Header Ads



''ஆயத்த சூழ்நிலைகள்'' - முஸ்லிம்கள் இனிமேலாவது சிந்திக்க வேண்டும்..!

இந்நாட்டு முஸ்லிம்களின் மத கலாசார அடிப்படை உரிமைகளை நசுக்குவதனை இலக்காகக் கொண்டு செயற்பட்டு வரும் மதத் தீவிரவாதிகளின் வன்முறைகளின் தொடரிலேயே கிராண்ட்பாஸ் மோளவத்தை பள்ளிவாயலும் தாக்கப்பட்டிருக்கின்றது. பொலிசாரின் ஒத்துழைப்புடனும் ஊக்கப்படுத்தலுடனும் பல மணிநேரமாக நிகழ்த்தப்பட்ட வன்முறைகளில் இப்பள்ளிவாயல் பெரும் சேதத்துக்குள்ளாகியுள்ளாக்கப்பட்டிருப்பதுடன்  குறித்த பள்ளிவாயலில் மஃரிப் தொழுகைக்காக சென்ற முஸ்லிம்கள் உள்ளிட்ட சிலர் இவ்வன்முறைத் தாக்குதலில் காயப்படுத்தப்பட்டிருக்கின்றனர். இந்நாட்டின் சட்ட யாப்பின் பிரகாரம் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள மத உரிமைகளை மறுத்து அவர்களின் மதத்தலம் மீது மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலினை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வன்மையாகக் கண்டிப்பதோடு இதற்கான முழுப்பொறுப்பையும் இந்நாட்டின் பாதுகாப்பிற்குப் பொறுப்பாளரான ஜனாதிபதியும் அவரது அரசாங்கமுமே ஏற்கவேண்டும் எனவும் சுட்டிக்காட்டுகின்றது. 

இந்நாட்டில் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் முஸ்லிம்களுக்கு எதிராக மெதுமெதுவாக பௌத்த மதத் தீவிரவாதக் கும்பல்கள் சிலவற்றினால் கிளப்பப்பட்ட வெறுப்புணர்வுப் பிரச்சாரங்கள் இன்று பகிரங்கமான வன்முறைகளாக மாறியிருக்கின்றன. இந்நாட்டின் சட்டத்தையும், ஒழுங்கையும் அமைதியையும், அதன் தேசிய பாதுகாப்பையும் கடுமையாகப் பாதிக்கக்கூடிய இனவாத வெறுப்புணர்வுப் பிரச்சாரங்களை தொடக்கநிலையிலேயே கட்டுப்படுத்திவிட வேண்டும் என இந்நாட்டின் மீது அக்கறை கொண்ட அத்தனை பேருமே வலியுறுத்தி வந்தனர்;.  கடந்த காலங்களில்  இதுபோன்ற மதவாத இனவாத வெறுப்புணர்வுப் பிரச்சாரங்கள் தலை தூக்கிய கால கட்டங்களில் எல்லாம் ஆட்சி செய்த ஜனாதிபதிகளும் அவர்களது அரசாங்கங்களும் அவற்றை தேசியப் பொறுப்புடன் கட்டுப்படுத்தியதன் காரணமாக இந்நாட்டின் இன ஐக்கியமும் சிறுபான்மை மக்களின் மத கலாசார உரிமைகளும் பாதுகாக்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போதைய ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் இந்நாட்டு மக்களின் மத உரிமைகளை பாராபட்சமின்றி உத்தரவாதப் படுத்தும் விடயத்தில் படு மோசமாக தவறு விட்டிருக்கிறார்கள். அதன் விளைவாகவே இந்நாட்டில் மத ரீதியாக சிறுபான்மை மக்களாக வாழும் ஹிந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ சமூகங்களுக்கு எதிரான வெறுப்புணர்வு பிரச்சாரங்கள் மதத் தீவிரவாதத் தாக்குதல்களாகவும் வன்முறைகளாகவும் மாறியிருக்கின்றன. இதில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்தும் தீவிரமடைந்து வருகின்றன.

