Header Ads



பச்சோந்தித்தனமும், இரத்தவாடை வீசும் வளைகுடா ஷெய்குகளின் கரங்களும்

(லதீப் பாரூக்)

முர்ஸி அரசாங்கம் இராணுவப் புரட்சி மூலன் கவிழ்க்கப்பட்டதை இஸ்ரேலிய சியோனிஸ்டுகள் சந்தோஷத்தோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அமைதியாகக் கிடந்த பலஸ்தீனியத் தேசத்தைக் கொலைக் களமாக மாற்றியதன் மூலம், பிரித்தானியாவின் உதவியுடன் அதுவரை காலம் உலக வரைபடத்தில் இருக்காத இஸ்ரேல் என்ற தேசம் உருவாக்கிய ஸியோனிஸ்டுகள், புதிய அரசின் கேந்திர, இராணுவ ரீதியாலான தனது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் பிராந்திய மேலாண்மையைப் பேணுவதற்கும் பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டு வந்தார்கள். 

சியோனிஸ மற்றும் அமெரிக்க அரசுகளின் தாளத்திற்கு அரபு ஆட்சியாளர்கள் ஆடி வந்த நிலையில், அரபு வசந்தம் இஸ்ரேலிற்கு பல்வேறு சங்கடங்களைத் தோற்றுவித்தது. முர்ஸியின் தேர்தல் வெற்றி இஸ்ரேலின் பிராந்திய நலன்களுக்கு அச்சுறுத்தல் தருகின்றதொரு விடயமாக நோக்கப்பட்டது. எனவே, திரை மறைவில் முர்ஸி அரசிற்கு எதிரான நடவடிக்கைகள் ஆரம்பமாயின. என்ன விலை கொடுத்தாவது ஆறு தசாப்தங்களுக்குப் பிறகு, ஜனநாயக ரீதியாக எகிப்தில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்க்க வேண்டும் என சவூதி, ஐக்கிய அரபு இராச்சியம், குவைத் உள்ளிட்ட அரசாங்கங்களும் கங்கணம் கட்டிக் கொண்டு களம் இறங்கின. இறுதியில் இராணுவப் புரட்சி இடம்பெற்று, அரபு வசந்தத்தின் பின்னரான அரபு மக்களின் ஒரே நம்பிக்கையும் தகர்க்கப்பட்டு விட்டது.

எகிப்து இன்று பிளவுபட்டதொரு தேசம். யாரோ சிலரின் நலன் களுக்காக இன்று எகிப்திய இரத்தம் சிந்தப்பட்டு வருகிறது. இராணுவப் புரட்சியை வழிநடாத்திய அப்துல் பத்தாஹ் அல்-ஸிஸி, சியோனிஸ அரசியல் நலன்களுக்காக எகிப்திய வீதிகளைக் கொலைக்களமாக்கி, சியோனிஸத்தின் கொடூரமான மொழியிலேயே உரையாடி வருகின்றார். முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினரை பயங்கரவாத அமைப்பினர் என சித்தறித்து வருகின்றார். ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட முர்ஸி அரசாங்கத்தை மீள ஆட்சியில் அமர்த்த வேண்டும் எனக் கோரி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை நடாத்திய ஆர்ப்பாட்டக்காரர்களை முன்னெப்போதும் இல்லாத மூர்க்கத்தனத்தோடு இராணுவம் கொன்று குவித்து வருகிறது. 

டசன் கணக்கில் எகிப்தியர்கள் கொன்று குவிக்கப்படும் நிலையில், ஐரோப்பிய யூனியன் அதனைக் கண்டிக்காமல் இருப்பது, அதன் இரட்டை வேடமாகும் என துருக்கியப் பிரதமர் ரஜப் தையிப் அர்துகான் குற்றம் சுமத்தியுள்ளார். 
இதே வேளை மறுபுறத்தில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர், புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசாங்கம், திறமையான மனிதர்களைக் கொண்டு அமைந்திருப்பதாக கூறியிருப்பதன் மூலம், அமெரிக்க அரசாங்கத்தின் நயவஞ்சகத்தனமான நிலைப்பாடு மேலும் ஒரு தடவை தோலுரிக்கப்பட்டிருக்கிறது. 'அப்துல் பத்தாஹ் அல்-ஸிஸி தலைமையில் இராணுவப் புரட்சியை மேற்கொண்டவர்களுக்கு, எகிப்திய மக்களின் இரத்தம் மலிவானதாக மாறியிருக்கிறது' என நோபல் பரிசு பெற்ற தவக்குல் கர்மான் தெரிவித்துள்ளார். 
முர்ஸியை சிறையில் வைத்துக் கொலை செய்து விட்டு, அவர் தற்கொலை செய்து கொண்டதாக செய்தியைப் பரப்பி விடுவார்களோ என தான் அஞ்சுவதாக பிரபல எழுத்தாளரும், ஊடகவியலாளருமான வாஇல் கன்தீல் தெரிவித்துள்ளார். எகிப்தில் எதனையும் எதிர்பார்க்கலாம் என்கிறார் அவர். 

