Header Ads



சுவிஸ் தூதுவருடன் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் சந்திப்பு


2013 வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுகின்ற நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான கூட்டமைப்பினர் சுவிஸ்ஸலாந்து தூதுவர் கௌ.தோமஸ் லிட்சர் அவர்களின் விஷேட அழைப்பின் பேரில் தூதுவரை கொழும்பில் அமைந்துள்ள சுவிஸதூதரகத்தில் நேற்று (06-ஆகஸ்ட் 2013) சந்துத்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.

தூதுவர் கௌ.தோமஸ் லிட்சர் அவர்கள் சுவிஸ் தேசத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் குறித்து சுருக்கமாக தெளிவுபடுத்தியதோடு 50,000ற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் சுவிஸ் தேசத்தில் வசிப்பதாக சுட்டிக்காட்டினார். இலங்கையில் அமைதி சமாதானம், அதிகாரப் பகிர்வு, சிவில் நிர்வாகம் என்பதில் தாம் அதீத அக்கறைகொண்டிருப்பதாகவும் தெரிவித்தார், வடக்கு மாகாண சபைத்தேர்தல் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறப்பான நிர்வாகத்தை வழங்குவதற்கான தொடக்கப்புள்ளியாக அமையும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.அந்தவகையில் முஸ்லிம் தரப்பினரின் அரசியல் பங்குபற்றுதல் மற்றும் நிலைப்பாடுகள் குறித்து தாம் அறிய விரும்புவதாகவும் தெரிவித்தார். இச்சந்திப்பில் தூதரகத்தின் அரசியல் பிரிவின் முதன்மைச் செயலாளர் டேவிட் விக்னடியும் உடனிருந்தார்.

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பின் சார்பாக பொறியியலாளர் எம்.எம்.அப்துர்ரஹ்மான், அஷ்-ஷெய்க் நஜா முஹம்மத், மற்றும் வடமாகாண சபைத் தேர்தல் வேட்பாளர் அஸ்மின் அய்யூப் ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள் கருத்துரைக்கும் போது

இப்போது முஸ்லிம் அரசியல் அமைப்புகளிடம் ஏற்பட்டிருக்கின்ற கூட்டமைப்பானது முஸ்லிம் சமூகத்தில் காணப்படுகின்ற பாரம்பரிய அரசியல் ஒழுங்கிலிருந்து வேறுபட்டு விழுமிய அரசியலை முதன்மைப்படுத்தி இயங்குகின்ற அமைப்பாகும், இந்த தேசத்தில் நீதி, சமாதானம், நல்லாட்சி, சமத்துவம், சகவாழ்வு, நல்லிணக்கம், வெளிப்படைத்தமைப்பு, சமூகப் பொறுப்புணர்வு போன்ற விடயங்களை முதன்மைப்படுத்தியதாக எமது அரசியல் செயற்பாடுகள் கடந்த ஒரு சில ஆண்டுகளாக முன்னெடுக்கப்படுகின்றன. மக்கள் உணர்வு பூர்வமாகவன்றி அறிவு பூர்வமாக நிலைமைகளை அறிந்துகொள்வதில் அதிக ஆர்வம் கொள்கின்றார்கள். இந்த நிலையில்தான் யுத்தத்திற்கு பின்னரான வட இலங்கையில் வாழ்கின்ற தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படவேண்டும், இதனூடாகவே அங்கே சகஜமான வாழ்வு ஏற்படுத்தப்படும். இதன் அடிப்படையில் நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பல சுற்றுப்பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருக்கின்றோம், மிகவும் நம்பிக்கை தரும் விதத்தில் குறித்த பேச்சுகள் அமைந்திருக்கின்றன. வடக்கு முஸ்லிம்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு எமது வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டன, அவை நிறைவேற்றப்படும் என்ற உத்தரவாதம் எமக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் எமது பிரதிநிதியொருவரையும் நாம் களமிறக்கியுள்ளோம். குறித்த பிரதிநிதி தேர்தலில் போதிய வாக்குகளைப் பெற்றுக் கொள்ளாதவிடத்து போனஸ் ஆசனம் குறித்த முஸ்லிம் பிரதிநிதிக்கு வழங்கப்படும் என்ற உத்தரவாதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இவற்றை நாம் மிகவும் சாதகமாக நோக்குகின்றோம். வட இலங்கையில் ஏற்படுத்தப்படும் இணக்கப்பாட்டு நிலை எதிர்காலத்தில் கிழக்கிலங்கையிலும் பல அணுகூலங்களை தமிழ்-முஸ்லிம் உறவு நிலைகளில் ஏற்படுத்தும் என நாம் எதிர்பாக்கின்றோம். 

