8 வகுப்பு மாணவி தவ்பீக் சுல்தானா வல்லுறவின் பின் ரயில் தண்டவாளத்தில் வீசப்பட்டார்
(ஆளூர் ஷாநவாஸ்)
இந்தியா - திருச்சியில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவி தவ்பீக் சுல்தானா கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு ரயில் தண்டவாளத்தில் வீசப்பட்டார். ரயில் மோதி நெடுந்தூரம் இழுத்துச் சென்றதால் அவரது உடலின் பெரும் பகுதி சிதைந்து உருக்குலைந்த நிலையில் மீட்டெடுக்கப் பட்டது.
சுல்தானாவை குதறிய வெறியர்களை கைது செய்வதில் காவல்துறை காட்டிய சுணக்கத்தையும், அவரது மரணம் குறித்த உண்மை நிலையை வெளிக்கொண்டு வருவதில் கடைபிடித்த பொறுப்பற்ற தன்மையையும் கண்டு அனைவரும் அதிர்ந்து போயுள்ளனர். காவல்துறை மட்டுமின்றி ஊடகங்களும் இப்பிரச்சனையில் பாரபட்சப் போக்குடன் நடந்து கொண்டது ஜனநாயக சக்திகளை கவலையடையச் செய்துள்ளது.
சுல்தானா பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதையும், படுகொலை செய்யப்பட்டதையும் மறைத்து அவரது மரணத்தை ஒரு தற்கொலை வழக்காக முடித்து விடுவதற்கு காவல்துறை முயன்றது. சுல்தானாவின் உறவினரும், முஸ்லிம் அமப்புகளும் தீவிரமாக களமிறங்கிய பிறகே வேறுவழியே இல்லாமல் குற்றவாளிகளை கண்டறியும் திசையை நோக்கி காவல்துறை பயணித்தது.
சுல்தானாவுக்கு நடந்தது என்ன என்பதை நிரூபிப்பதற்கான முக்கியச் சான்றாக அவரது உடலின் சிதைந்த பாகங்களே உள்ளன. அந்த பாகங்களை தேடுவதற்கும் காவல்துறை முனைப்பு காட்டவில்லை. அதையும் கூட அவரது உறவினர்களும், முஸ்லிம் அமைப்பினருமே தேடி அலைந்து கண்டுபிடித்தனர். அத்துடன் பெரும் போராட்டங்களையும் முன்னெடுத்தனர்.
பிரச்சனையின் வீரியத்தை உணர்ந்த பின்னர் சில இளைஞர்களைக் கைது செய்த காவல்துறை, இப்போது புதிய அவதூறுகளை ஊடகங்களின் மூலம் பரப்பிவருகிறது. அந்த அவதூறுகள் அனைத்துமே சுல்தானாவின் ஒழுக்கம் சார்ந்தவையாக உள்ளன. அவர் காதலில் விழுந்ததாகவும், காதலருடன் பல மணி நேரம் செல்போனில் பேசியுள்ளதாகவும், மேலும் இரு இளைஞர்களுடன் அவருக்கு தொடர்பு இருந்ததாகவும் வகை வகையான செய்திகள் கசிய விடப்படுகின்றன. இந்த அவதூறுகள் அனைத்தையுமே சுல்தானாவின் குடும்பத்தினரும் உறவினர்களும் மறுக்கின்றனர். காவல்துறை சரியான கோணத்தில் விசாரணையை மேற்கொள்ளவில்லை என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
டில்லி மாணவி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டபோது, அதை நாடுதழுவிய செய்தியாக்கி, பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் குறித்த விழிப்புணர்வைப் பற்ற வைத்தவர்கள் அனைவருமே சுல்தானாவின் விசயத்தில் அப்படியே அமைதியாகி விட்டனர். டில்லி கொடூரத்தை மணிக்கணக்கில் ஊடகங்களில் விவாதித்தவர்கள், இந்த திருச்சி அக்கிரமத்தை சில நொடிப்பொழுதுகள் கூட விவாதிக்க மறுக்கின்றனர்.
