ரவூப் ஹக்கீமின் சவால், பசீர் சேகுதாவூத் ஏற்பாரா..?
(TM) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் அரசாங்கத்தின் ஊதுகுழலாக செயற்படுகின்றார் என அக்கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். இதற்கு நன்றிக்கடனாகவே அவருக்கு அமைச்சரவை அந்தஸதுள்ள அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் ஊதுகுழல் என்பது கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலின்போது நன்கு அறிய முடிந்தது என அவர் தெரிவித்தார். "அத்துடன் கட்சியின் அங்கீகாரமில்லாமல் அமைச்சர் பதவியொன்றை பெற்றுள்ளார். அவரின் கருத்துகள் இன்று கட்சிக்கு ஒத்துபோகாதவையாக உள்ளன. அவரால் கூட்டப்படும் எந்தவொரு கூட்டமும் முஸ்லிம் காங்கிரஸினால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது" எனவும் அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டார்.
புத்தளம் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
"இந்த அமைச்சு பதவி மூலம் அரசாங்கம் அவருக்கு பதவியுயர்வு வழங்கியுள்ளது. இந்த பதவியுயர்வு குறித்து கட்சிக்கும் தெரியாது தலைவருக்கும் தெரியாது. திடீரென்று வழங்கப்பட்ட பதவியுயர்வானது எனக்கு சமாந்தரமாக அமைச்சுப் பதவியாகும்.
இந்த விசித்திரமும் நடக்குது. அவர் தான் எமது கட்சின் புத்தளம் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் ஆனால் அவர் இங்கு இல்லை. அவர் இங்கு வரமாட்டார். அப்படி அவர் வரவேண்டியிருந்தால் அமைச்சர் பதவிய இராஜினாமாச் செய்ய வேண்டும்.அப்படி பொறுப்பான பதவியை தான் ஜனாதிபதி அவருக்கு வழங்கியுள்ளார்.
ஊக்குவிப்புத் திறன் அமைச்சு என்றால் என்னவென்று அகராதிய எடுத்துத்தான் பார்க்க வேண்டும். இந்த அமைச்சருக்கு இருக்கிற நோய் என்னவென்றால் அமைச்சு பதவியை இராஜினாமா செய்யாமல் அரசாங்கத்தை விமர்சிக்க முடியாது. அந்தளவிற்கு பொறுப்பான பதவியை அரசாங்கம் அவருக்கு கொடுத்துள்ளது.
தற்போது அவர் முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த முடிவு பிழை என்று மேடை போட்டு பேசுவதுடன் பத்திரிகை அறிக்கையும் விடுகின்றார். விவஸ்தையில்லாம அறிக்கை விடுவதில் எந்தவித அர்த்தமுமில்லை. இந்த கட்சியின் போராளிகளை நேரடியாகச் சந்திப்பதற்கு அவருக்குத் திராணியிருக்க வேண்டும். அவருக்கு முடியுமாக இருந்தால் அந்த விடயத்தை நேரடியாக வந்து மக்கள் முன் பேச வேண்டும்" என்றார்.
கட்சியை விட்டு துரத்த வக்கில்லாத தலைவர் அங்குமிங்கும் புலம்பித்திரிவது வேடிக்கையாகவுள்ளது. முடிந்தால் உடனே கட்சியை விட்டு நிறுத்துங்கள் பார்க்கலாம்.
ReplyDelete