யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு வழங்கிய வாக்குறுதியை அமைச்சர் டக்ளஸ் காப்பாற்ற வேண்டும்
(பாறூக் சிகான்)
மீளக்குடியமர்ந்துள்ள யாழ் முஸ்லிம்களின் இந்தியா வீட்டுத்திட்டங்களை விரைவாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளன முன்னாள் தலைவரும் சமூக சேவகருமான கே.எம் நிலாம்(நியாஸ்) வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடந்த அசாதாரண சூழலால் பாதிக்கப்பட்டு தற்போது யாழ் மாவட்டத்தில் மீளக்குடியமர்ந்துள்ள எமது யாழ் முஸ்லீம் மக்கள் மிகவும் கஸ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த காலங்களில் வீடுகளை இழந்தவர்களுக்கான இந்திய வீட்டுத்திட்ட பதிவுகள் இதற்கான எமது பிரதேசங்களில் நடைபெற்றன.இதனடிப்படையில் எமது சம்மேளனம் மக்களின் நலன் கருதி அவர்களது வீட்டுத்தேவைகருதி தரவுகளை திரட்டி சுமார் வீட்டுத்தேவையுடைய 300 குடும்பங்களுக்கு விண்ணப்பங்களை விநியோகித்து அவற்றை உத்தியோக பூர்வமாக இந்திய தூதரகத்திற்கு கையளிக்கவென யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் வைத்து அமைச்சர் கே.என் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ் முஸ்லீம்கள் வதியும் பிரதேச செயலாளர்களிடம் கையளிக்கப்பட்டது.
ஆனால் கையளிக்கப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.தற்போது ஏனைய பிரதேசங்களில் இவ்வீட்டுத்திட்டங்கள் துரிதமாக நிறைவேற்றப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படுவதை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன்.
எமது யாழ் முஸ்லீம்கள் கடந்த கால வன்முறைகளால் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்கள்.இவர்களுக்கு அன்று தொடக்கம் இன்று வரை அமைச்சர் கே.என் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.அதுவும் இடம்பெயர்ந்த புத்தளம் பிரதேசத்தில் இருந்த போது கூட அங்கு வந்து எமது அடிப்படை வசதிகளை செய்து தந்தவர்.குறித்த வீட்டுத்திட்டம் அடுத்த வருட ஆரம்பத்தில் முற்றுப்பெற உள்ளதாக அறிகிறேன்.இதனை உடனடியாக அமுல்படுத்த அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனை அவர் செய்து தருவார் என நம்புகிறேன். எனவே உடனடியாக இதில் தலையிட்டுஇவ்வீட்டுத்திட்டம எம்மக்களுக்கு; கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.அப்போது தான் வட மாகாணத்தில் அரசாங்கத்தின் மீள் குடியேற்ற திட்டம் வலுப்பெற்றதாக அமையும் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.
Post a Comment