டில்லி மாணவி ஓடும் பேருந்தில் குதறப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டபோது, அதை அதிகாரவர்க்கமும், ஊடகங்களும் அணுகிய விதத்தையும், தர்மபுரி இளவரசனும், திருச்சி சுல்தானாவும் தண்டவாளத்தில் தூக்கி வீசப்பட்டபோது அதை ஊடகங்களும், அதிகார வர்க்கத்தினரும் கையாண்ட விதத்தையும் இங்கே ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியுள்ளது.
இளவரசன் உடல் கண்டறியப்பட்ட மறுநொடியே ஊடகங்கள் அனைத்தும் ‘இளவரசன் தற்கொலை’ என்றே செய்தி வெளியிட்டன. இளவரசன் மரணம் தற்கொலை அல்ல படுகொலைதான் என்பதற்கான சான்றுகளை நிறுவி அவரது பெற்றோர் முறையிட்டபோதும் காவல்துறை அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. இளவரசன் எழுதியதாக ஒரு கடிதத்தை வெளியிட்ட காவல்துறை, அதை தடய அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தும் முன்னரே, இளவரசன் மரணம் தற்கொலைதான் என்பதற்கு இந்தக் கடிதமே சாட்சி என்று அறிவித்தது. இளவரசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தவும், இரங்கல் கூட்டம் நடத்தவும் அனுமதி மறுத்து 144 தடையுத்தரவை பிறப்பித்த காவல்துறை, சேலத்தில் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஆடிட்டர் ரமேஷ் படுகொலையானபோது அத்வானி வந்து பெரும் மாநாடே நடத்துவதற்கு அனுமதி வழங்கி பாதுகாப்பும் அளித்தது.
இளவரசன் மரணத்தில் தலித் சமூகத்தின் குரலையும், சுல்தானா மரணத்தில் முஸ்லிம் சமூகத்தின் குரலையும் புறந்தள்ளி விட்டு, காவல்துறை சொன்னதையெல்லாம் அப்படியே வாந்தியெடுத்த ஊடகங்கள், ஆடிட்டர் ரமேஷ் மரணத்தில் மட்டும் காவல்துறை தலைவரின் அறிக்கையைப் புறந்தள்ளிவிட்டு பா.ஜ.க.வின் குரலை அப்பட்டமாக வெளிப்படுத்தின. ஆடிட்டர் ரமேஷ் கொலை குறித்த விசாரணையை காவல்துறை தொடங்கும் முன்னரே, ரமேஷை கொலை செய்தவர்கள் முஸ்லிம்கள்தான் என்று ஊடகங்கள் முன்னறிவிப்பு செய்தன.
இளவரசன் உடலருகே மது புட்டிகளை வைத்து அவனை ஒரு ஒழுக்கக் கேடான இளைஞனாக நிறுவுவதில் கவனமாக செயல்பட்ட அதிகாரவர்க்கத்தினர், இப்போது சுல்தானா விசயத்திலும் அவளை ஒரு ஒழுக்கக் கேடான பிள்ளையாக சித்தரிப்பதில் முனைப்பு காட்டுகின்றனர். ஆனால், ஆடிட்டர் ரமேஷ் மரணத்தில், அவர் இறந்த அன்றே தற்கொலை செய்து கொண்ட பா.ஜ.க பெண் நிர்வாகிக்கும் அவருக்குமான தொடர்புகள் குறித்த சந்தேகங்கள் எழுப்பப்பட்ட பிறகும் அந்தக் கோணத்தில் விசாரிக்கவும், சிந்திக்கவும் மறுக்கின்றனர்.
ஆக, இங்கே பாலியல் வல்லுறவுகளும், படுகொலைகளும் ஒரே விதமாகப் பார்க்கப்படுவதில்லை. தண்டவாளத்திலோ, சாலை ஓரங்களிலோ தூக்கி வீசப்படும் பிணங்கள் யார் என்பதைப் பொறுத்தே அது முடிவு செய்யப்படுகிறது.
eh kurradhay seydha varhalai hantu pettedu nalla tantanay kotuhka ventum
ReplyDelete