எமது முயற்சிகளினால் எமது மக்களும், எமது தேசமும் சுபீட்சமான நன்மைகளை அடைவார்கள் என்பது எமது நம்பிக்கையாகும். நாம் இந்த தேசத்தின் நலன்களில் அக்கறைகொண்டு செயற்படுகின்றோம், முஸ்லிம்கள் எந்த நிலையிலும் தீவிரவாதத்திற்கு துணைபோனவர்கள் கிடையாது. நாம் இந்த நாட்டில் தமிழ், சிங்கள் சமூகங்களுடன் இணைந்தே வாழ விரும்புகின்றோம். இதுவே எமது செய்தியும் செயற்பாடுமாகும். இதனையே நாம் இன்று தங்களிடமும் எமது செயற்பாடுகள் குறித்து குறிப்பிடவிரும்புகின்றோம். இந்தப் பணியில் தங்களது ஒத்துழைப்புகளை நாம் எதிர்பார்க்கின்றோம் எனவும் தெரிவித்தனர். 

இறுதியாக மேற்படி சந்திப்பில் கருத்து வெளியிட்ட சுவிஸ் தூதுவர் அவர்கள் சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்க முயற்சியாக வெளிப்பட்டிருக்கும் தங்களது அரசியல் நகர்வுகள் நம்பிக்கையளிக்கின்றன. இதனால் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கமும் சகவாழ்வும் ஏற்படும், தொடர்ந்தும் தங்களது முயற்சிகள் குறித்து நாம் அக்கறையுடன் இருப்போம். எதிர்காலத்தில் பல்வேறு ஒத்துழைப்புகளை நாம் வழங்கவும் தயாராக இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

2 comments:

  1. மாஷா அல்லாஹ், 2006 ஆம் ஆண்டு காத்தான்குடியை மையமாகக் கொண்டு ஆரம்பமான நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் (PMGG) இன்று சர்வதேச அளவில் வளர்ந்து சர்வதேச அரசுகள் அழைத்துப் பேசுமளவிற்கு வளர்ந்துள்ளதைப் பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.

    இதன் வளர்ச்சிக்காக உழைத்த நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூரா சபை உறுப்பினர்களுக்கும், அதன் செயற்குழு உறுப்பினர்களுக்கும், அதன் அங்கத்தவர்களுக்கும் அல்லாஹ் இந்நன்னாளில் அருள் பாலிக்கவும், அவர்களது ஆயுளை நீடித்து அவர்களது முயற்சிகள் மென்மேலும் வெற்றி பெறவும் பிரார்த்திக்கின்றேன்.

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ், 2006 ஆம் ஆண்டு காத்தான்குடியை மையமாகக் கொண்டு ஆரம்பமான நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் (PMGG) இன்று சர்வதேச அளவில் வளர்ந்து சர்வதேச அரசுகள் அழைத்துப் பேசுமளவிற்கு வளர்ந்துள்ளதைப் பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.

    இதன் வளர்ச்சிக்காக உழைத்த நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூரா சபை உறுப்பினர்களுக்கும், அதன் செயற்குழு உறுப்பினர்களுக்கும், அதன் அங்கத்தவர்களுக்கும் அல்லாஹ் இந்நன்னாளில் அருள் பாலிக்கவும், அவர்களது ஆயுளை நீடித்து அவர்களது முயற்சிகள் மென்மேலும் வெற்றி பெறவும் பிரார்த்திக்கின்றேன்.

    ReplyDelete

Powered by Blogger.