Header Ads



பூனையின் உயிரை காக்க ரத்ததானம் செய்த நாய்

விஷம் சாப்பிட்டதால் உயிருக்கு போராடிய பூனையை காப்பாற்ற நாயின் ரத்தத்தை ஏற்றி நியூசிலாந்து டாக்டர்கள் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

நியூசிலாந்தில் உள்ள தவுரங்கா பகுதியை சேர்ந்த கிம் எட்வர்ட்ஸ் என்பவர் வீட்டில் எலி தொல்லையை சகித்துக் கொள்ள முடியாமல் கடந்த வெள்ளிக்கிழமை, வீட்டை சுற்றிலும் எலி விஷத்தை போட்டு வைத்திருந்தார்.

மீனுக்கு விரித்த வலையில் யானை விழுந்த கதையாக எலிக்கு வைத்த விஷத்தை அவர் மிகவும் பாசத்துடன் வளர்த்து வந்த ரோரி என்ற பூனை தின்று விட்டது.

சற்று நேரத்தில் விஷத்தின் வீரியம் ரோரியின் ரத்தத்தில் கலந்ததால் பயங்கரமான அவலக்குரல் எழுப்பியபடி அது துள்ளித் துடித்தது. பூனையில் செய்கையை கண்டு பதறிப்போன கிம் எட்வர்ட்ஸ், ரோரியை காரில் தூக்கிப்போட்டுக் கொண்டு கால்நடை மருத்துவரிடம் விரைந்தார்.

ரோரியின் ரத்தத்தில் விஷத்தன்மை அதிகரித்து விட்டதாக கூறிய டாக்டர், அதை காப்பாற்ற வேறு வழியே இல்லை என கைவிரித்து விட்டார்.

'எப்படியாவது ரோரியை காப்பாற்றுங்கள்' என்று கதறிய எட்வர்ட்சின் கெஞ்சலை புறக்கணிக்க முடியாத டாக்டர் கேட் ஹெல்லெர், உடனடியாக தனது தோழி மிச்சேல் விட்மோருக்கு போன் செய்தார்.

ரோரியை கட்டிலில் படுக்க வைத்து உடலில் இருந்த விஷத்தன்மை கலந்த ரத்தத்தை 'டிரான்ஸ்ஃபியூஷன்' முறையில் வெளியேற்றி, அதே வேளையில் தோழி மிச்சேல் விட்மோரின் செல்ல நாயான மேக்கி எனும் 'லாப்ரடார்' இன நாயின் ரத்தத்தை ரோரியின் உடலில் பாய்ச்சினார்.

உயிரியல் கோட்பாடுகளின்படி, நாயும் பூனையும் வெவ்வேறு விலங்கின குடும்ப வகையை சேர்ந்தவை. நாய் வகைகளில் கூட மனிதர்களுக்கு உள்ளது போல் ரத்த பிரிவுகள் (குரூப்கள்) உள்ளன.

எனினும், ஆபத்துக்கு பாவமில்லை என்று தீர்மானித்து அரியதொரு புதிய முயற்சியாக நாயின் ரத்தத்தை பூனைக்கு ஏற்றி அதை வாழ்விக்க டாக்டர் கேட் ஹெல்லர் முயற்சித்தார்.

அதிர்ஷ்டவசமாக, உயிர் பிழைத்துக் கொண்ட ரோரி, தற்போது நல்ல நிலையில் ஓடியாடி உற்சாகமாக உள்ளதாக எட்வர்ட்ஸ் கூறுகிறார்.

'நாயை போல் அது குரைப்பதில்லை... படித்துக் கொண்டிருக்கும் பேப்பரை அது பறிப்பதுமில்லை' என வேடிக்கையுடன் அவர் குறிப்பிடுகிறார்.

No comments

Powered by Blogger.