Header Ads



வடக்குத் தேர்தலில் அரசாங்கத்தோடு இணைந்திருக்க என்ன நியாயங்களை முன்வைப்பார்கள்..?

வடமாகாண சபைத் தேர்தல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு 28-08-2013 புதன்கிழமை மாலை முல்லைத்தீவு தண்ணீரூற்று புலியடி பொதுத்திடலில் இடம்பெற்றது. அதன்போது வடமாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் முஸ்லிம் சமூகம் சார்பாக போட்டியிடுகின்ற வேட்பாளர்  அய்யூப் அஸ்மின் (நளீமி) உரை நிகழ்த்தினார்கள் அவரது உரையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு கௌரவமான அரசியல் இயக்கம்; இதிலே அங்கம் வகிக்கின்ற உயர்பீட உறுப்பினர்களாகட்டும், பாராளுமன்ற உறுப்பினர்களாகட்டும், அதன் தொண்டர்களாகட்டும் எந்த சந்தர்ப்பத்திலும் உரிமைப் போராட்டத்தை விட்டுக்கொடுத்து, சுய இலாபங்களுக்காக சோரம் போனவர்கள் கிடையாது, எந்தவிதமான கடினமான சூழ்நிலையிலும் தமிழ்த் தேசியப் போராட்டத்தை விட்டுக்கொடுத்தவர்கள் கிடையாது அந்த வகையில் இது ஒரு கௌரவமான கட்சி, இதிலே நாமும் இணைந்திருக்கின்றோம் என்பது எமக்குத் திருப்தியளிக்கின்ற நம்பிக்கை தருகின்ற விடயமாகும்.

மனிதம் மறுக்கப்படுகின்ற சூழலில் இனரீதியான அடையாளங்களை முதன்மைப்படுத்தி மனிதன் தன்னுடைய வாழ்வை ஒழுங்குபடுத்த நினைக்கின்றபோது பல்வேறு கஷ்டங்களும் துன்பங்களும் ஏற்படுவதை நாம் உலக வரலாற்றில் கண்டிருக்கின்றோம். எப்போது நாங்கள் மனிதர்கள் என்னும் பாரிய வட்டத்துள் வைத்து எமது நடவடைக்கைகள் குறித்து சிந்திக்கின்றோமோ அதுவே சிறப்பானது. தமிழர்கள் என்றும் முஸ்லிம்கள், என்றும் சிங்களவர் என்றும் எம்மை அடையாளப்படுத்துவதை விடவும் மனிதர்கள் என்று நாம் எம்மை முதன்முதலில் அடையாளப்படுத்த வேண்டும். இப்போது எமக்கிடையேயான வேறுபாடுகள் இல்லாமலாகின்றது, நாம் ஐக்கியப்படுகின்றோம். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்கின்றோம், விட்டுக்கொடுப்புகள் செய்கின்றோம். இது ஆரோக்கியமான வாழ்வை நோக்கி எம்மை வழிநடாத்தும்.

1980களுக்கு முன்னர் வடக்கு கிழக்கில் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் ஏன் இந்த மண்ணில் வாழ்ந்த சிங்களவர்க்கும் இடையில் எவ்வித முரண்பாடுகளும் இருந்ததில்லை, ஆனால் அரசியல் வாதிகளும் வெளிச்சக்திகளும் தங்களுடைய நலன்களுக்காக மக்களையும் மக்களின் உணர்வுகளையும் பிழையான வழியில் பயன்படுத்தினார்கள். பல துன்பியல் நிகழ்வுகள் நடந்தேறின, அவற்றை மீட்டி மீட்டி சொலிக்கொண்டிருப்பதால் அல்லது அவற்றை வைத்து புலம்பிக்கொண்டிருப்பதால் அல்லது அவற்றை வைத்து அரசியல் செய்வதால் எவ்வித நன்மையும் கிடைத்துவிடாது. மாறாக நாம் எமது வடுக்களை எமது பிரச்சினைகளையும் உரிய தரப்பாருடன் நேரடியாகப் பேசி அவற்றுக்கான தீர்வைப் பெற்றுக்கொள்ள முன்வரவேண்டும்.

எனவே இந்த நோக்கங்களுடன் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையில் ஒரு சிறிய குழு முஸ்லிம்களின் சார்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நாடாத்தினோம், அதன் பயனாக இணக்கப்பாட்டு அரசியல் முயற்சி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு நல்ல சந்தர்ப்பமாகும். இந்த நாட்டில் இருக்கின்ற பெரிய முஸ்லிம் அரசியல் அமைப்புகள் முஸ்லிம்களின் நலன்களை விடவும் தமது சொந்த நலன்களை முதன்மைப்படுத்துகின்றன, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன வடக்குத் தேர்தலில் அரசாங்கத்தோடு இணைந்திருப்பதற்கான என்ன நியாயங்களை முன்வைக்கப்போகின்றார்கள்? முஸ்லிம் காங்கிரஸ் வடக்கில் தனித்துப்போட்டியிட வந்திருக்கின்றது, இது ஒரு வெட்கக்கேடான செயலாகும், வடக்கு முஸ்லிம்களின் விடயத்தில் இதுவரை காலமும் எவ்வித காத்திரமான பணிகளையும் செய்யாத முஸ்லிம் காங்கிரஸ் என்ன முகத்தோடு தேர்தலில் தனித்து களமிறங்கியிருக்கின்றது??
தென்னிலங்ககையில் சிங்கள பேரினவாத சக்திகள் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விட்டிருக்கின்ற அடாவடித்தனங்களுக்கு எதிராக வெற்றிலைக் கட்சி எவ்வித எதிர் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை, மாறாக அத்தகைய தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக ஆதரவு வழங்கி வருகின்றார்கள். இவர்களோ கூட்டணி அமைப்பதில் எமது முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கு என்ன தேவை இருக்கின்றது. அவர்கள் சமூகத்தின் வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றபின் மக்களை நடுத்தெருவில் விட்டுவிட்டு செல்லக்கூடியவர்களாகவே இருப்பார்கள்.

இந்த இடத்தில் மக்கள் சிந்திக்க வேண்டும், குறிப்பாக முஸ்லிம் மக்கள் சிந்திக்க வேண்டும் எங்களுடைய உறவுகளாகிய தமிழ் மக்களோடு இணைந்த ஒரு அரசியல் பயணம் குறித்து நாம் சிந்திக்க வேண்டும், அப்போது முஸ்லிம்களுடைய இருப்பு, மீள்குடியேற்றம், நல்லிணக்கமான வாழ்வு என்பன உறுதிசெய்யப்படும், இதற்கான உடன்பாடுகள் இருசாராருக்கும் இடையில் ஏற்கெனவே எட்டப்பட்டுள்ளன. இந்தப் பிரதேசத்தின் முஸ்லிம்கள் பேரினவாதிகளுக்குத் துணைபோகின்ற அரசியலை ஆதரிப்பதை விடவும், ஐக்கியத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் துணை நிற்கின்ற அரசியலை ஆதரிக்க வேண்டும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பதன் மூலம் எமது உறவுகளோடு இணைந்து நல்லிணக்கமான அரசியல் பயணத்துக்கு முஸ்லிம்கள் ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.

No comments

Powered by Blogger.