Header Ads



கடையிலிருந்து தப்பிய மலைப் பாம்பு, 2 சிறுவர்களை கடித்துக்கொன்றது..!

வளர்ப்பு கடையில் இருந்து தப்பிச் சென்ற மலை பாம்பு, தூங்கிக் கொண்டிருந்த 2 சிறுவர்களை கடித்துக்கொன்ற சம்பவம் கனடாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கிழக்கு கனடாவில் உள்ள சிறிய நகரமான கேம்ப்பெல்டன் என்ற இடத்தில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் வளர்ப்பு பிராணிகள், பறவைகள், மீன் வகைகள் விற்பனை செய்யும் 'பெட் ஷாப்' உள்ளது. 

இந்த கடையின் கண்ணாடி தொட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த ஒரு மலை பாம்பு, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தொட்டியை விட்டு தப்பி வெளியே வந்தது. 

கடையின் ஜன்னல் வழியாக வெளியேறி முதல் மாடிக்கு ஊர்ந்து சென்ற பாம்பு, அங்குள்ள ஒரு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 2 சிறுவர்களை ஆக்ரோஷமாக கடித்துக் குதறி கொன்றது. 

பலியான சிறுவர்களின் பிரேதங்களை பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் வீட்டினுள் சுருண்டு கிடந்த பாம்பை வனவிலங்கு காப்பக அதிகாரிகளிடம் ஒப்படைத்து, இச்சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர். 

இச்சம்பவம் தொடர்பாக உயிரியல் நிபுணர்கள் மாறுபட்ட கருத்துகளை தெரிவிக்கின்றனர். தனக்கு ஆபத்து நேரும்போது தான் பாம்புகள் எதிராளியை தாக்கும். தூங்கிக் கொண்டிருந்த சிறுவர்களை ஆக்ரோஷமாக கடித்துக் கொன்றது என்பதை ஏற்பதறிகில்லை என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். 

பாம்புக்கு இருக்கும் பசியை பொருத்தும் இரையின் மேல் இருந்து வரும் வாசனையை பொருத்தும் சில பாம்புகள் இதைப்போன்ற தாக்குதலில் ஈடுபடலாம் என இன்னொரு தரப்பினர் வாதிடுகின்றனர். 

எனினும், பிரேத பரிசோதனை முடிவுகள் கிடைத்த பின்னரே எதையும் உறுதிபடுத்த முடியும் என போலீசார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.