அல் ஜஸீராவின் முன்னாள் பணிப்பாளர் வதா கன்பர் பின்வருமாறு தெரிவித்துள்ளார். 'இராணுவப் புரட்சியும், அரசியல் யாப்பு ரீதியான சட்டபூர்வத்தன்மையைக் கோருபவர்களுக்கெதிராக இராணுவம் மற்றும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல்கள் மத்திய கிழக்கின் அரசியல் வரலாற்றில் புதியதொரு திருப்பத்தை ஏற்படுத்தப்போகிறது. மாற்றத்தை நோக்கிய ஜனநாயக வழிமுறையைத் தொடர்தல் மற்றும் வன்முறை, குழப்பங்களை மையப்படுத்திய நடவடிக்கைகள் ஆகிய இரண்டு சிரமமான தெரிவுகளுக்கிடையில், எகிப்திய உதாரணம்  எகிப்திய எல்லைக்கு வெளியிலும் தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றது'. 
   
இதற்கு முன்பு சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு முஸ்லிம் உலகின் மீதான ஆக்கிரமிப்புக்களிற்கு அரபு சர்வாதிகாரிகள் தமது பங்களிப்புக்களை வழங்கினார்கள். பொஸ்னியா, செச்னியா, கொசோவோ, அல்பானியா, ஆப்கானிஸ்த்தான், ஈராக், சோமாலியா, மாலி என நீண்டதொரு பட்டியலை இந்த வகையில் குறிப்பிடலாம்.    

இந்நாடுகளின் அடிக்கட்டமைப்பு வசதிகள் அழிக்கப்பட்டு, மில்லியன் கணக்கானவர்கள் கொலை செய்யப்பட்ட பிறகு, மேலும் பல மில்லியன் கணக்கானவர்கள் வறுமையில் வதங்கும் அகதி முகாம்களுக்குள் தள்ளப்பட்டனர். தமது இருப்புக்காகவும், தமது மேற்கு எஜமானர்களின் சந்தோஷத்திற்காகவும் எதனையும் இவர்கள் செய்வார்கள் என்பதையே இதில் இருந்து புரிந்து கொள்கின்றோம். 

இந்நிலையில், எகிப்தில் இஸ்லாம் சார்பான சகோதரத்துவ அமைப்பினதும், முர்ஸியினதும் வெற்றியை, ஏற்கனவே அரபு வசந்தத்தால் கதிகலங்கிப் போயிருந்த இச்சர்வாதிகாரிகள் தமக்கு அடிக்கும் அபாய மணியாகவே  நோக்கினார்கள். தமது பரம்பரை ஆட்சியையும், இறையருளாகக் கிடைத்த பெற்றோலிய வளத்தின் மூலம் அனுபவிக்கின்ற சுக போகங்களையும் தாம் துறப்பதற்கு அதிக காலம் செல்லாது என்று கணக்குப் போட்ட இவ்வளைகுடா முல்லாக்கள், அப்போதே தமது திட்டத்தைத் தீட்டத் துவங்கி விட்டார்கள்.  

முபாரக் காலத்தில் வயிறு வளர்த்து வந்த நீதித் துறை, வியாபாரத் துறை சார்ந்த உயர் வர்க்கத்தினர், ஊடகங்கள், இராணுவம், மற்றும் எகிப்தின் உள்நாட்டு சக்திகளும் கூட முர்ஸியின் வெற்றியை தமக்கு அடிக்கின்ற அபாய மணியாகவே கருதின. சிறுபான்மை கோப்து இனத்தைச் சேர்ந்தவர்கள் வெளிப்படையாகவே இராணுவத்தை ஆதரித்தார்கள். 

