Header Ads



இளைஞர் தலைமைத்துவ செயலமர்வுகளை நடத்த முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம்

தேர்தல் நடைபெறவுள்ள மூன்று மாகாணங்களிலும் மாவட்ட ரீதியில் இளைஞர் தலைமைத்துவ செயலமர்வுகளை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதியுயர் பீடம் தீர்மானித்துள்ளது.

கட்சியின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடைபெற்ற அதியுயர் பீடக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை மு.கா. குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் முன்மொழிந்த  இளைஞர் தலைமைத்துவ செயலமர்வு தொடர்பிலான வேலைத் திட்டத்திற்கு கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் இக்கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கியதுடன் அதற்கான ஆலோசனைகளையும் முன்வைத்தார்.

இதன் பிரகாரம் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, புத்தளம், குருநாகல், கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் அடுத்த வாரம் இந்த இளைஞர் செயலமர்வுகளை நடத்துவது எனவும் அதற்கான ஏற்பாடுகளை கட்சியின் மாவட்ட அமைப்பாளர்களின் பங்களிப்புடன் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரான ஏ.எம்.ஜெமீல் தலைமையில் மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தோற்றமும் வளர்ச்சியும் அதன் இன்றைய தேவையும் இலக்கும் சமூகத்தின் உரிமைகளையும் அபிலாசைகளையும் வென்றெடுப்பதற்கான சாத்வீக போராட்டங்களை முன்னெடுக்கும் வகையில் பலமிக்க இயக்கமாக கட்சியைக் கட்டி எழுப்புதல், அதற்கு இளைஞர்களை தயார்படுத்தல் போன்ற பல்வேறு தலைப்புகளில் விரிவுரைகளும் கலந்துரையாடல்களும் இடம்பெறும் வகையில் இச்செயலமர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

இதில் கட்சியின் தலைவர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், துறைசார் நிபுணர்கள், கல்விமான்கள் மற்றும் புத்திஜீவிகள் கலந்து கொண்டு விரிவுரைகளை நிகழ்த்தவுள்ளனர்.

இலங்கை வாழ் முஸ்லிம்கள் பெரும் நெருக்கடிக்குள் தள்ளி விடப்பட்டிருக்கின்ற இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் சமூக இயக்கத்தையும் இளைஞர்களையும் பலப்படுத்த வேண்டிய தேவை உணரப்பட்டிருப்பதன் காரணமாகவே மாவட்ட ரீதியில் இந்த செயலமர்வுகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக மு.கா. இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை மு.கா. குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.

முதற்கட்டமாக மாகாண சபைத் தேர்தல் நடைபெரவுள்ள மாவட்டங்களிலும் அதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்திலும் இந்த இளைஞர் தலைமைத்துவ செயலமர்வுகளை நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனஎன்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த செயலமர்வில் பங்குபற்றி சமூக இலட்சியப் பயணத்தில் இணைந்து கொள்ள விரும்புகின்ற இளைஞர்கள் முஸ்லிம் காங்கிரசின் மாவட்ட அமைப்பாளர்களுடனோ தம்முடனோ உடன் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.