வயிற்றில் 3 குழந்தைகள் இருப்பதாக கனவு கண்ட இளைஞர் செய்த விபரீதம்..!
புதுடில்லி - டில்லியைச் சேர்ந்த இளைஞர் கனவில், வயிற்றில் குழந்தைகள் உள்ளதாகவும், அவை பசியால் துடிப்பதாகவும் தெரிந்ததை அடுத்து, தன் வயிற்றையே வெட்டி, குடலை வெளியே உருவியவர், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தூக்கத்தில் கனவு:
கிழக்கு டில்லி பகுதியில், ஓட்டல் ஒன்றில் வேலை பார்க்கிறார், நேபாளத்தைச் சேர்ந்த, 27 வயது நபர். இரண்டு நாட்களுக்கு முன், அவர் தூங்கிக் கொண்டிருந்த போது கனவு வந்துள்ளது. அதில், அந்த நபரின் வயிற்றில், மூன்று குழந்தைகளை யாரோ, கம்ப்யூட்டர் மூலம், வலி தெரியாமல், வைத்து விட்டதாகவும், அந்தக் குழந்தைகள் பசியால் துடித்துக் கொண்டிருப்பது போலவும் காட்சிகள் தோன்றின. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர், கனவிலிருந்து விடுபட்டு, வயிற்றைத் தடவிப் பார்த்த போது, வயிறு சற்றுப் பெரிதாக இருந்து உள்ளது. இதனால், கனவில் கண்டது உண்மை தான் என, கருதிய நபர், வயிற்றில் இருந்த குழந்தைகளை வெளியே எடுத்து, அவற்றைக் காப்பாற்ற நினைத்தார். இலவச ஆம்புலன்சுக்கு போன் செய்து, வீட்டை விட்டு கீழிறங்கி, தெருவுக்கு வந்தார். முன்னதாக, வயிறு நிறையத் தண்ணீர் குடித்தார். கையில் இருந்த பிளேடால், வயிற்றைக் கிழித்து, உள்ளே இருந்த குடலை வெளியே எடுத்துப் போட்டு, குழந்தைகளைத் தேடியுள்ளார். ரத்தம் வீணானதால், மயக்கமடைந்த அவர், குடலைப் பிடித்தபடி, தெருவோரத்தில் சாய்ந்தார். அந்த நேரம், ஆம்புலன்ஸ் வந்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த நபரைத் தூக்கிக் கொண்டு, மருத்துவமனை விரைந்தது.
அரசு மருத்துவமனை:
டில்லி, லால் பகதூர் சாஸ்திரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த நபரிடம், டாக்டர்கள் விசாரித்த போது, தனக்கு வந்த கனவு பற்றி கூறி, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். ""மனநிலை பாதிக்கப்பட்டவர் போல தெரியவில்லை; அவருக்கு ஏற்பட்ட கனவை உண்மை என நம்பியதால், இந்த விபரீதத்தில் ஈடுபட்டு உள்ளார். எனினும், அவர் நலமடைந்ததும், மனநல மருத்துவமனைக்கு அனுப்ப உள்ளோம்,'' என, டாக்டர் கவுரவ் சால்யா கூறினார். போலீஸ் விசாரணையில், தான் மேற்கொண்ட செயல், தவறு தான் என, ஒப்புக்கொண்ட அந்த நபர், அதற்காக வருந்துவதாகவும் கூறியுள்ளார்.
Post a Comment