இதுவரையில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான 24 வணக்கஸ்தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பெருமளவான தாக்குதல்கள், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டியவர்களின் கண் முன்னாலயே நடந்து முடிந்திருக்கின்றன. இத்தனை சம்பவங்களும் நடந்து முடிந்திருந்தும் கூட இந்த வன்முறைகளை முன்னின்று நடாத்திய அல்லது அதைத் தூண்டி விட்டவர்களில் ஒருவரையாவது இதுவரை பொலிசார் விசாரிக்கவோ கைது செய்யவோ இல்லை. தற்போது நடந்து முடிந்துள்ள கிராண்ட்பாஸ் பள்ளிவாயல் தாக்குதலின் போதும் இதுவே நடந்திருக்கின்றது. இத்தாக்குதலை முன்னின்று நடாத்தியவர்களுக்கு ஒத்தாசையாகவும், ஊக்கப்படுத்தும் வகையிலும் பொலிசார் நடந்து கொள்வதனை இச்சம்பவம் தொடர்பான காணொளிகள் நிரூபிக்கின்றன. தாக்குதலை முன்னின்று நடத்தியோரை பொலிசார் பாதுகாப்பாக அழைத்துச் செல்வதனை காட்டும் புகைப்படங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. இதுவரை முஸ்லிம்களின் வணக்கஸ்தலங்களை மையப்படுத்தியதாக மேற்கொள்ளப்பட்டு வந்த மதத் தீவிரவாதிகளின் தாக்குதல்கள், கிராண்ட்பாஸ் சம்பவத்தின்போது முஸ்லிம்களின் வீடுகளுக்கும், உடைமைகளுக்கும் எதிரான தாக்குதல்களாகவும் மாறியிருக்கின்றன. 

இதனைத் தொடந்து நடாத்தப்பட்ட உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் பௌத்த மதத் தீவிரவாதிகளின் கோரிக்கைகளே நிறைவு செய்யப்பட்டுள்ளன. புத்தசாசன அமைச்சின் சட்டரீதியான அங்கீகாரம் பெற்ற கிராண்ட்பாஸ் மோளவத்தை பள்ளிவாயலில் இனிமேல் தொழுகை நடாத்தக்கூடாது என்ற தீர்மானம் முஸ்லிம்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. நடந்த பேச்சுவார்த்தைகளில் இவ்வன்முறைக் கும்பலின் கோரிக்கைகளை பிரதிநிதித்துவப் படுத்துபவர்களாக அரச தரப்பு இரு முக்கிய அரசியல்வாதிகள் கலந்து கொண்டிருக்கின்றனர். இதில் கலந்துகொண்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என வாதாடி இருக்கின்றார்கள்.இருந்தாலும் மதத் தீவிரவாதக் கும்பலின் எவ்வித நியாயமுமற்ற கோரிக்கைகளே இங்கு நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. ஆக நமக்கு இருக்கும் மக்கள் ஆணையையும் அதன் மூலம் கிடைத்த அதிகாரங்களையும் பயன்படுத்தி முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளைக் கூட பாதுகாத்துத் தர முடியாத கையாலாகாத்தனத்தை அரச தரப்பு முஸ்லிம் அரசியல் வாதிகள் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கின்றார்கள்.

சில வாரங்களுக்கு முன்னால் இது போலவே நீண்ட காலம் முஸ்லிம் மக்கள் தொழுகை நடாத்திவந்த மஹியங்கணை பள்ளிவாயல் இனவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி பின்னர் அரசதரப்பு மாகாண அமைச்சர் ஒருவரே அங்கு நேரடியாக வந்து அப்பள்ளிவாயலை மூடிவிடுமாறு உத்தரவிட்டுச் சென்றார். இதனால் அன்றைய ஜும்ஆ தொழுகை நிறுத்தப்பட்டதோடு இப்போது மஹியங்கனை பள்ளிவாயல் நிரந்தரமாக மூடப்பட்டிருக்கின்றது. அப்பள்ளிவாயல் புத்தசாசன அமைச்சின் அங்கீகாரத்தைப் பெறவில்லை என்று அதற்கு நியாயம் சொல்லப்பட்டது. ஆனால் இன்று புத்த சாசன அமைச்சின் முழு அங்கீகாரத்தைப் பெற்ற கிராண்ட்பாஸ் பள்ளிவாயல் மூடப்பட்டுள்ளது. எனவே, மதஸ்தலம் ஒன்றுக்கு முறையான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறதா என்பதற்கப்பால் மதத்தீவிரவாதிகள் சிலர் எதை விரும்புகிறார்களோ அதனை நிறைவேற்றுவதற்காகவே அரசாங்கம் நடந்து கொள்கிறது.  இது இந்த அரசாங்கத்தின் மீதான சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளது. 

