பாராளுமன்றத்தில் துப்பாக்கி ரவையுடன் எம்.பி. பொலிஸில் ஒப்படைக்க அஸ்வர் எம்.பி. வலியுறுத்து
(TN) வெலிபேரிய ரதுபஸ்வல சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கி ரவையினால் 21-08-2013 சபையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. ரதுபஸ்வல சம்பவம் தொடர்பான பாராளுமன்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய அஜித் மான்னப்பெரும எம்.பி., ரதுபஸ்வலயில் சுடப்பட்டதாகக் கூறி ரவை போன்ற ஒரு பொருளை சபையில் காண்பித்தார்.
இதனையடுத்தே சபையில் சர்ச்சை ஏற்பட்டது. இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர், அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோர் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பியதோடு இது குறித்து விசாரணை நடத்துமாறும் கோரினர். இதனையடுத்து குறித்த ரவையை விசாரணைக்காக சபை படைக்கல சேவிதரிடம் ஒப்படைக்குமாறு பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி உத்தரவிட்டார்.
அஜித் மான்னப்பெரும எம்.பியின் உரையின் போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்த ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி, சபைக்கு துப்பாக்கி ரவையொன்றை எடுத்து வந்திருப்பது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும். சபைக்குள் ரவை எடுத்துவர முடியாது. எனவே, குறித்த எம்.பியை கைது செய்து பொலிஸில் ஒப்படைக்க வேண்டும். வழக்குடன் தொடர்புடைய சாட்சியத்தை இங்கு கொண்டு வந்துள்ளார். இவர் துப்பாக்கியும் வைத்துள்ளாரா தெரியாது என்றார்.
அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியதாவது: சபைக்குள் துப்பாக்கிக் குண்டை எடுத்துவர அனுமதியில்லை. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றார். தமது உரை முடிந்தபின் குறித்த ரவையை படைக்கல சேவிதரிடம் ஒப்படைக்குமாறு பிரதி சபாநாயகர் பணித்தார். இதன்படி அவரின் உரை முடிந்த பின்னர் பிரதிப் படைக்கல சேவிதர் அஜித் மான்னப்பெரும எம்.பி.யிடம் சென்று அது குறித்து விசாரித்தார்.
Post a Comment