சகோதரத்துவ அமைப்பின் வெற்றி தமது உலக ஒழுங்கு பற்றிய நோக்கில் வரைந்து வைத்திருந்த தமது திட்டத்திற்கு விரோதமாக இருந்தமையால், இஸ்ரேல், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட சக்திகளும் அச்சம் கொண்டன. எனவே, மின்சாரம், உணவு, பெற்றோல் என்பவற்றுக்கான தட்டுப்பாடும், சட்டம், ஒழுங்கும் அற்ற நிலையும், ஏனைய பிரச்சினைகளும் செயற்கையாக உருவாக்கப்பட்டன. இதன் பிறகே பாரிய ஊர்வலங்கள் ஆரம்பமாயின. இவ்விதம் இராணுவப் புரட்சி ஒன்றுக்கு சாதகமான சூழல் மிகக் கவனமாக உருவாக்கப்பட்டது.

எவ்விதம் முர்ஸி அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது என்பதை அஸாம் அல் அமீன் தனது 'வுhந புசயனெ ளுஉயஅ-ளுpinniபெ நுபலிவ'ள ஆடைவையசல ஊழரி' என்ற ஆக்கத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

'ஏப்ரல் 22, 2011 அன்று ஐக்கிய இராச்சியத்தின் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் ஸைத் தனது புலனாய்வு மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் சவூதி மன்னர் அப்துல்லாஹ்வையும், அவரது பாதுகாப்புத் துறை அதிகாரிகளையும் சந்தித்தார். அரபு வசந்தம் குறித்துக் கலந்துரையாடுவதற்கே இச்சந்திப்பு இடம்பெற்றது. 'வளைகுடா அரபு அரசுகளின் ஒத்துழைப்புக் கவுன்ஸில்' (ஊஊயுளுபு) நாடுகள் முன்கூட்டியே நகர்வொன்றை மேற்கொள்ளாவிட்டால், பிராந்தியத்தின் எந்தவொரு முடியரசாங்கமும் தப்பிப் பிழைப்பது சாத்தியமில்லை என பின் ஸைத் எச்சரித்தார். கட்டாரைத் தவிர  கவுன்ஸிலின் ஏனைய ஐந்து அங்கத்துவ நாடுகளும் அவரது அழைப்பை ஏற்றுக் கொண்டன. பின் ஸைத் மற்றும் சவூதிப் புலனாய்வுப் பிரிவின் தலைவரிடம் அரபு வசந்தத்தை எதிர்கொள்வதற்குரிய திட்டம் ஒன்றை உருவாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, ஜோர்தான் மன்னர் அப்துல்லாஹ்வை அணுகிய சவூதி மன்னர் இம்முயற்சியில் ஜோர்தானையும் இணைத்துக் கொண்டார். அதன் பிறகு இடம்பெற்ற சகல கூட்டங்களிலும் கட்டார் விலக்கி வைக்கப்பட்டது. 

நவம்பர் 2012 இளவசர் பின் ஸைத் ஊஐயு ஊடாக இரண்டு விரிவான திட்டங்களை அமெரிக்காவிற்கு சமர்ப்பித்தார். அதேவேளை முபாரக் ஆட்சிக் காலத்தின் எச்சசொச்சங்களும் தம்மை மீள் ஒழுங்கு படுத்திக் கொண்டு, பல்வேறு தரப்பினரையும் தம்மோடு இணைத்துக் கொண்டன. முபாரக்கின் அதிகாரத்தின் மையமாக இருந்த இராணுவம், புலனாய்வுப் பிரிவு, பாதுகாப்புத் துறை மற்றும் பொலிஸ் என்பவற்றில், பழைய அதிகார மையத்தின் கூறுகளைச் சுத்திகரிக்காமல், அவர்களை நல்லெண்ணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என அதிபர் முர்ஸி எளிமையாக நம்பினார். அவர்களின் விசுவாசத்தை தான் பெற்றுக்கொண்டிருப்பதாகவும் அவர் போலியாக நம்ப வைக்கப்பட்டு,  ஏமாற்றப்பட்டார். ஆனால், உண்மையில், நீதித்துறை, பொது மற்றும் தனியார் துறை சார்ந்த மதசார்பற்ற ஊடகங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்கள் என்பவை, பழைய அரசாங்கத்தின் நலன்கள், பல தசாப்த கால ஊழல் நடவடிக்கைகள், தனிப்பட்ட நலன்கள் என்பவற்றை உறுதி செய்வதற்கான வலை பின்னல்களினாலேயே ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன.    

இரண்டு முக்கிய காரணங்களால் இடம்பெற்று வந்த ஆர்ப்பாட்டங்கள் குறித்து முர்ஸியும், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பும் கவலை கொள்ளவில்லை. முதலாவது, இராணுவம் அரசாங்கத்தைக் கவிழ்க்காது என்றும், ஜனநாயக செயன்முறைக்கு விசுவாசமாக இருக்கும் என்றும் இராணுவத் தளபதி தொடர்ச்சியாக வழங்கி வந்த உறுதி மொழி. இரண்டாவது, இராணுவத்திற்கு, அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கோ, ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியைப் பதவி நீக்கவோ அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்காது என அமெரிக்க தூதுவர் ஏன் பீடர்சன் தொடர்ந்து கூறி வந்தமை.   

