Header Ads



பெருநாள் பரிசு..!


(உமர் முறாபித்)

மகிந்தவின் அரசும் இந்த நாட்டின் சிங்களைப் பேரினவாதிகளும் சேர்ந்து முஸ்லீம் மக்களுக்கு ஒரு மறக்க முடையாத பெருநாள் பரிசைத் தந்திருக்கிறார்கள்.அதுவும் பெருநாள் முடிந்த அடுத்த தினத்தில் உறவினர்களின் வீட்டிற்குச் சென்று பெருநாள் வாழ்த்துக் கூறுவதுபோல் முஸ்லீம்களின் பள்ளிவாசலுக்கு வந்து தொழுது கொண்டிருந்த மக்களுக்கு பெருநாள் வாழ்த்துகளை அள்ளிச் சொரிந்திருக்கிறார்கள். பூ மழை சொரிந்தால் பூக்கள் வாடிவிடும், முஸ்லீம்களும் மறந்து விடுவார்கள் என்பதால் உறுதியான கல் மழையால் வாழ்த்துச் சொல்லியிருக்கிறார்கள். காதலர்கள் தங்கள் பெயர்களை மரத்தில் கீறுவதுபோல் அவர்கள் பள்ளியின் கண்ணாடி உடையுமளவிற்கு அழியாமல் இருக்க சற்று அழுத்தமாகவே எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.அதுவும் போதாமல் சில முஸ்லீம்களின் முகங்களிலும் ரத்தத்தால் தங்கள் அன்பின் பிணைப்பை அள்ளிச்சொரிந்திருக்கிறார்கள்.எமது மனமார்ந்த நன்றிகள்.

ஒரு அழகிய கிராமம் இருந்தது.அக்கிராமத்தைப்  புலியொன்று தாக்க வந்தது.புலியின் தாக்குதலில் இருந்து மக்களைக் காக்க ஊரைச் சுற்றி வேலியமைக்க வேண்டும் என்று மக்களிடம் பணம் வசூலித்த முதலைகளுக்கு மக்கள் வாரி வழங்கினார்கள்.எங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.புலி எங்களைக் கடிக்காமல் விட்டாலே போதும் என்று கூறிவிட்டார்கள் மக்கள்.பணம் வசூலித்த முதலைகளுக்கு குஷியோ குஷி.புலி வருமோ இல்லையோ புலியை வைத்து நாம் அதிகமாக பணம் சம்பாதிக்கலாம் என்று நினைத்தார்கள்.மக்களும் வாரி வழங்கினார்கள்.திடீரென புலி இறந்துவிட்டது.இனி என்ன செய்வது?பணம் கேட்கப் போனால் புலிதானே செத்துவிட்டது.இனி எதற்குப் பணம் என்று கேட்பார்களே?பணமில்லாவிட்டால் எமது இருப்புக்கெட்டுவிடுமே! உடனடியாகத் திட்டம் போட்டார்கள்.எங்கோ தூரத்தில் இருந்த ஒரு ஆட்டிற்கு சிங்கத்தின் தோலைப் போர்த்திவிட்டு மக்களிடம் போனார்கள்."மக்களே! ஆபத்து,ஆபத்து.புலி செத்துவிட்டது.ஆனால் சிங்கம் இப்பொழுது உங்களை கடிக்க வருகிறது என்று இல்லாத சிங்கத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.மக்களும் பணத்தைக் கொடுக்கிறார்கள். முதலைகளும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

புலிகளுக்கு எதிரான போராட்டத்தை வைத்துத்தான் சிங்கள தலைமைகள் இதுவரை காலமும் அரசியல் செய்துவந்தன.புலிகள் இல்லாது போனபோது அவர்களின் கவனம் முஸ்லீம்களின் பக்கம் திரும்பியிருக்கிறது.அரசியல் செய்வதற்கு ஒரு கவனக் கலைப்பான் எப்போதுமே தேவை.இல்லாவிட்டால் மக்கள் அரசாங்கத்தைக் கேள்வி கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.பெரும்பான்மை மக்களின் கவனத்தைக் கலைப்பதற்காகவே சிங்கள் முஸ்லீம் இனவாதத்தைஅரசாங்கம் கட்டவிழ்த்து விடுகிறது. அதற்கான ஆயுதம்தான் பொது பல சேனையின் உருவாக்கம்.பொது பல சேனை எதற்காக உருவாகியது என்று தெரியாது.ஆனால் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பது நன்றாகத் தெரிகிறது.அவர்களின் அரசியலுக்கு அது மிகவும் அவசியமானது.வெல்வேரி நீர்ப்பிரச்சினையில்   சிங்கள மக்களின் அதிருப்தியை அரசாங்கம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது.சிங்கள மக்களின் கவனத்தை உடனடியாக வேறு பக்கம் திருப்பாவிட்டால் மஹிந்த அரசியல் ஆட்டம் கண்ட விடும்.கிரென்பாஸ் சம்பவத்தோடு வெல்லவேரி பிரச்சினை தணிந்துவிட்டது.இதுதான் அரசியல்.

