அரசினுள் சதி வேலைத்திட்டம் நடைபெறுகின்றதா..?
ஒரு புறத்தில் மாகாண சபை தேர்தல் மறுபுறத்தில் பொதுநலவாய மாநாட்டின் தலைவர்களின் சம்மேளனம் நடைபெறவிருக்கின்ற அதேவேளையில் நாட்டிற்கும், அரசிற்கும், ஜனாதிபதிக்கும் தேசிய சர்வதேச ரீதியில் தவறான கண்ணோட்டத்தினை ஏற்படுத்துவதற்கு அரசினுள் சதி வேலைத்திட்டம் நடைபெறுகின்றதா? என தேடிப்பார்க்க வேண்டும்.
வெலிவேரிய சம்பவம் தொடர்பில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் அதில் மேலும் குறிப்பிடுகையில்,
இரசாயன, தொழிற்சாலையில் கழிவுகள் வெளியிடுவதால் குடிநீர் மாசடைவதாக மக்கள் பல இடங்களுக்கு முறைப்பாடு செய்தபோதும் குறித்த பிரசினைக்கு எவ்வித தீர்வும் காணாத நிலையிலேயே இப்போராட்டத்துக்கு மக்கள் ஏற்பாடு செய்து வீதிக்கு இறங்கியுள்ளனர்.
அத்துடன், போராட்டத்துக்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய விஞ்ஞான ரீதியான பரிசீலனைகளை போராட்டத்துக்கு பின்பு செயற்படுத்தியமை கவலைக்குரிய விடயமாகும். அதேபோன்று தொழிற்சாலையை தற்காலிகமாக மூட வேண்டும் என்று பொலிஸாருக்கு முறைப்பாடு செய்த போதும் பொலிஸார் இவ்விடயத்தில் அசமந்தப்போக்கிலேயே செயற்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பொலிஸார் மறற்றும் இராணுவத்தினரின் ஆயுத விளையாட்டால் அப்பாவி வாலிபர்கள் மூவரின் உயிர்கள் பரிதாபகரமாக பிரிந்துள்ளன. இவ்வாறான செயற்பாட்டினால் மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சி பீடம் ஏறி இருக்கும் கூட்டமைப்பு அரசிற்கே அவப்பெயர் ஏற்படும்.
அத்துடன் இவ்வாறான மிலேச்சத்தனமான செயற்பாட்டால் ஜனாதிபதிக்கும் நாட்டுக்கும் அவப்பெயர் ஏற்படும். எனவே இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டுமென ஜனநாயகத்தை போற்றும் நாங்கள் வேண்டுகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இராணுவத்தினர் ஊடகவியலாளர்களையும் வேட்டையாடியுள்ளதுடன் அவர்களுடைய உபகரணங்களுக்கும் சேதம் விளைவித்துள்ளதாக அமைச்சர் இவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய அரசாங்கமே சதிகார அரசியல்வாதிகளின் கூட்டாக இருக்கும்போது, அரசாங்கத்திற்குள் சதி வேலை நடக்கின்றதா? என்ற கேள்வி பொருத்தமற்றது.
ReplyDelete-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-