இதே வேளை, அல் பராடி எகிப்தியர்களுக்கு இருக்கின்ற ஒரே தெரிவு முர்ஸியைப் பதவி கவிழ்ப்பதுதான் என உலகத் தலைவர்கள் பலரை சந்தித்து, அவர்களை ஏற்றுக்கொள்ளச்  செய்தார். 'நான் ஒபாமாவுடனும், கெரியுடனும் விரிவாக முர்ஸியைக் கவிழ்ப்பதற்குரிய தேவையை விளங்கப்படுத்தி, அதனை ஏற்றுக் கொள்ளச் செய்ய முயற்சி செய்தேன்' என ஜூலை ஆரம்பத்தில் அல்பராடி பெருமையுடன் ஒப்புக் கொண்டார்.

இதற்கு மேலாக சவூதி, ஐக்கிய அரபு இராச்சியம், குவைட் என்பனவும் எகிப்தில் ஓர் இராணுவத் தலையீட்டிற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுத்தன. முர்ஸி பதவி கவிழ்க்கப்பட வேண்டும் என அல்- பராடி கோரி வந்த நிலையில், அவரை பிரதமராக நியமிக்குமாறு ஒபாமா, கெர்ரி உள்ளிட்ட மேற்குலகத் தலைவர்கள் முர்ஸிக்கும், சகோதரத்துவ அமைப்புக்கும் மே, ஜூன் மாதங்களில் அழுத்தம் வழங்கி இருந்தனர். மக்களால் தெரிவு செய்யப்படாத அல்-பராடி, இன்று எகிப்தின் உப ஜனாதிபதியாக இருக்கும் போது, ஜனநாயகத் தேர்தலில் சுதந்திரமாக எகிப்திய வாக்காளர்களால் தெரிவு செய்யப்பட்ட முர்ஸி இன்று தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 

பல ஆண்டுகளாக ஜனநாயக அடிப்படைகள், சட்டத்தின் ஆட்சி, மக்களின் ஆணையை ஏற்றுக் கொள்ளுதல் போன்ற கருத்தியல்களை ஏற்றுக் கொள்ளுமாறு இஸ்லாமியவாதிகளை கேலித் தொணியில் தாராண்மைவாதிகளும், மதச்சார்பின்மைவாதிகளும்  நிர்ப்பந்தித்து வந்தார்கள். சர்வதிகாரம், இராணுவ ஆட்சி, ஜனநாயக அடிப்படைகளையும், மனித உரிமை, தனிநபர் சுதந்திரம், சிறுபான்மையினருக்கான பாதுகாப்பு என்பவற்றைத் தியாகம் செய்கின்ற செயல்பாடுகளை இவர்கள் எச்சரித்தும் வந்தார்கள். ஜனநாயக அடிப்படைகள், மனித உரிமை, சட்டத்தின் ஆட்சி என்பவற்றை ஏற்றுக் கொள்வது வாழ்நாள் முழுவதையும் தழுவியதாக அமைய வேண்டும். ஒரு காலத்தில் இப்பெறுமாங்களை மதிப்பதும், இன்னொரு காலத்தில் அவற்றை அவமதிப்பதும் சுத்த நயவஞ்சகத்தனமாகும். 

இன்று இந்த ஜனநாயகப் பெறுமானங்கள் அனைத்தையும் குழி தோண்டிப் புதைக்கும் வகையில், தாராண்மைவாதிகள், மதச்சார்பற்றவர்கள், அமெரிக்கா, இராணுவம் மற்றும் இஸ்ரேல் என்பவற்றின் கூட்டு முயற்சி மூலம் எகிப்திய ஜனநாயக அரசாங்கம் கவிழ்க்கப்பட்டு விட்டது. மிகவும் கவலை தருகின்ற விடயம் யாதெனில், முஸ்லிம் ஆட்சியாளர்களும், இரண்டு புனிதத் தளங்களின் பாதுகாவலர் எனத் தன்னைத் தானே பிரகடனம் செய்து கொண்டுள்ள சவூதி மன்னரும் கூட இவ்வெட்ககரமான சதியின் பின்புலத்தில் இருந்தமைதான்.                                      

No comments

Powered by Blogger.