Header Ads



சபாநகர் கிராமத்தின் அடிப்படை வசதிகளை நிவர்த்திக்குமாறு கோரிக்கை

(ஏ.கே.ஏ.ரவூப்)

இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சபாநகர் கிராமத்தின் அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்து தருமாறு இக்கிராமவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அக்கரைப்பற்று –அம்பாரை வீதியிலிருந்து சுமார் 500 மீற்றருக்கு அப்பால் அதாவது 8ஆம் கட்டைக்கு அருகிலுள்ள சபாநகர் கிராமத்தில் ஏறக்குறைய ஐம்பது குடும்பங்கள் வசித்து வருகின்றன. 

  இக்கிராம மக்கள் குடிநீரைப் பெறுவதில் தினமும் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இங்குள்ள ஜூம்ஆப் பள்ளிவாசலில் வுழுச் செய்வதற்கும் கூட நீர் கிடையாது. ஒரு சில பொதுக் கிணறுகள் இருந்தாலும் கோடை காலமானதும் அவை வற்றி வரண்டு போவதால் அருகிலுள்ள சிங்களக் கிராமங்களுக்குச் சென்றே குடிநீரைக் கொண்டு வரவேண்டியுள்ளதாக இவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

  கடந்த காலங்களில் இறக்காமம் பிரதேச சபை, இறக்காமம் பிரதேச செயலகம் என்பன வரட்சி காலத்தில் வெளசர் மூலம் குடிநீரைக் கொண்டு வந்து இக்கிராம மக்களுக்கு விநியோகித்தனர். தற்போது இச்சேவையும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை தேசிய நீர் விநியோக வடிகாலமைப்புச் சபையினால் குடிநீருக்கான குழாய்கள் பொருத்தப்பட்ட நிலையில் அப்பணிகளும் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளன. எனவே இவர்களுக்கான குடிநீர் வசதியைச் செய்து கொடுப்பது மிகவும் கட்டாயமாகும்.
 இக்கிராமத்துக்கான பிரதான வீதியுட்பட பெரியவாய்க்கால் வீதி, கோழிபாம் வீதி, கிணற்றடி வீதி ஆகியன எவ்வித புனரமைப்புமின்றி சேதமடைந்து குன்றும் குழியுமாகக் காணப்படுகின்றன. இக்கிராமத்தைச் சேர்ந்த மாணவாகள் கல்வி கற்பதற்கான பாடசாலையொன்று இல்லாததால் பல மைல்களுக்கப்பாலுள்ள அக்கரைப்பற்று, 5ஆம் கட்டை, இலுக்குச்சேனை, வாங்காமம் ஆகிய பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்கே நாளாந்தம் பல சிரமங்களுக்கு மத்தியில் கால் நடையாகவும், வாகனங்களிலும் பயணித்து கல்வி கற்று வருகின்றனர்.

  வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள சபாநகர் மக்களில் பெரும்பாலானோர் நிரந்தர வீடுகளின்றி ஓலைக் குடிசைகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். இதனால் இவர்கள் மழை காலங்களில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அன்றாடம் கூலித் தொழில் செய்தே இவர்கள் தமது ஜீவனோபாயத்தைக் கழித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சுனாமியால் பாதிக்கப்பட்டு குடியேறியவர்களாவர்.

  எனவே இறக்காமம் சபாநகர் மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமாகவுள்ள குடிநீர்த் தேவையை நிவர்த்தி செய்து கொடுப்பதுடன் இங்குள்ள வீதிகளைப் புனரமைத்து போக்கு  வரத்துக்கு உகந்ததாக மாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்துடன் இவர்களுக்கான வாழ்விடங்களை அமைத்துக் கொடுத்து தனியான பாடசாலையொன்றையும் அமைப்பதற்கு அரசியல்வாதிகளும், அரச சார்பற்ற நிறுவனங்களும் முன்வர வேண்டுமென்று இக்கிராமத்து மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
  

No comments

Powered by Blogger.