முதலில் வெறுப்புணர்வுப் பிரச்சாரம் பின்னர் அச்சுறுத்தல். அதனைத் தொடந்து வன்முறைத் தாக்குதல் அதன்பிறகு சமாதானப் பேச்சுவார்த்தை என்ற ஒரு கிரமமான திட்டத்தின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு எதிரான நிகழ்ச்சி நிரல்கள் அரங்கேற்றப்படுவதனை தெளிவாக காண முடிகிறது. இதனை பௌத்த மதத் தீவிரவாதக் கும்பல்கள் சிலவும் அவர்களது தலைமையில் இயங்கும் வன்முறையாளர்களும், அத்தோடு அரசாங்கத்துக்கு நெருக்கமான அரசியல்வாதிகளுமாகச் சேர்ந்து கச்சிதமாக நிறைவேற்றி வருகின்றனர். ஒரு பக்கம் முஸ்லிம்கள் தமது அடிப்படை மத உரிமைகளை இழந்து வருகின்றனர். மறுபக்கம் அம்மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் புதிய அமைச்சுப் பதவிகளையும், சலுகைகளையும், வசதிகளையும் பெற்று வருகின்றனர். எல்லா அதிகாரங்களும் இருந்தும்கூட முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஜனாதிபதியிடம் கூட்டாகச் சென்று நேரடியாக பேசுவதற்குக் கூட வக்கற்றவர்களாகவும், வாய்ப்பற்றவர்களாகவும் இவர்கள் மாறியிருக்கின்றார்கள்.

மஹியங்கணை பள்ளிவாயல் மூடப்பட்டதைத் தொடர்ந்து ஜனாதிபதியினை கூட்டாகச் சந்திப்பதற்கு நேரம் ஒன்றை தருமாறு இவர்கள் கேட்டிருந்தும் கூட ஜனாதிபதி அதனைக் கணக்கில் எடுத்ததாகத் தெரியவில்லை. அதேவேளை சில தினங்களுக்கு முன்னர் மஹியங்கனை சென்றிருந்த ஜனாதிபதி அப்பிரதேச ஆதிவாசிகளின் தலைவர்களை சந்தித்து உரையாடியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அப்படியாயின் ஜனாதிபதியிடம் ஆதிவாசிகளின் தலைவர்களுக்கு இருக்கின்ற மரியாதை கூட நமது முஸ்லிம் அரசியல்வாதிகளுக்குக் கிடையாதா என்று கேட்கத் தோன்றுகிறது. இது முஸ்லிம் அரசியல் தலைமைகள் என்றோர் தமக்கு இருக்கவேண்டிய குறைந்த பட்ச சுயமரியாதையினையும் கூட இந்த அரசாங்கத்தில் இழந்து விட்டார்கள் என்பதனையே நிரூபிக்கின்றது.

இந்நிலையில் இந்நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டையும், நல்லிணக்கத்தையும், நிரந்தர சமாதானத்தையும் விரும்புகின்ற அனைவரும் ஒன்றிணைந்து இந்த மதத் தீவிரவாத வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். அரசாங்கம் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டி சகல மக்களினதும் அடிப்படை உரிமைகளையும் உத்தரவாதப்படுத்துகின்ற தனது அடிப்படை கடமையினை இனிமேலாவது செய்யவேண்டும் என எல்லாவகையான அழுத்தங்களையும் கொடுக்க வேண்டும். இது போன்ற சந்தர்ப்பங்களில் தமக்கு சௌகரிகமானவற்றை செய்துவிட்டு தமது பொறுப்பிலிருந்து முஸ்லிம் அரசியல்வாதிகள் நழுவிக் கொள்வதற்கு இனிமேலும் முஸ்லிம் சமூகம் வாய்ப்பளிக்கக் கூடாது. தமது உரத்த குரலில் முஸ்லிம் புத்திஜீவிகளும், உலமாக்களும், இளைஞர்களும், பெண்களும் என அத்தனைபேரும் இது பற்றிப் பேசுவதற்கும், நடவடிக்கை எடுப்பதற்கும் முன்வரவேண்டும். கிழக்கு மாகாண சபையில் இருக்கும் முஸ்லிம்களின் வாக்குப்பலம் பாராளுமன்ற  மற்றும் அரசாங்க கட்டமைப்புகளில் இருக்கும் முஸ்லிம்களின் அரசியல்பலம்,  அதேபோன்று விரைவில் நடக்கவிருக்கின்ற பொதுநலவாய நாடுகளின் கூட்ட ஆயத்த சூழ்நிலைகள் என்பவற்றை முஸ்லிம்களின் உரிமைகளை உத்தரவதப்படுத்தும் வகையில் பயன்படுத்திக் கொள்வதற்கு இனிமேலாவது அனைவரும் சிந்திக்க வேண்டுமென எமது இயக்கம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

