Header Ads



அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) உடல் மருத்துவ கல்லூரிக்கு ஒப்படைக்கப்பட்டதா..?

வே.மதிமாறன் என்பவரின் வலைத்தளத்தில் (மற்றும் சில இணைங்களும்) வெளியாகியிருந்த குறிப்பே இது. இதுபற்றி இந்தியாவைச் சேர்ந்த சகோதரர்கள் மேலதிக தகவல்களை அனுப்பிவைக்குமிடத்து அவற்றை பதிவேற்றம் செய்ய எமது இணையம் காத்திருக்கிறது.

பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களின் மரணத்தை ஒட்டி அவர் உடல் மருத்துவக் கல்லூரிக்கு ஒப்படைப்பது என்ற அவரின் குடும்பத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், இஸ்லாமியர்களும் இஸ்லாமிய அமைப்புகளும் அதன் தலைவர்களும் நடந்து கொண்ட விதம், மிகுந்த மரியாதைக்குரியது.

‘எங்கள் தந்தை மருத்துவக் கல்லூரிக்கு தன் உடலை ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டார்’ என்று அவரின் மகன்கள் வளவனும் சுரதாவும் கேட்டுக் கொண்டதை சந்தேகிக்கமால் முழுமையாக நம்பி,

‘குடும்பத்தின் உணர்வுக்கு மதிப்பளிக்கிறோம்’ என்று இஸ்லாமியர்கள் நடந்து கொண்ட விதமும் ‘எங்களுக்கு தொழுகை நடத்துவதற்கு மட்டுமாவது அனுமதி கொடுங்கள்’ என்று கேட்டுக் கொண்ட முறையும் ‘இஸ்லாமியர்களிடம் ஜனநாயகம் என்பதே துளியும் இல்லை’ என்று அவதூறு பேசுகிற இஸ்லாமிய எதிர்ப்பு அறிவாளிகளை அம்பலப்படுத்தியது.

25 ஆண்டுகளாக பேராசிரியர் அப்துல்லாஹ் குடும்பத்து நண்பன், இதை நேரிலிருந்து பார்த்தவன், இந்த பிரச்சினைக்கு இடையில் பயணித்தவன் என்கிற முறையில் இதை நான் பதிவு செய்கிறேன்.

அண்ணாசாலையில் அமைந்த மெக்கா மசூதியில் ஆயிரக்கணக்காணவர்கள் கூடி நடத்திய சிறப்பு தொழுகை மற்றும் இரங்கல் கூட்டத்தில், பேராசிரியர் அப்துல்லாஹ் குறித்து பேசியதும், அவருக்காகவும் அவரின் குடும்பத்தின் மன அமைதிக்காவும் அவர்கள், அல்லாவிடம் வேண்டிக் கொண்ட விதமும் எல்லையற்ற அன்பால் நிறைந்து வழிந்தது.

பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களுக்காக நடந்த அந்த தொழுகை அனுமதிக்கப்படாமல் இருந்திருந்தால், அங்கிருந்த இஸ்லாமியர்களின் மனம் எவ்வளவு புண்பட்டிருக்கும் என்பதை புரிந்து கொள்வதாக இருந்தது, அன்பால் நிறைந்த அந்த தொழுகை.

No comments

Powered by Blogger.