திலிருந்து இன்று வரை பல்வேறு மீறல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. மிருகப்பலியைத் தடைசெய்யுமாறு கோரும் மனுவை சிறிலங்கா அதிபரிடம் கையளிப்பதற்காக கடந்த மாதம் தலதாமாளிகையிலிருந்து பௌத்த தீவிரவாதக் குழுவொன்று பேரணி ஒன்றை நடாத்தியது. முஸ்லீம் எதிர்ப்பைத் தூண்டும் விதமாக இவ்வாறு பேரணி ஒன்றை நடாத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதா? 

இப்பேரணி இடம்பெற்று சில நாட்களின் பின்னர் அதாவது யூன் 30 நள்ளிரவன்று, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அசார் வித்தியாலய மைதானத்தில் மிக இரகசியமாக புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டது. அசார் வித்தியாலயம் மற்றும் சாதுலிய வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளுக்கும் பொதுவான மைதானமாக இது காணப்படுகிறது. யூன் 25, 2013 அன்று இந்த விளையாட்டு மைதானம் பாடசாலைக்குச் சொந்தமானது என நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் வாழைச்சேனை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மிக இரகசியமாக இந்த மைதானத்தில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டது. இதுவரையில் இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட எவரும் கைதுசெய்யப்படவில்லை. 

யூலை 11,2013 அன்று, மகியங்கனவில் உள்ள அரபா பள்ளிவாசல் மீது காடையர்கள் தாக்குதலை நடாத்தினர். 2500 ஆண்டுகால பௌத்தவாதம், பௌத்த கலாசாரம், புராதன குடியேற்றம் என்பன மேற்கொள்ளப்பட்ட நன்கறியப்பட்ட தம்மதீப என்கின்ற இடத்திலேயே இவ்வாறான காடைத்தனமான வன்முறை இடம்பெற்றது. சிறிலங்காவின் ஆதிகால மனிதர்களான வேடுவர்கள் கூட இவ்வாறான காடைத்தனமான தாக்குதல்களை மேற்கொள்வதில்லை. இவ்வாறான தாக்குதல்களால் உலகில் சிங்கள பௌத்தர்களின் பெயர் எவ்வாறு களங்கப்படுத்தப்படும் என்பதை காடையர்கள் உணர்ந்து கொள்வார்களா? 

"மகியங்களை பள்ளிவாசலானது ஒரு வாரத்திற்கு மேல் இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்பட்டது. பல மாதங்களாக தீவிர பௌத்தவாதிகள் முஸ்லீம்கள் மீது இவ்வாறான தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றனர். றம்ழான் புனித காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் சம்பவமானது நாட்டில் வாழும் முஸ்லீம்களின் உணர்வுகளையும் ஏனைய சமூகத்தவர்களின் உணர்வுகளையும் அவமதிப்பதாக உள்ளது. முன்னர் பள்ளிவாசல்கள் பல அழிக்கப்பட்ட போதும் கூட, இதனைத் தடுப்பதற்கான எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. சிறிலங்கா அரசாங்கம் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கத் தவறுவதானது நாட்டில் மதசார் வன்முறைகளுக்கு வழிவகுக்கும்" என சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

1 comment:

  1. பைஸர் முஸ்தபா அரசாங்கத்தைப் பாதுகாத்ததுடன் பல சேனாவையும் பகிரங்கமாகவே காட்டிக் கொடுத்துமுள்ளார். பைஸர் முஸ்தபாவின் கூற்றை வைத்தாவது அரசாங்கம் பல சேனாவுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்ததா?

    றவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டி விட்டும் அரசாங்கத்தின் தொட்டிலில்தான் ஆடுகிறார்.

    பைஸர் முஸ்தபாவைப் போல் தொட்டுக் காட்டுவதற்கும், றவூப் ஹக்கீமைப் போல் சுட்டிக் காட்டுவதற்கும் முஸ்லிம் மக்கள் இவர்களுக்கு வாக்களிக்கவில்லை.

    இவர்கள் அரசாங்கத்துடன் இருப்பவர்கள். இவர்கள்தான் உரிய நடவடிக்கை எடுக்கும்படி அரசாங்கத்தின் சால்வையைப் பிடித்து கழுத்தை இறுக்கிக் கேட்க வேண்டும்.

    நடவடிக்கை எடுக்க முடியாதென்றால் ஆதரவை விலக்கிக் கொண்டு நாடாளுமன்றத்தில் முஸ்லிம் எம்.பி.க்கள் அனைவரும் ஒரு தனிக்குழுவாக இயங்கி உலகத்திற்கு இங்கு நடைபெறும் விடயங்களை அறிவிக்க வேண்டும்.

    இம்தியாஸ் கூறியிருப்பது போல, சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்பது வாஸ்தவமாகும் காலம் வரும்.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.