6 comments:

  1. athikamaaka saththam poddal ungada dappa college kku seal vaipaangoo!!

    ReplyDelete
  2. உண்மையில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் சமூகத்தின் மீது அக்கறை கொண்டிருக்குமாயின் அதன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜமீல் கூறியதுபோல் முஸ்லிம் தலைவர்கள் அமைச்சுப் பதவிகளைத் தூக்கி எறியாவிட்டாலும்,

    கிழக்கு மாகாண சபையில் அரசுக்கு வழங்கும் ஆதரவை விலக்கிக் கொள்வதாக ஆளுநருக்கு அறிவித்தாலே போதும்

    .இன்ஷா அல்லாஹ் நிச்சயம் அரசாங்கம் முஸ்லிம்களின் காலடிக்கு வரும். இப்பிரச்சினைகளுக்கு நிச்சயம் தீர்வும் கிட்டும், அல்லாஹ்விடமும் அவனது வீடுகளைப் பாதுகாத்த நன்மையும் உங்களுக்கு கிடைக்கும்.
    என்பது எனது கருத்து.

    ReplyDelete
  3. Writing articles in tamil media no use. Try to publish more articles in sihala and english media. That will bring some result and benefits.

    ReplyDelete
  4. There are lots of media working internationally why do not people like you publish the articles with evidence about Sri Lankan Muslim and the racist activities of Baddish monks and the government against Muslim community in Sri Lanka instead writing article in Local News Papers

    ReplyDelete
  5. உண்மையாகவே தூங்குபவனைதான் தட்டி எழுப்பமுடியும் நாட்டின் முதல் பிரஜை முதல் அணைத்து ஆளும்தரப்பு அரசியல் வாதிகளும் தூங்குவதாக நடிக்கிறார்கள், முஸ்லிம்களின் பிரார்த்தனை,மிகவும் சக்தி வாய்ந்தது இப்போது நாடாளுமன்றத்தில்யே சாபம் இட ஆரம்பித்து விட்டார்கள் இந்த சாபம் சும்மா விடாது, 1977ல் 8 ஆசனத்தை பெற்று எதிகட்சியாக வரமுடியாமல் தமிழரசுக்கட்சி 18 ஆசனம்களை பெற்று இந்தநாட்டு வரலாற்றில் சரித்திரம் படைத்ததும், சிறிமாவோ அம்மையார் முஸ்லிம்களின் ஹஜ் கடமைக்கு ஆப்புவைத்தல்தான் என்பதும் சற்று யோசிக்க வேண்டிய விடயம் இன்று பிலிப்பைனில் 200 கிலோமீட்டர் வேகத்தில் காற்று தாக்கியிருக்கிறது இது போல் அரசிலும் எதிபாராத சுழல் காற்று வீசலாம், அசைக்கமுடியாது என்று ஆட்டம் போட்ட எத்தனையோ பெயருக்கு என்ன நடந்தது என்பது வரலாற்றில் நிறையவே உண்டு.
    மீண்டும் இலங்கையின் எல்லா பள்ளிகளிலும் குனூத் ஓதி பிரார்த்திக்க வேண்டும் இன்று மீண்டும் இந்த காவிஉடை பயங்கரவாதிகள் பரகஹதேனியவிலும், மாத்தளையிலும் ஆரம்பித்து இருக்கிறார்கள்.
    நம்பிக்கையோடு பிரார்த்திப்போம், அல்லாஹ பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.

    ReplyDelete

Powered by Blogger.