Header Ads



சிரியா மீது தாக்குதல் - பிரித்தானியா பாராளுமன்றத்தில் விவாதம்

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் சிரியா குறித்த காரசாரமான விவாதம் ஆரம்பித்துள்ளது. சிரியாவில் இராணுவ தலையீட்டுக்கான அடிப்படைகளுக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் நாடாளுமன்றத்தின் ஆதரவைக் கோருகிறது.

ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் தன்னால் தாக்கல் செய்யப்படும் தீர்மானமானது சிரியா விடயத்தில் ஒரு பக்கசார்பு நிலைப்பாட்டை எடுப்பதோ அல்லது சிரியாவில் ஆட்சிமாற்றத்துக்காக அங்கு ஆக்கிரமிப்பதோ அல்ல என்று ஐக்கிய ராஜ்ஜியத்தின் பிரதமர் டேவிட் கமெரன் கூறினார்.

அது அங்கு நடந்த பெரும் எடுப்பிலான இரசாயன தாக்குதல் குறித்தது என்றும், போர்க்குற்றம் ஒன்றுக்கான பிரிட்டனின் பதில் நடவடிக்கை குறித்தது என்றும் அவர் கூறினார்.

டமாஸ்கஸில் கடந்த வாரம் ஒரு இரசாயன ஆயுதத் தாக்குதல் நடந்தது என்பதை சிரியாவின் அரசாங்கம் கூட மறுக்க முடியாது என்றும் அவர் கூறினார். அதற்கு சிரியாவின் அரசாங்கமே பொறுப்பு என்று உளவுத்தகவல்கள் உறுதியாகக் கூறுவதாகவும், மனித நேய தலையீட்டு கொள்கையின் அடிப்பையில் அங்கு பிரிட்டன் தலையிடலாம் என்று சட்ட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேசமயம், பிரிட்டனின் எதிர்க்கட்சியான தொழில்கட்சியின் தலைவர் எட் மிலிபாண்ட், அரசாங்க தீர்மானத்துக்கு ஒரு திருத்தம் கொண்டுவந்திருக்கிறார்.
இராணுவ தலையீட்டை கொள்கை அடிப்படையில் தான் எதிர்க்க மாட்டேன் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், எந்த ஒரு முடிவுக்கும் முன்பாக ஆதாரம் முன்வைக்கப்பட வேண்டும் என்றும், இரசாயன தாக்குதலுக்கு அதிபர் அசாத்தின் அரசாங்கமே பொறுப்பு என்பதற்கான உறுதியான ஆதாரம் தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.

அசாத் அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டுவதற்கான பணி ஐநா பரிசோதனைக்குழுவுக்கு இல்லாது விட்டாலும், அவர்களது முடிவு அதற்கு வழி செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஐநா பாதுகாப்புச் சபை இலகுவாக இருக்காது என்று கருதி வேறு குறுக்கு வழியை தேடக்கூடாது என்றும் அவர் கூறினார்.

இதனிடையே சிரியா மீது நடத்தப்படும் எந்தத் தாக்குதலையும் தமது அரசு எதிர்த்து போராடி தம்மை பாதுகாத்துக் கொள்ளும் என்று சிரிய அதிபர் பஷார் அல் அஸத் தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் அரச ஊடகம் கூறுகிறது.

யேமன் நாட்டு அரசியல்வாதிகள் குழு ஒன்றுடன் பேசும்போது, சிரியா மீதான அத்தகைய இராணுவத் தாக்குதல் அச்சுறுத்தல், தமது மக்களில் சுயாதீனமான விருப்பம் என்று அவர் கூறுவதை அதிகரிக்கவே செய்யும் என்றும் அதிபர் அஸத் தெரிவித்ததாகவும் அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமோ நாட்டிலுள்ள மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் இதுவரை இல்லாத அளவை எட்டியுள்ளது என்றும், உதவி தேவைப்படும் மக்களை சென்றடைந்து வேண்டியதை செய்வதற்கு தமது தடைகள் இல்லாத அனுமதி தேவை எனவும் கோரியுள்ளது.

சிரியாவின் பல பகுதிகளுக்கு உதவிகள் சென்றடைவது பல மாதங்களாக முடங்கிப் போயுள்ளதால், பல பகுதிகளில் முக்கியமான மருந்துப் பொருட்கள், உணவு மற்றும் குடிநீர் ஆகியவை பற்றாக்குறை நிலையில் உள்ளன என்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. bbc

No comments

Powered by Blogger.