முட்டுக்கொடுக்க வந்த கம்பு மரத்தைவிட பெரிதாக வளர்வதைப் போல் சிங்கள முஸ்லீம் கசப்புகள் நாள்கள் செல்லச் செல்ல அதிகரித்துக் கொண்டே செல்கிறது.அரசாங்கத்தினால் இதனைக் கட்டுப்படுத்த முடியும் என்ற நிலையில் இருந்து கட்டுப்படுத்த முடியாது என்ற நிலைக்குப் போய்க்கொண்டிருக்கிறது.இப்பிரச்சினைகளை அரசாங்கம் தூண்டுகிறதா என்று தெரியாது.அரசாங்கம் தூண்டவில்லை என்றிருந்தாலும் அரசாங்கம் அப்பிரச்சினைகளை தனது நலத்திற்காக நன்றாகப் பயன்படுத்துகிறது.வேளாண்மையில் புல்லை நாம் வளர்ப்பதில்லை.அது தானாகவே வளர்ந்தாலும் அதனைப் புடுங்கி எறிந்து விடுவோம்.ஒரு நாளும் நாம் வளர்த்த புல்லுக்கு நீர் ஊற்றுவதில்லை.இலங்கை அரசாங்கம் சில நேரம் புல்லை வளர்க்கிறது.சில சமயம் சுயமாக வளர்ந்த, புல்லைப் புடுங்காமல்,புடுங்கவும் விடாமல் நீர் ஊற்றுகிறது.

இனவாதத்தின் மூலம் மக்களின் கவனத்தைக் கலைப்பதற்கு ஏக போக உரிமையாளர்களாக பொது பல சேனாவை மாத்திரம் வைத்துக் கொண்டிருந்த அரசாங்கம் தனது தேவை முடிந்தவுடன் எந்நேரத்திலும் இதனை இல்லாது செய்துவிடலாம் என எண்ணியிருந்ததது. ஆனால் இன்று பொது பல சேனாவின் இனவாத்தினால் தூண்டப்பட்ட சில கூட்டம் இன்று சுயமாகவே இவ்வேலைகளில் ஈடுபடுகின்றன.பொது பல சேனைக்கும் கிறேன்பாஸ் சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்றிருந்தால்,இவற்றை அரங்கேற்றியவர்கள் பொது பல சேனையால் தூண்டப்பட்டவர்களாக இருக்கலாம்.பொது பல சேனையை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடிந்தாலும் இவ்வாறான சுயேற்சைக் கூட்டங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும்.அதாவது அரசாங்கம் தான் உருவாக்கிய இனவாதத்தைக் கட்டுப்படுத்த முடிந்தாலும் சுயமாக உருவாகும் இக்குழுக்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும்.அரசாங்கம் கட்டுப்படுத்த முயலும் பொழுது அரசாங்கம் சிங்கள அபிலாசைகளுக்கு எதிராகச் செயற்படுகிறது என்ற விமர்சனம் அரசுக்கு எதிராக கிளம்பும்.அதனை விரும்பாத அரசு இதனை அனுமதிக்க வேண்டிய நிலைக்கே விரும்பியும் இரும்பாமலும் தள்ளப்பட்டுவிடும்.இதனைத் தொடர்ந்து வரும் அரசாங்கங்களும் இதனைப் பயன்படுத்த ஆரம்ம்பித்துவிடும்.

நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய தருணத்தில் சில சுய நோக்கங்களுக்காக அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட சிங்கள முஸ்லீம் பிரச்சினை   பல கொடூரமான பரிணாமங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.இலங்கை புலியிடம் இருந்து தப்பி பெரிய குழியில் மாட்டிக்கொண்டிருக்கிறது.குழியை மூட நினைதாலும் முடியாதளவு அது பெரிதாகிக் கொண்டு செல்கிறது.உடனடியாக,இன்றே, இப்பொழுதே மூடாவிட்டால் இது சிங்கங்கள் உருவாகும் பள்ளத்தாக்காக மாறிவிடும்.

2 comments:

  1. அன்புள்ள இலங்கை வாழ் முஸ்லீம்களே பின் வரும் ஹதீசை பாருங்கள்
    (யார் எந்தக்கூட்டத்துக்கு ஒப்பாகிறானோ அவன் அந்தக்கூட்டத்தில் ஒருவன்)
    இந்த அரசு ஓர் இஸ்லாமிய விரோத கூட்டணி இதில் மொத்தம் 18 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் அரசை விட்டு வெளியேறினால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமல் போகும் அதன் பின் அரசு நினைத்த படி ஆட முடியாது
    அதன் பின் சில மாதங்களில் இந்த அரசு கவிழ்ந்து விடும்
    இந்த 18 முஸ்லிம் பாராளுமன்ற உறப்பினரம் விலகாவிட்டால் அந்தந்த தொகுதியில் உள்ள முஸ்லிம்கள் இவர்களை அரசிலிருந்து வெளியேறுமாரு வற்புறத்த வேண்டும் அதற்கும் சம்மதிக்காவிட்டால் அவர்களை அல்லாஹ்வுக்காக புறக்கணியுங்கள் மாறாக அவர்களை வரவேற்க வேண்டாம்
    இப்படி செய்யா விட்டால் நாமும் குற்றவாளிகல்

    ReplyDelete
  2. innum muslimkal endra payaril pala munaffikkuhal arashukku aazaravahattan irukkirarhal:(

    ReplyDelete

Powered by Blogger.